வலைப் பின்னல் -2

மனித மூளையில் அமிக்டாலா என்றொரு குட்டியூண்டு வஸ்து இருக்கிறது. ஒரு சின்ன சைஸ் பாதாம் அளவில், ஆனால் மிகச் சிக்கலான நியூரான்களாம் ஒயரிங் செய்யப்பட்ட ஆச்சரியமானதொரு சமாச்சாரம். 
சராசரி மனித மூளையின் எடை 1250 கிராம் என்கிறார்கள். 
இந்த அமிக்டாலா சமாச்சாரம் அதில் 0.3%, அதாவது நாலே நாலு கிராம் எடை.  பல கோடிகள் செலவில் இன்று நாம் பார்க்கும் தற்கால ஹைடெக் செஸ் கம்ப்யூட்டர்களையெல்லாம் விட அதிவேகமாகச் செயல்படக்கூடிய இது ஒரு செல் கணினி. அந்த காலத்து ஆதி மனிதனிலிருந்து இன்றைய அல்ட்ரா மாடர்ன் பிரஹஸ்பதிகளான பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை எல்லோருக்குமே இது பொது. சொல்லப்போனால் காட்டு விலங்குகள், வீட்டு நாய் எல்லாவற்றுக்குமே இது உண்டு.
ஆபத்துக் காலங்களில், ஒரு எமர்ஜென்ஸியில் எடுக்கவேண்டிய “இங்கேயிருந்து உடனே ஓடு அல்லது எதிர்த்து அடி” போன்ற கட்டளைகளை அதி விரைவில் மூளைக்குப் பிறப்பிக்கும் முக்கிய நரம்பு ஸ்தலம். தற்காப்பு சம்பந்தமான அட்ரினலின், கார்டிஸால், டோபமைன் சுரப்பிகளையும் உடனுக்குடன் அது மைக்ரோ மில்லிசெகண்டில் வேலை செய்ய வைக்கிறது.
படைப்பின் ஆச்சரிய உன்னதம்.

கோகுலுக்கு ஒரே நேரத்தில் தன்னுடைய லேப்டாப், கம்ப்யூட்டர், செல்போன், பேக்பேக் எல்லாமே காணாமல் போய்விட்டதே என்று கவலைப்படுவதா அல்லது ஸ்டார்பக்ஸ் வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ‘ஹோம்லெஸ்’  பிச்சைக்காரனுக்கு என்ன ஆயிற்று என்று உதவுவதா?  என்ற குழப்பம்.
எப்படியும் போலீஸ் இப்போது வீட்டுக்குப் போக விடமாட்டார்கள். போனையாவது தேடுவோம்.
அவசரமாக யாரிடமோ கெஞ்சி, தன் நம்பருக்கு போன் செய்து பார்த்தான். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது அவனுக்கு விநோதமாகத் தெரிந்தது. அடுத்த டேபிளில் இருந்த இன்னொரு கஸ்டமரிடம் கெஞ்சி அவர்கள் லேப்டாப்பில் “Where is my Iphone?” “Where is my MacBook?” – வழக்கமான எல்லா மாமூல் கேள்விகளையும் கேட்டுப் பார்த்தான்.
லாப்டாப் பெங்களூரில் இருப்பதாகவும், செல்போன் பெர்லினில் இருப்பதாகவும் வந்த பதில்கள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும் செக் பண்ணிப் பார்த்தான். இந்த முறை போன் மதுரையில். லேப்டாப் நியூயார்க்கில். ஜ்யோவின் போன் எங்கே என்று பார்த்தால் அது காங்கோவின் தலைநகரம் கின்ஷாஸாவில்!
கம்ப்யூட்டர் என்பது சொன்னதைச் செய்யும் ஒரு கருவி மட்டுமே. சுய மூளை அல்லது இண்டெலிஜென்ஸ் என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு ஜடப் பொருளைத்தான் இன்டெல், ஆப்பிள் போன்ற கம்ப்யூட்டர் கம்பெனிகள் அதி புத்திசாலி மெஷின்கள் என்று சொல்லி நம் தலையில் கட்டிக் கல்லா கட்டுகிறார்கள். யாரோ சொல்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு ப்ரொக்ராம் அதைக் கண்ட்ரோல் செய்கிறது. அதை அந்தக் கம்ப்யூட்டர் சொல்கிறது. அவ்வளவுதான். 
பொய சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பதெல்லாம் கம்ப்யூட்டருக்குத் தெரியாது. அது தொடர்ந்து தப்புத் தப்பாக ஏதேதோ இடங்களை இஷ்டத்துக்கும் காட்டிக் கொண்டிருந்தது.
அட, Location Tracking ஐ எப்படி ஹாக் செய்தார்கள்?
இது கொஞ்சம் சிக்கலான, அதே சமயம் மிகவும் அட்வான்ஸ்ட் ‘ஹாக்கிங்’  காக இருக்குமோ?. 
அப்ப இது மாமூல் செல்போன் திருட்டு இல்லையா, திருட்டு+ஹாக்கிங்? 
சுவாரசியமான கேஸ்!


“திங்க், மிஸ்டர்! நீதானே கம்பெனி நெட்வொர்க் செக்யூரிடி சீஃப், VP வேற. உனக்கு ஆயிரக் கணக்கில் டாலர் டாலராகக் கொட்டிக் கொடுப்பதென்ன, ஸ்டாக் ஆப்ஷன்கள் என்ன? இதெல்லாம் எதிர்பாராத எமர்ஜென்ஸிகளை எதிர்த்து அதிரடியாக சமாளிக்கத்தானே?” என்று கோகுலின் மூளை அவனைக் கிண்டல் செய்தது. 
அவனுடைய எண்டோமார்ஃபின், டோபமைன் சுரப்பிகள் அதிவேகமாகச் செயல்பட ஆரம்பித்தன. 
“Sic Parvis Magna, Man! அல்ப விஷயங்களிலிருந்து தான் ஆச்சரியமான விளைவுகள் பிறக்கும். ஆர்க்கிமிடீஸ் என்ன செய்தார் தெரியுமா? நியூட்டன்? ” என்று உபன்யாசம் ஆரம்பித்த அந்தராத்மாவை ‘உஸ்ஸ்ஸ், ரொம்ப ஓட்டாத, அடங்கு!” என்று கோகுல் அதட்டினான்.

கொஞ்சம் ஃப்ரஷ் கஃபீன் வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும். கிடைத்தால் ஒரு தம் கூடப் போடலாம். ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் புகை பிடித்தால் குஷ்ட ரோகியைப் போல் பார்க்கிறார்கள். சென்னையிலாவது  555 கிடைக்கும், சில சமயம் அந்தக் கால இம்போர்டட் ப்ளேயர்ஸ் கூட.

“உஸ்ஸ். இது ஏதோ பிக்பாக்கெட் வேலை போல் தெரியவில்லை. என்னுடைய முக்கியமான பொருட்கள் அனைத்தும் ஒரே நொடியில் காணாமல் போய் இருக்கின்றன. யாரோ ப்ளான் பண்ணி மிகக் கச்சிதமாக அந்த ப்ளானை நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.

ஆனால் யார்? எதற்காக? 

க்ளௌடில் பேக்கப் இருக்குமா? இல்லை, அதையும் அபேஸ் பண்ணி விட்டார்களா? ஹாங்காங் பிராஞ்சில் அண்டர்கிரௌண்ட் தளத்தில், இருபத்தி ஓராவது பேஸ்மெண்டில் பேக்கப் டேப்கள் உண்டே?” கூப்பிடலாமா?

“ஸோஃபியா, ஒன் லார்ஜ் ப்ளாக் காஃபி. ப்ளீஸ் மேக் இட் ஃப்ரஷ் அண்ட் ஃபாஸ்ட்!”  
வாசல் களேபரத்தில் கொஞ்சம் ஆடிப் போயிருந்த வெள்ளைக்காரப் பெண் இன்னும் நீலக் கண்களில் கலவரம் விலகாமல், நடுங்கும் கைகளுடன்  தன் வேலையை இயந்திரம் போல் தடுமாற்ரத்துடன் ஆரம்பித்தாள். 

“ஓ மை காட், எத்தனை ரத்தம்! அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லவேண்டும், முட்டாள் பெண்ணே, விடியோ எடுத்தாயா, நல்ல விலைக்கு விற்கலாமே? என்பாள். ஃபேஸ்புக்கில் போடவேண்டும், எக்கச்சக்க லைக்ஸ் வரும். யூட்யூப், இன்ஸ்டாகிராம்?”
“ஸோஃபி, ஜ்யோ நம்பர் தெரியுமில்லையா? எரிச்சலோட அன்னிக்கு நீ கூட ஸேவ் பண்ணினியே? அவளைக் கொஞ்சம் சீக்கிரம் கூப்பிடேன். அர்ஜெண்ட்!”
சட்டென்று புன்னகை மறைந்து கடுப்புடன்  “சக்காளத்தி, அவ எதுக்கு இங்க இப்போ?” என்ற பாவனையுடன் ஜ்யோத்ஸ்னாவின் நம்பரை போனால் போகிறதென்று போனில் தேடி ஒத்தி எடுத்தாள்.

“ஹாய், வேர் ஈஸ் கோகுல்? ஏன் அவன் போன எடுக்கல? அப்படி என்னதான் பொம்மை பாக்கறான் ரேஸ்கல்?” என்று ஆரம்பித்தவளுக்கு ஸோஃபி பதில்மொழி சொல்வதற்குள் போனை கோகுல் வாங்கிக் கொண்டான்.


“கண்ணா, நான் சொல்றத நல்லா காது கொடுத்து உஷாரா கவனி. இந்தக் காலுக்கு அப்புறம் இந்த போனை யூஸ் பண்ணாத. இதுதான் லாஸ்ட் கால். வர்ர வழியில ஏதாவது குப்பைத் தொட்டியில வீசிடு”
“அய்யோ லூசு, அது நீ என் பர்த்டேக்கு எங்க அப்பா வாங்கிக் கொடுத்த லேடஸ்ட் ஐஃபோன்டா. உனக்குப் பைத்தியம் முத்திடுச்சா?”
“ஜ்யோ. என்னை மறுபடி மறுபடி பேசவைக்காத. ஐ யாம் இன் ய டெர்ரிபிள் எமர்ஜென்ஸி, ஐ திங்க். சிராக் யூஸ் பண்ணிட்டிருந்த சாதா நோக்கியா இருந்தா அதை எடுத்துட்டு வா. இப்போதைக்கு அது போதும். கடையில் போய் ஜோடியா புது போன்கள், சிம் கார்டுகள் வாங்கிக்கலாம்”
“பழைய நோக்கியாவா? பேப்பர் வைட்னு அதைக் கிண்டல் பண்ணுவியே? என் ஹேண்ட்பேக் அடி ஆழத்தில எங்கேயோ இருக்கலாம். நான் அங்கேதானே வந்துகிட்டிருக்கேன். இன்னமும் மூன்று நிமிஷத்தில் அங்கே இருப்  … அய்யய்யோ, என்ன ஆச்சு, ஏன் போலீஸ், ஆம்புலன்ஸ் எல்லாம்? என் காரை வழி மறிக்கிறாங்க. இப்ப சுத்தமா ப்ளாக்ட். நிறுத்திட்டாங்க. இரு நான் எங்கேயாவது இல்லீகலா பார்க் பண்ணிட்டு பின் சந்து வழியா ஓடி வரேன்.”
கோகுல் போனை கட் பண்ணி ஸோஃபியாவிடம் திருப்பிக் கொடுத்தான்.“ஸோஃபி, இங்கே CCTV இருக்கு, இல்லையா?”
“அதுதான் ஒரு வாரமா வேலை செய்யலையே. ஏதோ ஒயர் கட்டாம். கோவிட் நேரத்துல எவனும் ரிப்பேர் பண்ணக்கூட வர மாட்டேன்றான்”
“சுத்தம், சரி. எதிர்பார்த்தேன்” என்று கோகுல் காஃபிக் கடையின் வாசல் பக்கம் விரைந்தான். 
நாலைந்து போலீஸ் கார்கள், ஒரு ஃபையர் வண்டி, இரண்டு ஆம்புலன்ஸ்கள்,  நீல யூனிஃபார்ம் போட்ட போலீஸ் பட்டாளம் என்று ஒரே குழப்படியான கலாட்டா. சம்பவ இடத்தைச் சுற்றி மஞ்சள் டேப் ஒட்டி இருந்தார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை விரட்டி எதிர்சாரி ப்ளாட்ஃபாரம் பக்கம் விரட்டினார்கள். வானில் ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் வட்டமிடத் தொடங்கி இருந்தது. கிட்டத்தட்ட கடற்கரையை முத்தமிடும் அந்த வாஷிங்டன் புலவர்ட் தெருவையே மூடி விட்டார்கள்.
சம்பவத்தை யார் யார் பார்த்தது, என்ன நடந்தது என்று டிடெக்டிவ்கள் கையில் சின்ன நோட்புக்குகளுடன் மக்களிடம் பேச ஆரம்பித்திருந்தார்கள். 
“சார்லி, ஹியர் ஈஸ் அன் ஐ விட்னஸ். நோட் ஹிஸ் டீடெய்ல்ஸ்”
கன்ஷாட், ரத்தம், பேங்க் கொள்ளை என்றால் மட்டும் LAPD க்கு அலாதி சுறுசுறுப்பு வந்து விடும். 
இது பார்க்கிங் டிக்கெட் எழுதும் மசமசா போலீஸ் இல்லை. க்ரைம் சி ஐ டி! பார்த்தாலே தெரிகிறது. சாம்பிளுக்குக்கூட ஒரு தொப்பை போலீஸ் இல்லை. அரசியல்வாதிக்கு பந்தோபஸ்து, லைசென்ஸ் வேண்டுமா? எட்டு போட துட்டு ஆவும் சார், சைக்கிள் ஓட்டி யூட்யூபில் பாவ்லா காட்டும் போலீஸ் இது இல்லை.


“ஹார்லியில் வந்தவர்கள் எப்படி இருந்தார்கள்? உனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியுமா? நம்பர் நோட் பண்ண முடிந்ததா? வண்டி என்ன கலர்?”
சரமாரியான கேள்விகள். 

ஐ விட்னஸை எப்போதுமே முதல் குற்றவாளியாகப் பார்ப்பதும் உலகளாவிய போலீஸ் பொது புத்தி. 

“நீ ஏன் இங்கே காப்பி சாப்பிடவந்தாய்? எத்தனை நாளாக வருகிறாய்? தினமும் வருவாயா? என்ன பிராண்ட் காப்பி குடிப்பாய்? சுடப்பட்டவனை எத்தனை நாளாகத் தெரியும்? நண்பனா? எதிரியா? ஹோம்லெஸ் மக்கள்ஸைப் பார்த்தாலே உனக்கு எரிச்சல் வருமாமே, உண்மையா? நீ கம்யூனிஸ்டா?”

கேள்விகள், கேள்விகள், மேலும் கேள்விகள்!

கோகுல் எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னான். “ஹார்லியில் வந்த இரண்டு பேருமே வெள்ளைக்காரர்கள். ஒருவன் தாடி என்று நினைக்கிறேன். அசால்ட்டாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்கள். வண்டியிலிருந்து எச்சில் துப்புவது போல் ஒருவன் குனிந்து கொள்ள  மற்றொருவன் சுட்டான் என்று நினைக்கிறேன். ரியல் ப்ரொஃபெஷனல்ஸ்” 
“மோடிவ் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறாய்?”
“எனக்கு எப்படித் தெரியும்? சமீப காலங்களில் இந்த ஹோம்லெஸ் ஆட்களால் வெனிஸில் பெரிய பிரச்னை என்பது உண்மையே. கண்ட இடத்தில் மல, ஜலம் கழிக்கிறார்கள். எக்கச்சக்கமான போதைப் பொருட்கள் வியாபாரம் வேறு நடக்கிறது. போன வாரம் கூட எல்லாருமே நிழல் மனிதர்கள்.  அவர்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், மெக்சிகன் எல்லாமே பார்த்திருக்கிறேன். சென்ற வாரம் கூட அவர்களுக்கு எதிராக ஒரு பேரணியே நடந்தது. 

பழைய மடிசஞ்சி வெள்ளைக்கார ப்ராபர்டி ஓனர்களால் இந்த புதுத் தொல்லைக்கு ஏக எதிர்ப்பு. பீச்சில் ஜாலியாக நடக்கும் பாசிமணி, ஊசிமணி, க்ரிஸ்டல் மாலைகள், டீ ஷர்ட்கள், பெய்ண்டிங்குகள் வியாபாரமும் ரொம்பவும் படுத்து விட்டதாக சில்லறை வியாபாரிகளும், நடைபாதை ஆசாமிகளும் ஏகக் கடுப்பில் இருக்கிறார்கள். பீச்சில் டூரிஸ்ட் போக்குவரத்து மிகவும் குறைந்து விட்டது. 
ஆனால் அதற்கும் இந்தக் கருப்பு ஆசாமி சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதற்கும் தொடர்பு உண்டா. என்ன தொடர்பு, அல்லது இது ஒரு ரேண்டம் க்ரைமா என்பதையெல்லாம் தாங்கள் தான் விசாரிக்க வேண்டும்.

நான் ஒரு சாதாரண கம்ப்யூட்டர் ஆசாமி. அமெரிக்கா முழுவதிலும் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் ஸ்டார்பக்சில் இரண்டு மூன்று நாற்காலிகளில் படர்ந்து கிடக்கும் பல மில்லியன் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன். முன்பெல்லாம் ப்ஃரீ பேண்ட்விட்த் என்று வருவோம். இப்போது ஃப்ரீ தேவையில்லை. எல்லோரிடமும் 5G இருக்கிறது. இருந்தாலும் இந்தக் காஃபியும், சோஷியல் ஸ்டைலும் பழக்கமாகி விட்டது. காஃபி என்கிற பெயரில் கழுநீரைக் கொடுத்து காசு பார்க்கிறார்கள். அவ்வளவுதான். எங்கள் ஊரில் கும்பகோணம் டிகிரி காஃபி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ?” 


போலீஸ் சார்ஜெண்ட் பதில் சொல்லாமல் விலகினான்.


“அப்படியே இன்னொரு விஷயம். கிட்டத்தட்ட அதே நேரத்தில் என்னுடைய செல்போன், லேப்டாப் எல்லாமே இங்கேயிருந்து திருடு போயிருக்கின்றன. நல்லவேளை என் வாலெட் மட்டும் தப்பியது. காஃபிக்கு காசு கொடுத்து விடுவேன். திருடுபோன என் சாமான்களையும் கண்டுபிடித்துக் கொடுத்து விடுவீர்கள் அல்லவா?”


போலீஸில் யாரும் கோகுலின் கடைசி வாக்கியத்தைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.


அதற்குள் Canine (K9) Unit என்னும் போலீஸ் நாய் வண்டியும் சைரன் ஒலிக்க வந்து நின்றது. இரண்டு பொல்லாத புஸுபுஸு நாய்கள் வண்டியிலிருந்து குதித்து ஓடி, கீழே சரிந்து கிடந்தவனுடைய ‘கப்பு’ அடிக்கும் துணிமணி, மூட்டை முடிச்சுகள் எல்லாவற்ரையும் முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன. நாய் பயிற்சியாளன் அவற்றிடம் நாய் பாஷையில் என்னவோ சொல்ல அந்த டோபர்மேன் நாய்கள் ஆளுக்கொரு திசையில் ட்ரெய்னர்களைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக ஓடின. ஆனால் கொஞ்ச நேரத்தில் போன வேகத்தில் திரும்பவும் ஓடி வந்து சுருண்டு படுத்துக் கொண்டன.


“They have no clue” என்று நாய் இன் சார்ஜ் அலுத்துக் கொண்டான்.


கீழே சரிந்து கிடந்திருந்தவனுக்கு முதலுதவி செய்ய முனைந்த டீமிலிருந்து ஆச்சரியம், கோபம் கலந்த சப்தங்கள் எழுந்தன.


“பாஸ், கேப்டனைக் கூப்பிடுங்க, சீக்கிரம். திஸ் மேன் ஈஸ் வெரி மச் அலைவ் !”

“அது ரத்தமே இல்லை பாஸ், செயற்கை சினிமா ரத்தம்!”

“அவன் ஏதோ ஸ்டண்ட் பார்ட்டி போல, நம்ப எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டான் பாஸ்! ஏதாவது யூ ட்யூப் ப்ராங்க் ஷூட்டிங்னு நினைக்கறேன். புல்லெட் ப்ரூஃப் வெஸ்ட் வேற போட்ருக்கான்!”

கீழே சரிந்து கிடந்திருந்த பிச்சைக்காரன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தள்ளாடி எழுந்து கொண்டிருந்தான். செயற்கை ரத்தக் கறை அவன் துணிகளில் தோய்ந்து காய்ந்து கொண்டிருந்தது.

அவனை அரெஸ்ட் செய்து என்ன செய்ய?

ஏற்கனவே கடந்த எலெக்‌ஷனுக்குப் பிறகு நாட்டில் கருப்பர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. போளீஸ் யார் மீதாவது கை வைத்தால், பல மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட வக்கீல்கள், Black Lives Matter கும்பல் மற்றும் NAACP வக்கீல்கள். கோஷ்டி கோஷ்டியாக ரெடி. அமெரிக்கா மூன்றாம் தர உலக நாடாக வெகு வேகமாக மாறி விட்டது.

போலீஸ் தன் அசட்டுத்தனத்தை மறைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. 

கோகுல் அவனை அறையலாமா என்ற கோபத்துடன் அருகில் சென்றபோது அவனிடமிருந்து ஒரே குடி+கஞ்சா நாற்றம். 

“ஒரு தம்மு இருக்குமா பாஸ்?” என்று அவன் கோகுலைக் கேட்டான்.
கோகுல் அப்போதுதான் அவனை க்ளோஸப்பில் பார்த்தான். அவன் மார்பில், கைகளில்  கலர் கலரான ரஷ்யன் டாட்டூஸ்! 

“டேய் என்னடா இதெல்லாம்? நீ யாருடா? ஏதாவது ஜெயில் மாஃபியாவா?”

“பாஸ், நான் ஒரு சாதாரணன். என்னை ஏன் கடுப்படிக்கிறீர்கள்? என்னை விரட்டினால் எதிர் ப்ளாட்பாரத்து மெக்சிகன் ரெஸ்டாரண்ட் வாசலுக்குக் குடி பெயர்ந்து விடுவேன். அங்கேயும் எனக்கு வாடகை கிடையாது!”

“டீ முடிஞ், எல்லாம் போலாம் போலாம் போ” என்று போலீஸ் எல்லோரையும் எரிச்சலில் விரட்ட ஆரம்பித்தது.

ஹோம்லெஸ் தன் அழுக்கு மூட்டைக் குடித்தனத்துடன், கருப்பு குப்பைப் பைகளுடன் வால்மார்ட்டில், சூப்பர் மார்க்கெட்டுகளில் லவுட்டிய ஷாப்பிங் கார்ட்களை மெதுவாகத் தள்ளியபடி  எதிர் ப்ளாட்ஃபார்முக்குக் குடிபெயர ஆரம்பித்தான்.  “My Name is Nobody!” என்ற பாட்டை விசிலடித்தபடி.

பொருளில்லார்க்குக் கவலையும் இல்லை. வானமே கூரை, பூமியே தாய் மடி. கவலைகள் இல்லாத மனிதன்.

இப்போது என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் திகைத்து நின்ற கோகுலின் முன் ஒருவன் வெகுவேகமாக ரோலர் ப்ளேடில் ஸ்கேடிங் செய்தபடி முகமெல்லாம் சிரிப்புடன் வந்து நின்றான். கழுத்து கைகளிலெல்லாம் வண்ண வண்ண க்ரிஸ்டல், உருத்திராட்ச மாலைகள்!

“ஹாய் மிஸ்டர் GoKool!”

“நீ யார்ரா புதுக் கோமாளி?”

கோகுல் அவனை வெறுப்புடன் பார்த்தான்.”ஹூ ஆர் யூ? நடைபாதை வியாபாரியா? எனக்கு எதுவும் வாங்க வேண்டாம்” கோகுல் தலையில் அடித்துக் கொண்டபடி அலுத்துக் கொண்டான்.

“அதற்குள் அலுத்துக் கொள்கிறாயே? உனக்கு இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கிறது? அது கிடக்கட்டும். இங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் இரு. உனக்காக ஒரு பார்ஸல் ரெடி ஆகி வந்துகொண்டே இருக்கிறது”

“என்ன சொன்னாய்? என் பெயர் கோகுல் என்று உனக்கு எப்படித் தெரியும்? நான் உன்னைப் பார்த்ததாக எதுவும் நினைவில் இல்லையே?”

“எனக்குத் தெரியாமல் இந்த வெனிஸ் பீச் கோகுலத்தில் எதுவுமே நடப்பதில்லை, பாஸ்! ரத யாத்திரைக்கு நான் ஏற்பாடுகள் பல செய்யவேண்டும். வர்ட்டா?”

“ரத யாத்திரையா? வெய்ட், வெய்ட். உன் பெயர் என்னவென்று சொன்னாய்? நீ ஹரே ராமா, ஹரே கிருஶ்ணா கும்பலைச் சேர்ந்தவனா? அல்லது இன்னொரு வெனிஸ் பீச் கிறுக்கனா?”

“அவர்களும் என்னைச் சார்ந்தவர்கள் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். என் பெயரை நான் இன்னும் சொல்லவே இல்லையே! சிநேகமாகச் சிரித்தபடி, கோகுலின் கையில் ஏதோ பேப்பரைத் திணித்தான். உடனே கண்ணாடி வண்ண மாலைகள் குலுங்க வந்த வேகத்தில் அவன் ரோலர் ப்ளேடிங் செய்தபடி கோகுலை விட்டு விலகினான்.

“அவன் என்னடா கொடுத்துட்டுப் போறான்? ஹூ ஈஸ் ஹி?” என்றபடி நெருங்கிய ஜ்யோவுக்குப் பதில் சொல்லாமல் கோகுல் பேப்பரைப் பிரித்துப் பார்த்தான். கசங்கிய அழுக்குப் பழுப்பில் ஒரு விசிட்டிங் கார்டு.

“பார்ஸலுக்கு இங்கேயே இரு. பார்சலுக்குள் இரண்டு ஐட்டங் கள் இருக்கின்றன. ஒன்று சின்ன துப்பாக்கி வித் ஸ்டன் கன். மற்றதை நீயே புரிந்து கொள்வாய். ராதிகா வந்துகொண்டே இருக்கிறாள். ஸோஃபியாவை நம்ப வேண் டாம். மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவும். உன் ஒரே நண்பன் ஸ்ரீகிருஷ்ணா, Chief Analyst, Central Intelligence Agency” என்று அதில் பென்சிலால் கிறுக்கி இருந்தது.

கோகுலின் அசிஸ்டெண்ட் ராதிகா பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்?

(வலை இறுகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *