Venetian Maze – 4 வலைப்பின்னல்

Bitcoin, Litecoin, Ethereum, Zcash, Dash, Ripple, Monero, Dogecoin என்று க்ரிப்டோ கரென்ஸியில் தான் எத்தனை வகை! ஒவ்வொரு நாளும் புதுப்புது க்ரிப்டோக்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சர்வதேச பொருளாதார சந்தையில் எப்படியாவது சர்வ வல்லமை படைத்த அமெரிக்க டாலரையும், பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ மற்றும் அரேபிய தினார்களையும் ஒருசேர வீழ்த்தி க்ரிப்டோ கரென்ஸி முறை வந்துவிடும் என்று நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

க்ரிப்டோ கரென்ஸி எப்படி வேலை செய்கிறது?

யார் வேண்டுமானாலும் இந்த க்ரிப்டோ ‘கரென்ஸி’யை அடிக்கலாம், விற்கலாம், வாங்கலாம், அதற்கான சந்தை ரெடி என்று சொல்கிறார்கல். ஆனால் டாலருக்கோ, பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கோ, அட, நம் இந்திய ரூபாய்க்கோ இருப்பது போல், நோட் அடிக்கும் முன் அதற்கான பின்புல மதிப்பாக தங்கம் ரிஸர்வ் வங்கியில் இருக்கிறதா? என்று கேட்டால் “அதுதாங்க இல்லை” என்ற பதிலே வரும்.

க்ரிப்டோவுக்கான மென்பொருளாக ப்ளாக்செய்ன் என்கிற சாஃப்ட்வேரைத்தான் சொல்கிறாகள். யாரும் அதைக் கன்ட்ரோல் செய்யத் தேவையில்லை. அது தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளும், யாரும் அதை ஹேக் செய்துவிட முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், இதுவும் ஒரு முகம் தெரியா பயங்கர சூதாட்டமே என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் கொஞ்சம் காசு போடலாம், எடுக்கலாம், லாபம் கூட வரலாம், ஆனால் அதை யார் பின்புலனாக இருந்து செய்கிறார்கள் என்பதெல்லாம் குழப்படியான சமாச்சாரங்களே என்பதை கோகுல் புரிந்து கொண்டான். 

வாங்குவது யார், விற்பது யார், என்ன விலையில்? என்பதெல்லாம் மிக மிக ரகசியம் என்பதால் க்ரிப்டோ கரென்ஸிகள் சட்ட விரோதமான காரியங்களுக்குப் பயன்படுகின்றன, அதற்கு வரி செலுத்தத் தேவை இல்லை, யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லை என்பதெல்லாம் சர்வதேச கருப்புப் பண சந்தையின் டார்லிங்காக க்ரிப்டோவை மாற்றி வைத்திருக்கின்றன என்பது கோகுலுக்கு வெட்டவெளிச்சமானது.

அளவுக்கதிகமான பணம் வைத்திருக்கும் அமெரிக்க பில்லியனர்களின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்பது நிழலடியாகப் புரிந்தது. சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆம் ஆத்மிக்கும் இந்தக் கொட்டடியில் வேலை இல்லை. மீறி ஏதாவது செய்ய முயன்றால் அவர்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடுகிற முட்டாள் மாதிரி மாட்டிக்கொண்டு தூக்குக் கயிற்றைத் தேட வேண்டியதுதான்.

ஆனால் சும்மா உளஉளாக்கட்டிக்கு அதை வாங்க முடியாது, முதலில் டாலரைக் கொட்டி அழுதுதான் அதை வாங்கவேண்டும், வாங்கிய பின் யாருக்கு அனுப்பி வைக்கிறோம், அவர்கள் அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியம்!

“குப்தாஜி, உங்கள் போனைக் கொடுங்கள். அடுத்த முறை அந்த ப்ளாக்மெய்ல் பார்ட்டி கூப்பிடும்போது நானே அவனை டைரக்டாக டீல் செய்து கொள்கிறேன்”, “ராதிகா, நம் கம்பெனியில் உள்ள அத்தனை கம்ப்யூட்டர்களையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, புது போன்கள், மெஷின்களுக்கு ஆர்டர் செய், ஹாங்காங்கிலிருந்து பேக்கப் டேப்களைத் தனி விமானத்தில் வரவழைக்க ஏற்பாடு செய், எல்லாப் புது மெஷின்களுக்கும் ஆன்டி வைரஸ், ஆன்டி ரேன்ஸம்வேர் இன்ஸ்டால் செய், எல்லோருடைய பாஸ்வோர்ட்களையும் தூக்கிவிட்டு புதுசாக எல்லாமே செய்” என்றுகட்டளைகள் பிறப்பித்தான்.

“ஸ்டாக் மார்க்கெட்டில் இந்த செய்தி பரவி நம் ஸ்டாக் குப்புற விழுந்து கிடக்கிறது. இதுதான் சமயம் என்று நம் மார்க்கெட் விரோதிகள் ‘Put Options’ போட்டு மேலும் மேலும் நம்மை நாசம் செய்கிறார்கள்” என்று குப்தாஜி கவலையில் புலம்பிக் கொண்டிருந்தார் “பல மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள நம்முடைய டிஃபென்ஸ் கான்ட்ராக்டுகள் கோவிந்தா தான், இதிலிருந்து எப்படி மீள்வோம்?”

அவர் கவலை அவருக்கு.

“குப்தாஜி, பயப்படத் தேவை இல்லை, எல்லாவற்றுக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கவே இருக்கிறது. இரவு பகலாக வேலை செய்து எப்படியேனும் நெட்வொர்க்கை நானும், என் டீமும் சரி செய்துவிடுவோம், கொஞ்சம் லேட் ஆகும், ஆனால் குடி முழுகிப் போய் விடவில்லை, இது ஒரு டெம்பரரி செட்பேக் தான் என்பதை எல்லோரிடமும் தெரியப் படுத்துங்கள். நீங்களே தைரியம் இழந்தால் நாங்கள் என்ன செய்வோம்?”

ராமாயணத்தில் அனுமனின் பலத்தை அவனுக்கே நினைவுபடுத்தி அவனை விஸ்வரூபம் எடுக்கவைத்த ஜாம்பவான் போல் குபதாஜியின் கண்களுக்கு கோகுல் தெரிந்தான்.

சுதாரித்துக் கொண்டு அவர் எழுந்திருக்கும்போது கம்பெனி வாசலில் ஒரு மிலிட்டரி பஸ் வந்து நின்றது. அதன் தலையில் ஏழெட்டு அண்டெனா கொம்புகளில் சில சுழன்று கொண்டே இருந்தன. ஹை டெக் பஸ்! திபுதிபுவென்று பஸ்ஸிலிருந்து பத்துப் பதினைந்து பேர் கொண்ட ஒரு குழு இறங்கியது. நீல ஜாக்கெட்டுகளில் பலர் முதுகிலும் FBI என்று எழுதி இருந்தது.

“ஹாய், ஐ யாம் மைக்கேல் கூப்பர் ஃப்ரம் FBI வெஸ்டர்ன் கமாண்ட். சிலிக்கான் வேலி கம்பெனிகள் என் ஸ்பெஷாலிடி. இவர்கள் என் நம்பர் ஒன் ஐடி டீம். இந்த ரேன்ஸம்வேர் அட்டாக் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும். யார் இங்கே இன் சார்ஜ்?”

குப்தாஜி கோகுல் பக்கம் கை காட்டினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த மாதிரியான வெளிநாட்டு தேச துரோக நடவடிக்கைகளை FBI 24 மணி நேரங்களும் பல க்ளோபல் ஸாட்டிலைட்கள் மூலமாக கவனமாகக் கண்காணித்து மானிட்டர் செய்வது பற்றியும், அதற்கான பதிலடிகளை எப்படி எல்லாம் நேர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் பேசினார்கள். நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு மைக்கேலுடைய டீம் கையோடு கொண்டுவந்திருந்த ஹைடெக் உபகரணங்களைஆங்காங்கே இணைத்து உயிர் பெறச் செய்தார்கள்.

“அல் கொய்தா மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு எதிராக தினந்தோறும் நடக்கும் ஆயிரக் கணக்கான சர்வதேச கிரிமினல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றுதான் என்றாலும், உங்கள் கம்பெனி பல டிஃபென்ஸ் கம்பெனிகளின் முதுகெலும்பாக இருப்பது எதிரிகளுக்கும் தெரிந்து போயிருப்பதும், இந்த அட்டாக்கின் மூலம் அவர்கள் என்ன செய்ய விழைகிறார்கள் என்பதும் எனக்கு சுறுசுறுப்பைத் தருகின்றன. ஜஸ்ட் அனதர் வொர்க்கிங் டே ஃபார் அஸ்” அவர் சிரித்துக்கொண்டே சொன்னாலும் இது நம்பர் ஒன் கௌன்ட்டர் இண்டெலிஜென்ஸ் டீம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

அவர்கள் மீட்டிங்களில் மூழ்கி இருந்தபோது எலெக்ட்ரிக் சைக்கிளில் சிராக் வந்து சேர்ந்ததை யாரும் கண்டு கொல்ளவில்லை. கையோடு கொண்டு வந்திருந்த செஸ் போர்டில் அவன் ஏதோ கேம் ஆடிக் கொண்டிருந்தான். ஜ்யோ மட்டும் தம்பிக்கு வென்டிங் மெஷினிலிருந்து ஏதோ வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். 

கணினிகள், ரௌட்டர்கள், போன்கள் எல்லாவற்றையும் புதுப்பிக்க ராதிகாவின் டீம் ஜரூராக வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

கோகுல் கையிலேயே வைத்துக் கொண்டிருந்த குப்தாஜியின் போன் திடீரென்று அலற ஆரம்பித்தது. அவன் அதை எல்லோரும் பார்க்கும்படியாக டேபிளில் வைத்தான்.

“போனை யாரும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் அவர்களுக்கும் வியர்த்துக் கொட்டட்டும்” என்று கோகுல் சொல்லி விட்டான்.

ஏதோ திகில் படம் பார்ப்பது போல் எல்லோருக்கும் ஒரே சஸ்பென்ஸாக இருந்தது. 

“எல்லா ரெகார்டுகளையும் அழித்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்களே” என்று குப்தாஜி பதறினார்.

“அதற்குத்தானே வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றான் கோகுல். 

மைக்கேல் கூப்பர் “Good job, You are not afraid. You are calling their bluff!” என்றான்.

“க்ரேட், கோகுல், வாட் ய மூவ்! ராணியை வைத்து ராஜாவை டைர்க்டாகக் காபந்து செய்வது போன்ற முட்டாள்தனம் எதுவுமே இருக்க முடியாது. சர்வ வல்லமை படைத்த ராணியை ஒரு யானையோ, பிஷப்போ நாசம் பண்ணி விடும், பலே கோகுல்!” -இது சிராக்.

எல்லோரும் யார் இந்தப் பொடியன், என்ன சொல்கிறான் என்று சிராக்கைப் பார்த்தார்கள்.

“எல்லாவற்றையும் அழித்து விட்டால் மேற்கொண்டு என்னதான் செய்வார்கள்? நம் ரெகார்டுகளை அழித்து ஒழிப்பதல்ல நம் எதிரிகளின் நோக்கம், அவர்களுக்குத் தேவை பணம், எக்கச்சக்கமான, கணக்கில் வராத, வங்கிகளால் கண்டுபிடிக்க முடியாத, ட்ரேஸ் பண்ண முடியாத பணம்” என்றான் கோகுல்.

“பணம் கொடுத்தாலும் அவர்கள் தொடர்ந்து நம்மை ப்ளாக்மெய்ல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? கொஞ்சம் டேஸ்ட் பார்த்துவிட்டால் மேலும் மேலும் தொடர்ந்து நம்மைத் தொல்லை செய்துகொண்டே இருப்பார்கள்” என்றான் மைக்கேல்.

குப்தாஜி எரிச்சலுடன் அவனைப் பார்த்தார்.

“உங்களுக்கு என்ன சார்? கவர்ன்மென்ட் சம்பளம், FBIனு பந்தாவான உத்தியோகம். இதுவோ ஸ்டாக் மார்க்கெட்டை நம்பி இருக்கும் ஒரு சாதாரண கம்ப்யூட்டர் கம்பெனி. எங்கள் நல்ல பெயர்தான் எங்கள் மூலதனம். இப்போதே பல க்ளையண்டுகள் “என்னய்ய நடக்குது அங்க?” என்று அலற ஆரம்பித்து விட்டார்கள். நாளைக்கே ஓட ஆரம்பித்து விடுவார்கள். க்ளையண்டுகள் இல்லாவிட்டால் நாங்கள் வெறும் சைபர்தான். நாங்கள் ஒழுங்காக வரி கட்டுகிற கம்பெனி. உங்கள் இன்டியானா ஜோன்ஸ், ஜேம்ஸ் பாண்ட் வேலைகளைக் கொஞ்சம் மூட்டை கட்டி வையுங்கள். நான் மில்லியன் டாலர்கள் க்ரிப்டோ கரென்ஸி வாங்க ஆர்டர் கொடுத்து விட்டேன். எந்த நிமிஷமும் எனக்கு ஆர்டர் ரெடி என்று மெய்ல் வந்து விடும்” 

என்னதான் இருந்தாலும் சொல்வது கம்பெனியின் சர்வ வல்லமை படைத்த நிர்வாக அதிகாரி. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. புத்தம் புது மெஷின்கள் போட்டு நெட்வொர்க்கை எல்லாம் சரி செய்து, எல்லா மெஷின்களையும், கம்ப்யூட்டர்களையும், க்ளையண்ட்களையும் காப்பாற்றி, சரிந்த ஸ்டாக் மார்க்கெட் வேல்யூவை சரி செய்து தூக்கி நிறுத்தி ….

நடக்கிற வேலையா அது? சில நொடிகளில் எல்லா செய்திகளும் அசுர வேகத்தில் மீடியாவில் பரவும் யுகம் இது. 

நேரம்!

அதுதான் மிகப் பெரிய மதிப்பு உள்ள கரென்ஸி!

“நம்மால் ஒரு வாரம், இரண்டு வாரமெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது. எதிரிகள் நம் குரல்வளையைக் கவ்வி இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரத்தம் கக்கவைத்துக் கொன்றே விடுவார்கள். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியாது. ஒரு மில்லியன் டாலர்கள் என்பது பெரிய விஷயம் தான். இருந்தாலும் நம்மால் எழுத முடியாத காசோலை இல்லை. ஸ்டாக் மார்க்கெட்டில் நம் வேல்யூ இருக்கும்போதே இதைச் செய்தால், பிற்பாடு வேறு ஏதாவது செய்து, இந்த நஷ்டத்தை நாம் சரி செய்து விடலாம். அதனால் நான் என்ன முடிவு எடுத்திருக்கிறேன் என்றால் … …”

அவர் முடிவு என்ன என்று தெரியும் முன், ஜ்யோ திடீரென்று அந்த மீட்டிங்கில் நுழைந்தாள்.

“பீட்ஸா டெலிவரி செய்தார்கள். அதில் இந்தச் செய்தி இருந்தது. மிக மிக அவசரம் என்று நினைக்கிறேன். பாருங்கள்”

ஜ்யோத்ஸ்னாவின் கையில் இருந்த துண்டுச் சீட்டில் “போனை எடுக்காதது உங்கள் மகா முட்டாள்தனம். யாருடன் விளையாடுகிறாய் என்பது உனக்கு இன்னமும் புரியவில்லை. இது ஏதோ கம்ப்யூட்டர் கேம் என்று நினைத்துக் கொண்டாய் போல. உங்கள் நெட்வொர்க் பலத்தில் ஓடும் ராக்கெட்டைன் கம்பெனிகளின் முதுகெலும்பில் கேன்ஸர் போல் ஊடுருவி விட்டோம். உதாரணமாக ஒரு சாம்பிள்தரட்டுமா? ராக்கெட்டைன் கம்பெனி. அவர்களின் ICBM ஏவுகணை ராணுவ ரகசியங்களை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் கொலை பாதக ஆயுதங்களை, அவை தற்சமயம் எங்கெங்கே இருக்கின்றன, தயாரிப்பு முறைகள், மூலப்பொருட்கள் ஸ்டாக்கில் எத்தனை, தயாரிப்பில் எத்தனை போன்ற அதி உன்னத ரகசியத் தகவல்களை சைனாவுக்கு இலவசமாக சமர்ப்பிக்கத் தயாராகி விட்டோம். உனக்கும் ஒரு காப்பி தரட்டுமா? அல்லது இலவசமாக டார்க் வெப் சைட்டில் போடட்டுமா? ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் போட்டால் உடனே அழித்து விடுவீர்களே?


முட்டாளே, மூன்றாம் உலகப் போருக்கு நீ காரணமாகி விடாதே

கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் தருகிறோம். அடுத்த போன் காலை எடு, இல்லாவிட்டால் உங்கள் அழிவு சர்வ நிச்சயம். தொலைத்து விடுவோம், ஜாக்கிரதை”

குப்தாஜி மார்பைப் பிடித்தபடி தரையில் சரிந்தார்.

போன் அடித்தது.

“Caller Unknown” என்றது போன்.

ஸாட்டிலைட் போனிலிருந்து பேசுகிறான். 

Novosibirsk என்று மானிட்டர் காட்டுகிறது. “ரஷ்யாவின் மூன்றாவது பெரும் நகரம்” என்று மைக்கேலுடைய டீமிலிருந்து யாரோ கூவினார்கள்.

(வலை இன்னும் இறுகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *