Venetian Maze -3 வலைப் பின்னல்

சற்றே பெரிய பார்சல் ஒன்றை கோகுலின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு கூரியர் விலகினான்.

பார்சலை அவசர அவசரமாகத் திறந்ததும் அதனுள் கனமான செவ்வக சமாச்சாரம் ஒன்றும், அதற்குண்டான பவர் அடாப்டர், சில ‘சிடி’க்கள், ஒரு USB குச்சி, இன்னபிற சங்கதிகள் தெரிந்தன. பண்டம் பளபளவென்ற கருப்பில் மினுக்கினாலும் பிராண்ட் நேம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ரோலர் பளேட் ஸ்ரீகிருஷ்ணா சொன்ன CIA வின் சொந்தத் தயாரிப்பாக இருக்குமோ?

“என்னது இது, எதுனா புது லாப்டாப்பா, எப்ப வாங்கின? ஏன் இங்க வந்து டெலிவரி பண்றான்?” என்றாள் ஜ்யோ.

“ம்ம்ம்?” என்றபடி அந்தக் கனமான வஸ்துவைத் திருப்பித் திருப்பிப் பார்த்த கோகுல், “இது ஒரு ரொம்பவும் அட்வான்ஸ்ட் ரௌட்டர். எக்கச்சக்கமான என்க்ரிப்ஷன் கொண்டது. ரொம்ப ரொம்ப ஸ்பீடானதும் கூட. இது பற்றி நான் படிச்சிருக்கேனே தவிர இப்பத்தான் முதன் முதலா தொட்டுப் பார்க்கறேன். அந்த ரோலர் ப்ளேடில் ஆரோகணித்து வந்தாரே, ஸ்ரீகிருஷ்ணர் அவர் எனக்குத் தந்த பரிசு! ஆனா ஏன்னுதான் இன்னும் சரியா புரியல!”

பார்சலின் அடியில் பேப்பர் பண்டிலில் சுற்றப்பட்டிருந்ததை அவன் வெளியே எடுத்ததும் ஜ்யோ வெளிறிப் போனாள்.

“என்னது இது? துப்பாக்கியா?”


“உஸ்ஸ்ஸ். மெதுவா பேசு. ஸ்டன் கன் ப்ளஸ் ரெகுலர் பிஸ்டல்னு ஏதோ சொன்னானே, அதுதான் இது. அத விடு. ஏதோ ஒரு தற்காப்புக்காக கொடுத்திருக்கான். இதுவும் எதுக்குன்னு இப்ப புரியல.

வெனிஸ் பீச்சே தம்மாத்துண்டு பீச் தான, கொஞ்ச தூரம் நடந்து போனா, அவன் பீச் மணல்ல பாசிமணி, டீ ஷர்ட்ஸ்னு கூறு கட்டிக் கடை போட்ருப்பான். இதெல்லாம் எதுக்குனு அவனையே கேட்கலாம்”

கோகுல் பேசி முடிப்பதற்குள், “இவ வேற இப்ப இங்க எதுக்கு வந்துகிட்டிருக்கா?” என்றாள் ஜ்யோ.

ஜ்யோ கை காட்டிய திசையில் ஒரு ஊபரிலிருந்து சூரிதார் துப்பட்டா ஜீன்ஸ் கோட் சகிதம் ஒரு அபத்த கலர் டிரஸ் கலவையாக ராதிகா இறங்கிக் கொண்டிருந்தாள்.

ராதிகா கோகுலின் கம்பெனியில் முக்கியமான நெட்வொர்க் மேனேஜர் பதவியில் இருப்பவள். கிட்டத்தட்ட அவனுடைய வலது கை ப்ளஸ் இடது மூளை.

“என்னப்பா கோகுல்? வீக் எண்ட் சேஷ்டையெல்லாம் இப்ப ரோட்லயே ஆரம்பிச்சுட்டாய் போல!”

ராதிகாவின் பேச்சில் பாலக்காட்டு விஷமம் தெறித்தது.

“நீயோ போனை எடுக்கலை. மொத்தக் கம்பெனி நெட்வொர்க்கும் டவுன். யாரோ ஹாக் பண்ணிட்டாங்க போல. சீஈஓ குப்தாஜி காச் மூச்னு கத்தறான். அவன் தொல்லை தாங்க முடியாம உன்னைத் தேடிண்டு வரேன்னு நானே வந்துட்டேன். எதிர்பார்த்த மாதிரியே பீச்ல தான் இருக்காய், தம்பதி சமேதரா! ஹாய் ஜ்யோ, கேம் சோ?”

அவளுடைய கிண்டலை கோகுல் கண்டுகொள்ளவில்லை. வெளிப் போர்வைக்கு அவள் சற்றே அசடு மாதிரி நடித்தாலும் உள்ளூர அவளுடைய ரேஸர் ஷார்ப் மூளை பற்றி அவனுக்குத் தெரியும்.

“ஏய் ராதிகா, உனைத்தான் நினைச்சேன். திங்க் ஆஃப் தி டெவில் அண்ட் தேர் யூ ஆர்! என்னுடைய லாப்டாப், போன், Bagpack எல்லாம் திருடு போய்விட்டது. இங்கதான், இதே ஸ்டார்பக்ஸ்ல இருந்து. சைட்வாக்ல ஏதோ ஷூட்டிங், ஒரே களேபரம்னு எட்டிப் பார்த்தேன். அதுக்குள்ள அடிச்சிட்டானுங்க”

“”லாப்டாப் போனா என்ன? எல்லாமே பாஸ்வோர்ட், ஃபிங்கர் ப்ரிண்ட் ப்ரொடெக்டட்தான? க்ளௌட் பேக்கப் உண்டே?”

“இது அதையெல்லாம் தாண்டிய ஏதோன்னு என் உள் மனசு சொல்லுது. அநேகமா இஸ்ரேலி மென்பொருள் பெகாஸஸ் யூஸ் பண்றாங்கன்னு நினைக்கறேன். சாதாரணம் ட்ராக்கிங் எதுவும் வேலை செய்யல. நான் வேலை செஞ்சிட்டிருந்தபோதுதான் இங்க வாசல்ல ஒரு ஷூட்டிங். அய்யோ அவனுக்கு என்ன ஆச்சுன்னு எட்டிப் பார்த்தபோது, யாரோ ஒரு க்ரூப் என் சாமான் எல்லாத்தயும் ஒரே நேரத்துல தூக்கிட்டாங்க”

“அய்யய்யோ, அது எப்ப நடந்ததாக்கும்?”

“என்ன ஒரு பத்துப் பதினஞ்சு நிமிஷங்கள் கூட ஆயிருக்காது. ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம்னா அதுக்குள்ள எப்படி என் லேப்டாப்ப ஹாக் பண்ணி, நெட்வொர்க்ல புகுந்து, எல்லாத்தையும் ஆஃப் பண்ணி, உல்டா பண்ணி, பயங்கர ஆர்கனைஸ்ட் க்ரைம் மாதிரி தெரியுதே. எக்கச்சக்க ப்ளானிங், ஹோம்வொர்க் பண்ணி இருக்காங்க யாரோ”

“உனக்கு யாரும் எனிமிஸ் கிடையாதே ராஜா, யார் இப்டிலாம் பண்றான்?” ஜ்யோவின் தொண்டை கவ்வியது. எந்தக் கணமும் உடைந்து அழுது விடுவாள் என்பது தெரிந்தது.

“ஹேய் ஸில்லி, இதுக்கெல்லாமா அழுவாங்க? இதெல்லாம் தொழில் முறை ரிஸ்க்ஸ். ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்ட்ற மாதிரி. லேடன்ட்ட பேசுறியா?”

அவளுக்குத் தெரிந்த வடிவேலு ஜோக் சொல்லி ஜ்யோவை அவன் ஆதுரமாக அணைத்துக் கொண்டாலும் நடந்து கொண்டிருப்பது தங்கள் கம்பெனிக்கு எதிரான ஒரு மிகப்பெரிய ஆழமான கிரிமினல் சதி என்று அவன் மூளையில் சிவப்பு விளக்கு எரியாமல் இல்லை.

எதற்காக கம்பெனி நெட்வோர்க்கை முடக்க வேண்டும்? யார் இந்த சதியின் பின்னால் இருக்கிறார்கள்? அவர்களுக்கு இதிலென்ன ஆதாயம்?

இப்போது என்ன செய்யலாம்?

கோகுலின் காலடி பார்ஸலைப் பார்த்த ராதிகா “ஏய் இதென்ன புது ரௌட்டர்? எப்ப வாங்கினாய், சொல்லவே இல்ல? நமக்கு பட்ஜெட் இருக்கா இதுக்கு?”

வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன், “சில கதவுகள் மூடிக்கொண்டவுடன் வாழ்க்கையில் வேறு சில கதவுகளும் திறக்கின்றன. நமக்குப் பிரச்னைனு நமக்குப் புரிவதற்கு முன்பே அதற்கான தீர்வு முயற்சிகளும் யாருடைய தயவிலோ அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன” என்ற கோகுலை ஒரு தினுசாகப் பார்த்தாள் ராதிகா.

“ஓவரா டெகிலா ஷாட்ஸ் அடிச்சிருப்பானோ, தத்துவ மழையா பொழியுறானே!”

“ராதிகா, இந்த ரௌட்டரை எடுத்துக்கிட்டு நேரா நம்ப டேட்டா செண்டருக்குப் போ. இல்ல, நானும் வரேன், ஜ்யோ, நீயும் வா,  நாம எல்லாரும் சேர்ந்தே போகலாம், யாரும் நெட்வொர்க்குக்குள் நுழைய வேண்டாம். நோ லாகின், நோ ஈமெய்ல், ஜஸ்ட் ஃப்ரீஸ் எவ்ரிதிங். யாரும் கம்பெனி போனைக் கூட உபயோகிக்க வேண்டாம்’

நல்லவேளையாக அவர்களுடைய ஆபீசும் வெனிஸ் கடற்கரையிலேயே தான் இருந்தது. சில பல வருடங்களாகவே ஐ டி கம்பெனிகள் கடற்கரை நகரங்களை மொய்க்க ஆரம்பித்திருப்பது கலிஃபோர்னியா ஸ்டைல். சிலிகான் சிட்டி, சிலிக்கான் பீச் என்று எல்லா ஜிலுஜிலு கடற்கரை ரியல் எஸ்டேட்டுகளையும் ஐ டி கம்பெனிகள் வளைத்துப் போட்டு கபளீகரம் செய்து விட்டிருந்தன. ஸ்டாக் மார்க்கெட் உபயத்தில் பணத்துக்கா பஞ்சம்?


எல்லோரும் கம்பெனி கான்ஃப்ரன்ஸ் ஹாலில் உடனடியாக மீட்டிங் போடுவது என்று முடிவானது. செக்யூரிடி ஆட்கள், ப்ரொக்ராமர்கள் எல்லோருக்கும் ராதிகா தன் சொந்த போனிலிருந்து உடனே ஆஜராகும்படி அவசர குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஊபரிலும் லிஃப்டிலும் சைக்கிளிலும் கம்பெனியை அடைந்தபோது எல்லோர் முகத்திலும் வீக் எண்ட் சந்தோஷங்கள் காணாமல் போயிருந்தன.

கம்பெனி வாசலிலேயே சீஈஓ குப்தாஜி டென்ஷனில் எந்நேரமும் வெடித்து விடப்போகும் பரங்கிப் பழம் போல் சிவந்து காணப்பட்டான். கண்கள் சிவந்து கிடந்தன. பீதியில் இருந்தான்.

கோகுலைத் தவிர யாருமே அவரை நெருங்கவே பயப்பட்டார்கள்.

“அடுத்து ஒரு முக்கியமான செய்தி வரும், ரெடியாக இருக்கவும் என்று ஏதோ ரேண்டமாக ஒரு மெசேஜ் வந்திருக்கிறது” என்று குப்தாஜி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய போன் மறுபடியும் “டிங்க்” என்று ஒளிர்ந்தது.

“ஏதோ ஸ்பாம் மெசேஜ் மாதிரி தெரிகிறது. ஒரே பூச்சி பூச்சியாக. வியட்நாமீஸ் எழுத்துகள் என்று நினைக்கிறேன். வாட் நான்சென்ஸ். இந்த ஸ்பாம் கம்பெனிகளுக்கு நேரம் காலமே தெரிவதில்லை. எல்லா நேரமும் …”

குப்தாஜியின் போனை உடனே அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்ட கோகுல், “இது வியட்நாமீஸ் இல்லை. ரஷ்யன்” என்றான்.

துப்பாக்கியால் சுடப்பட்டதாக கடற்கரையில் சீன் போட்ட அந்த வெனிஸ் ஹோம்லெஸ் பிச்சைக்காரனின் ரஷ்யன் உடலில் இருந்த டாட்டூக்கள் அவன் நினைவில் ஒரு கணம் வந்து மறைந்தன.


“பலே! We have a ransom note. யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் உடனேயே ஏற்பாடு செய்ய வேண்டுமாம். இல்லாவிட்டால் எல்லா கம்பெனி ரெகார்டுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்களாம். முதலில் கம்பெனியின் அதி முக்கியமான பேரோல் ரெகார்ட்ஸ். அடுத்து டிஃபென்ஸ் கான்ட்ராக்ட் டீடெய்ல்ஸ். நாம் ஒரு மிகப் பெரிய டிஃபென்ஸ் கான்ட்ராக்டர் கம்பெனி என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி அவர்களுக்கு ஏராளமாகத் தெரிந்து கொள்ள ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் போல. நான் எங்கே எப்போது காஃபி சாப்பிடுவேன் எனப்து உட்பட. என்னுடைய லாப்டாப், பேக்பாக், போன் திருட்டு எல்லாமே துல்லியமாக ப்ளான் செய்து நிறைவேற்றி இருக்கிறார்கள்”

குப்தாஜி தலையில் கை வைத்தபடிஅபத்தமாகத் தரையில் சரிந்து கம்பெனி வாசலில் உட்கார்ந்தார். 

கம்பெனி நெட்வொர்க் முழுவதும் ஏதோ Ransomware இன்ஃபெக்ட் ஆகி செமத்தியாக மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

“பணத்தை எங்கே அனுப்ப வேண்டுமாம்? அவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம்? அரிசிப் பானையிலா போட்டு வைத்திருக்கிறோம்?” என்று குப்தாஜி புலம்ப ஆரம்பித்தார்.

“அட, நீ எப்ப ரஷ்யன்லாம் கத்துண்டாய், சொல்லவே இல்ல” என்றாள் ராதிகா திடீரென்று. ஜ்யோவும் அவ்னை வியப்புடன் பார்த்தாள்.

“எனக்கு ரஷ்யன் தெரியாது. ஆனால் கூகுள் ட்ரான்ஸ்லேட் தெரியும். உடனுக்குடன் மொழி பெயர்த்துக் காட்டி விடுகிறார்களே!”

அடுத்து இன்னொரு வானிஷிங் மெசேஜும் குப்தாஜியின் போனில் ஒளிர்ந்தது.

“டாலரில் வேண்டாமாம். நோ அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர். க்ரிப்டோ கரென்ஸியில் தான் பணம் வேண்டுமாம். 8 மணி நேரம் அவகாசம் தருகிறார்களாம். போனை ஆஃப் செய்து விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்”

மொத்தமே மூன்று செகண்ட் மட்டுமே உயிர் வாழ்ந்த செய்தி உடனேயே எங்கோ கண்காணா ஈதரில் அழிந்தும் விட்டது!

‘எதிராளி யார் என்பது கொஞ்சம் கலங்கலாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. நல்லது. குப்தாஜி, நீங்கள் தான் கம்பெனியின் மூத்த நிர்வாக அதிகாரி. உடனேயே FBI ஐத் தொடர்பு கொண்டு இந்த Ransomware Attack பற்றித் தெரிவித்து விடுங்கள். நானும், ராதிகாவுடைய டீமும் வேறு சில பேக்கப், ரிப்பேர் வேலைகளை, முடிந்தால், முடிந்த அளவுக்கு ஆரம்பிக்கிறோம். ஜ்யோ, எனக்கு மாரல் சப்போர்ட்டுக்காக இங்கேயே இரு. நிறைய காஃபி, பீட்சாவுக்கும் சொல்லி விடுங்கள். கம்பெனியின் மொத்த ஐடி டீமும் இங்கே தான் இன்னும் சில நாட்களுக்கு டேரா. எல்லாரையும் இங்கே வரச் சொல்லி விடுங்கள். இனிமேல் இந்த இடம் ஒரு ‘வார் ரூம்’. இது ஒரு நிழல் யுத்தம். எதிராளி யார் என்று கண்டுபிடிப்பதே பாதி சுவாரசியம். நாம் கால் வாசி கிண்று தாண்டி விட்டோம்”

“அப்புறம் ஜ்யோ, உன் தம்பி சிராக்கையும் உடனே இங்கே வரவழி”

“அய்யோ அந்தக் கொடுக்கு வேற இங்கே எதற்கு இப்ப?”

“அந்தப் பொடியனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிவை மிக அதிகம். இப்போது சொன்னால் உனக்குப் புரியாது. He is an expert in out of the box thinking. கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடும் பதினாலு வயதிற்குட்பட்ட பொடியன்ஸிடம் தான் இந்த உலக மகா பிரச்னைகளுக்கான தீர்வு இருக்கிறது. அவர்களுக்கு நம்மைப் போல் எந்தவிதமான ‘ஹாங்க் அப்’பும் கிடையாது. துணிச்சலாகச் செயல்படுவார்கள். எதிர்த்து அடிப்பார்கள். அதுதான் இப்போதைய சூழலில் மிக மிக முக்கியம். கேள்விகள் கேட்காமல் நான் சொன்னதை மட்டும் செய்யேன், ப்ளீஸ்!”

“வரும்போது சிராக்கிடம் கொஞ்சம் கக்ராவும், டோக்ளாவையும் எடுத்துண்டு வரச் சொல் ஜ்யோ!” என்றாள் ராதிகா, “குஜராத்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் மோடி மாதிரி மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யுமாம்!”


“ராதிகா, அப்புறம் ஜோக் அடிக்கலாம். அந்தப் புது ரௌட்டரை வைத்துத் தனியாக நம் நெட்வொர்க்கில் இணைப்பு கொடுக்காமல் என்ன செய்யமுடியும், ஏதாவது ட்ராஃபிக் மானிட்டர் செய்யமுடியுமா என்று பார்”

க்ரிப்டோ கரென்ஸியை வாங்குவது எப்படி? என்ற சிந்தனையில் கோகுல் மூழ்கினான்.

(பின்னல் இறுகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *