My Books

என் புத்தகங்கள் ஹாலிவுட் அழைக்கிறது!

‘அமெரிக்காவின் கோடம்பாக்கம் குறித்த அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய நூல் இது. ஆங்கிலக் கனவுத் தொழிற்சாலையில் புழங்கும் பணம் முதல், கையாளப்படும் தொழில்நுட்பங்கள், மேற்கொள்ளப்படும் தொழில் நேர்த்தி வரை அனைத்து விவரங்களையும் தருகிறது.

‘ஹாலிவுட்’ என்பது என்ன? ஒரு ஊரா? பதினெட்டுப் பட்டிக்கு உட்பட்ட ஒரு பஞ்சாயத்தா? டவுனா? கலையும் கலைசார்ந்த மக்களுமா? அல்லது மாய வலையும் வலைசார்ந்த திமிங்கிலங்களுமா? காசும் கனவுகளும் கலர்க்குப்பைகளும் கலந்துகட்டிப் பெருக்கெடுத்துப் பாயும் காட்டாறா? ஃப்ளாஷ் புன்னகையும் ஃப்ளாஷ்பேக் சோகங்களும் நிறைந்த ஒரு ராட்சஸ கொடோனா?

திரைப்படத் தயாரிப்பு என்பதை ராணுவ ஒழுங்குடன் மேற்கொள்ளும் உலகம் ஹாலிவுட். பல கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, அதனைக் காட்டிலும் அதிகமான கோடிகளை அள்ளும் தொழிலில் உள்ள ரிஸ்க், அதனைச் சமாளிக்க ஹாலிவுட் சினிமாக்காரர்கள் கையாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திரைக்கதை அமைப்பில் அவர்கள் கொள்ளும் கவனம், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், தியேட்டர் சினிமா, வீடியோ சினிமா வாய்ப்புகள், நடிப்புக் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் என மிக நுணுக்கமாக ஹாலிவுட் திரையுலகம் குறித்த அத்தனை விவரங்களையும் தருவதோடு தமிழ் சினிமா தயாரிப்புக்கும் ஹாலிவுட் படத் தயாரிப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை மிகத்துல்லியமாக விவரிக்கிறது.

நூலாசிரியர் லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், அமெரிக்காவில் வசிப்பவர். Los Angeles Film School மாணவர்களுள் ஒருவர். சில தமிழ்ப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பின்னணியில் இருந்திருக்கிறார்.