Venetian Maze 1 (வலைப் பின்னல்)

பரந்து விரிந்து கிடக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் மேற்கு மூலையில் ஆர்ப்பரிக்கும் பசிஃபிக் கடல் அதைத் தொட்டுத் தொட்டு முத்தமிடும் அழகே அழகு.

மார்ச் மாதமென்பதால் இன்னமும் குளிர் விடவில்லை. சோம்பேறி சூரியன் சோகையுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது சுழன்றடிக்கும் கூதல் காற்று வேறு. குப்பைத் தொட்டிகள் காற்றில் ஆடிக் கவிழ்ந்து கொண்டிருந்தன. அங்கே தான் இருக்கிறது வெனிஸ் கடற்கரை.

பக்கத்திலேயே இருக்கும் சாண்டா மோனிகா பீச் பற்றித்தான் நீங்கள் அதிகம் படித்திருப்பீர்கள். அது டூரிஸ்ட்கள் சதா மொய்க்கும் இடம். பக்கத்திலேயே இருக்கும் வெனிஸ் பீச்சை அதன் அழகு சின்னத் தங்காச்சி என்றே சொல்லலாம். குட்டியூண்டு பீச் தான். ஆனால் லோக்கல்களுக்கு அது சொர்க்கம். கைக்கடக்கமான ஆரவாரமில்லாத பஞ்சாயத்து. நெடிதுயர்ந்த பனை மரங்கள். ஏக்கர் கணக்கான வெண் மணலின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் சைக்கிள் பாதை. அர்நால்ட் ஷ்வார்ஷநெக்கர் புகழ் பீச் ஓப்பன் ஏர் ஜிம்! கட்டுமஸ்தான கருப்பர்கள் வியர்வையில் ஒளிர்ந்து கொண்டிருந்தார்கள்.

கேன்வாஸ் ஆர்டிஸ்ட்கள் ‘Legalize Heroin Now!’, ‘Is Biden Dead Already?’ என்று புரட்சி வாசகங்களுடன் டீ ஷர்ட் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஸ்டாக் மார்க்கெட்டில் எக்கச்சக்கமாகக் காசு பண்ணி முடித்து ரிட்டயர் ஆகிவிட்ட குண்டு கனவான்கள், கையில் நாய் ஆய்ப் பையுடன் ஆங்காங்கே முக்கி நிற்கும் பைரவக் கும்பலை வாக்கிங் அழைத்துச் செல்லும் வெள்ளைக் கிழ மாமிகள், ஸ்கேட் போர்டில் எம்பிக் குதிக்கும் சிறுவர்கள், பிகினியில் யோகா செய்யும் யுவதிகள், கஞ்சா அடித்து மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும் தாடிகள் நடுவே லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ஹோம்லெஸ்’ என்று எரிச்சலாக அழைக்கப்படும் பிச்சைக்காரர்களுக்கும் குறைவில்லை.

கும்பல் கும்பலாக அவர்களும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். கஞ்சா நெடி உப்புக் கடற்காற்றையும் மீறி ஆங்காங்கே கமறிக் கொண்டிருந்தது. “LET’S TAKE BACK OUR BEAUTIFUL VENICE FROM THE HOMELESS!”, “HOMELESS, GO HOME!” :SAVE VENICE NOW” என்ற வாசகங்களுடன் பேனர்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

வார இறுதியின் சோம்பேறி மாலை நேரம்.

கடற்கரையை ஒட்டிய பார்க்கிங். கடலுக்குள்ளேயே கொஞ்ச தூரம் நடந்து சென்று ஜோடிகள் போட்டோ எடுத்துக்கொள்ள வசதியான Pier என்று அழைக்கப்படும் மர மேல் பாலம். அங்கே கவனியுங்கள். மெக்சிகன் பார்கள் பக்கத்தில் வாஷிங்டன் புலவர்ட் ஆரம்பிக்குமிடத்தில் ஒரு ஸ்டார்பக்ஸ் தெரிகிறதா? அது ரொம்பப் பிரபலம். அதைக் கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். ட்ரோன் ஷாட் மாதிரி அந்தக் காப்பிக் கடைக்குள் காமெரா மூக்கை நுழைத்தீர்களென்றால், அதன் ஓர் அரையிருட்டு மூலையில் லாப்டாப், ஐஃபோன்கள் சகிதம் கடலை போட்டுக்கொண்டிருக்கும் சுருட்டை முடி தமிழ் இளைஞன் கோகுல் தான் நம் கதாநாயகன்!

ஆறடி உயரம், 32 வயதில் ஜிம் பாடியில் கோகுல் வாட்டசாட்டமாகவே இருந்தான். கருப்பு டீ ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ். பக்கத்து சீட்டிலும் உரிமையுடன் படர்ந்து கொண்டிருந்தது அவனுடைய சிவப்பு காஷ்மீர் ஸ்வெட்டர்.

அவன் அங்கே ரெகுலர் என்பது அவனுடைய சுதந்திரமான உடல் மொழியிலேயே தெரிந்தது. நம் ஊர் தெருமுக்கு நாயர் டீக் கடை மாதிரி அங்கே அவன் அக்கவுண்ட் வைத்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. Barrista என்றழைக்கப்படும் வெள்ளைக்கார வெய்ட்டர் குட்டிகள் அவனுக்கு காஃபி ரீஃபில் செய்வதே தம் வாழ்நாள் கடமை போல் அவனுடைய சிக்னலுக்காகக் காத்து வழிந்து அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

கோகுல், “ஜ்யோத்ஸ், ஏதோ புது யோகா போஸ் சொல்லித் தரேன்னியே, நானும் ஒரு புது போஸ் பத்தித்தான் படிச்சுக்கிட்டிருக்கேன், இன்னிக்கு அபார்ட்மெண்ட் எப்ப வரே?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

“போடா பொறுக்கி! நீ யாரு, எந்த மாதிரி பொம்மை பார்த்துக்கிட்டிருக்கேன்னு எனக்குத் தெரியாதா?” என்று எதிர்முனை குஜராத்தி கலந்த மழலைத் தமிழில் செல்லமாக அவனைத் திட்டியது.

“இல்லம்மா. சத்தியமா இந்த Lusty Leg Lift ன்றது யோகான்னு நினைச்சுத்தான் படிச்சுக்கிட்டிருக்கேன். அப்ப இது பதஞ்சலி எழுதினது இல்லியா?”

“நீ உருப்பட சான்ஸே இல்லடா!” மறுமுனை சிரித்துக்கொண்டது. “சரி, சரி, இந்த ஹாஸ்பிடல் வாலண்டியர் வேலை இன்னும் ஒரு மணியில முடிஞ்சிரும். ஈவ்னிங் ஃப்ரீதான். நோ கராத்தே கிளாஸ். ஸ்டூடெண்ட்ஸ் போனாப் போகட்டும்னு இன்னிக்கு லீவு விட்டுட்டேன். உன்னோட ஆஸ்தான பீடத்திலயே இரு, ஒன் அவர்ல வந்துருவேன். அப்புறம் அந்த பாரிஸ்டா குட்டி ஸோஃபியா கிட்ட ரொம்ப வழிய வேணாம். அது பூதம் மாதிரி செழிப்பா வளர்ந்துருக்கே தவிர அதுக்கு இன்னமும் பதினெட்டு கூட ஆகலை. அண்டர் ஏஜ். தொட்டுடாத. நான் ஜாமீனுக்கு வரமாட்டேன்!”

‘பொறாமை என்பது குட்டீஸ்களுடன் கூடப் பிறந்தது’ என்று கோகுல் சிரித்துக் கொண்டான். ஜ்யோத்ஸ்னா வருவதற்குள் இந்த நெட்வோர்க் மானிட்டரிங்கை முடித்து விட வேண்டும். பக்கத்து பாரில் இரண்டு டெகிலா ஷாட்ஸ் முடித்து விட்டு அவளுடன் இருட்டு சினிமா போகலாம். No Unusual Activity என்று லேப்டாப் சோம்பேறித்தனமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கோகுல் கடை வாசலை அசுவாரசியாக நோட்டம் விட்டான்.

ப்ளாட்ஃபாரத்தில் குளிருக்கு அடக்கமாகப் போர்த்தியபடி ஒரு ஹோம்லெஸ் உட்கார்ந்தபடியே ஏதோ துணி மூட்டை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான். வழக்கமாக அங்கே முடங்கிக் கிடப்பவன் தான். யாரும் அவனை விரட்டுவதுமில்லை. கடற்கரையிலும் கூட்டமில்லை. தண்ணீரில் விட்ட அபான வாயு மாதிரி ஒரு ஹார்லி டேவிட்ஸன் ஸ்போர்ட்ஸ்டர் மட்டும் ‘புரு புரு’வென்று மெலிதாகச் சத்தமிட்டபடி சுற்றிக் கொண்டிருந்தது.

“ஜ்யோத்ஸ் வர்ரதுக்குல்ள ஒரு டெகிலா ஷாட் போட்டுடலாமா?’ என்று ஆசையாகக் கேட்ட அந்தராத்மாவை “உஸ்ஸ்!” என்று கோகுல் அதட்டினான். “கிஸ் அடிக்கும்போது புடிச்சிருவா, வேண்டாம்” என்று அதட்டினான். அப்புறம் சினிமா அவுட் ஆயிரும், கோவிச்சிக்கிட்டு போயிருவா, எல்லாமே சோக சினிமா பிஜிஎம் ஆகிடும், தி எண்ட்!

லாப்டாப்பில் வாட்ஸப் ‘டிங்க்’ என்று உயிர் பெற்றது.

“ஹாய் கோகுல்” ஜ்யோத்ஸ்னாவின் குட்டித் தம்பி சிராக், “செஸ் டாட் காம் வரியா? இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்றதா இருக்கேன்”

“வேணாம்டா பொடியா, நீ அழுவ, நேத்து அஞ்சே மூவ்ல உன்னை மேட் பண்ணினது மறந்து போச்சா? ஜ்யோ கிட்ட ரொம்ப அழுதியாமே?”

“அதெல்லாம் அந்தக் காலம். இப்ப அய்யா தான் அடுத்த ப்ரக்ஞானந்தா, எக்கச்சக்கமா செஸ் ஹோம்வொர்க் பண்ணியிருக்கேன். ஓப்பனிங் ட்ராப் ரெடி. 10 சேலஞ்ச்?”

” தோத்துட்டா அக்கா கிட்ட போயி அழமாட்டேன்னு சத்தியம் பண்ணினாக்க, மே பி” என்று கோகுல் சிரித்துக்கொண்டே பதில் எழுதினான். நிஜமாகவே சிராக் ஒரு செஸ் ஜீனியஸ்தான். ஆனாலும் எட்டாம் கிளாஸ் படிக்கும் அவனிடம் அதைச் சொல்லிவிட்டால் கதையே கந்தலாகி விடும் என்பது கோகுலுக்குத் தெரியும். மச்சான் ஒரு காலத்தில் கிராண்ட்மாஸ்டர் ஆவான் என்று சொன்னாலே ஜ்யோத்ஸ் சந்தோஷமாகச் சிரிப்பாள்.

“எனக்கு இந்த கராத்தே, யோகால்லாம் வர்ர மாதிரி செஸ் வரமாட்டேன்றான்பா” என்பாள். “பெண்கள் அடுப்பூத வேண்டும், செஸ்ஸெல்லாம் உனக்கு வராது. அம்மா கிட்ட போயி டோக்ளா பண்ணக் கத்துக்க, தேப்ளா தெரியுமா? உங்கம்மா கிட்ட காண்ட்வி பண்ண கத்துக்க” என்று அவளைச் சீண்டுவான்.

தனக்குத்தானே கோகுல் சிரித்துக்கொண்டிருந்த போது தான், அந்த ஹார்லியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த இருவரும் ஹோம்லெஸ் தூங்குமூஞ்சியின் அருகே சென்று அவனைக் காலால் நெம்பி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதை கடைக்கனண்ணால் கவனித்த கோகுல் ‘ஏதோ ட்ரக் ஆர்க்யூமெண்ட்ஸ் போல. நமக்கெதற்கு வம்பு?’ என்று இன்னொரு காஃபிக்கு கௌண்டர் பக்கம் திரும்பி சைகை செய்தான். ஆர்டரைச் சிரமேற்கொண்டு ஸோஃபியா புன்னகைத்தபடி ‘கமிங் ரைட் அப், ஹான்ட்ஸம்!” என்றாள். சிராக்கை சீக்கிரம் தோற்கடிக்கலாமா அல்லது ஜ்யோத்ஸ் வரும்வரை இழுத்தடிக்கலாமா என்று யோசித்துக் கொண் டிருக்கும்போது …

ப்ளாட்பாரத்தில் படபடவென்ற துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அந்த ஹோம்லெஸ் பிச்சைக்காரன் மயங்கிச் சரிந்து கொண்டிருந்தான். ஹார்லி டேவிட்ஸன் அவசரமாக சீறிப் பாய்ந்து கிளம்பிப் போய்க் கொண்டிருந்தது.

காஃபியைக் கீழே சிந்தியபடி சோஃபியா “வாட் ஜஸ்ட் ஹாப்பெண்ட்?” என்று அலறினாள்.

அய்யய்யோ, சுட்டுட்டானுவாளா? கண்முன்னே ஒரு கொலையா? “ஓ மை காட்!” என்றபடி கோகுல் அந்த ஹோம்லெஸ்ஸை நோக்கி ஓடினான்.

“என்ன இப்பிடி அலறுற? என் ஓப்பனிங் மூவுக்கே பயந்துட்டியா?” என்ற சிராக்கின் கேள்வி அவன் காதில் சத்தியமாக விழவில்லை.

“என்ன சத்தம்? வாஸ் தட் கன் ஃபைர்? கன் ஷாட்ஸ்?” என்று கேட்டபடி அடுத்தடுத்த பார்களின் வாசல் டேபிள்களிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். யாரோ பெரிதாக அலறி அழ ஆரம்பித்தார்கள்.

வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கிழவி “ஸம் ஒன் கால் 911 ரைட் நௌ, ப்ளீஸ்” என்றபடி மயங்கி விழுந்தாள். அவளுடைய டாபர்மேன் நாய் விடாமல் குரைக்க ஆரம்பித்தது.

வாக்கிங் போய்க் கொண்டிந்த சிலர் அப்படியே சிலையாக நின்றார்கள். ஒரு குப்பைத் தொட்டியின் பின்னால் ஓடி ஒருவன் மறைந்து கொண்டான். யூட்யூபில் போஸ்ட் பண்ண சிலர் செல்போன்களை முடுக்கி விட்டார்கள்.

சில விநாடிகளில் அங்கே ஒரே களேபரம். அந்த ஹார்லி டேவிட்ஸன் தூரத்தில் ஒரு புள்ளியாக மறைந்து கொண்டிருந்தது.

கோகுல் நெருங்கியபோது அந்த ஹோம்லெஸ் தரையில் முற்றுமாகச் சாய்ந்து விழுந்திருந்தான். அவனுடைய அழுக்கு பெட்ஷீட்டின் வெளியே கருநீலச் சிவப்பில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கண்கள் செருகிக் கொண்டிருந்தன, கோகுல் தரையில் அவனருகில் உட்கார்ந்து அவனை எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.

கன் ஷாட்டுக்கு முதலுதவி செய்வது எப்படி? முதலுதவி உண்டா? ரத்தப் பெருக்கை எப்படியாவது நிறுத்து! என்று அவன் மூளை நியூரான்கள் அவனுக்குக் கட்டளையிட்டன. ஆனால் எப்படி நிறுத்துவது? அவன் எங்கே சுடப்பட்டிருக்கிறான்? இதயத்திலா? சட்டையை விலக்கிப் பார்க்கலாமா? ஏதாவது சட்டச் சிக்கல் வருமோ? இத்தனை க்லோஸ் அப்பில் சுடப்பட்டால் அவன் பிழைக்க முடியுமா? ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும்? அவன் பிழைப்பானா?

ஆங்காங்கே செல்போன்கள் உயிர் பெற்று அலற ஆரம்பித்தன. தூரத்தின் ஒரு போலீஸ் ஸ்குவாட் காரின் சைரன் ஒலிக்க ஆரம்பித்தது. வாட்சப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று சுடச்சுட செய்தி போட, போட்டோ எடுக்க ஒரு கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. “விக்டிமை மறைக்காதீங்க, கொஞ்சம் மூவ் ப்ளீஸ்” என்றான் இரக்கமில்லாத ஒருவன்.

“TMZ.com க்கு விடியோ அனுப்பினால் செம துட்டு வரும்” என்று நண்பனிடம் கிசுகிசுத்தான் ஒருவன். “கொஞ்சம் நவுறுங்க, நாங்களும் பார்க்கவேணாமா?”

“ஒரு ஹோம்லெஸ் குறைந்தால் வெனிஸ் பீச்சுக்கு நல்லது தான்” -யாரும் கேட்காமல் அபத்தமாகத் தன் கருத்தை முன் வைத்தார் ஒரு வழுக்கைக் கிழவனார். “சமீப காலங்கள்ல ப்ராபர்டி வேல்யூஸ் எவ்ளோவ் மோசமாயிருச்சு தெரியுமா?”

“யாராவது 911 கூப்பிட்டீர்களா? எங்கே என் போன்?” என்றபடி கோகுல் தன் செல்போனைத் தேடினான். காஃபி டேபிளில் இருந்த போனுக்காக அவன் ஸ்டார்பக்ஸ் உள்ளே பாய்ந்தான். “சோஃபியா, கால் தி போலீஸ்”

தன்னுடைய டேபிளை கோகுல் நெருங்கியபோது அங்கே அவனுடைய டேபிளில் இருந்த லாப்டாப், செல்போன் எதுவுமே அங்கே இப்போது இல்லை என்கிற உண்மை அவனுக்கு உறைக்கப் பல விநாடிகள் ஆகின. இயர் போன் மட்டும் டேபிளின் ஒரு மூலையின் கீழே அநாதையாக தொங்கிக்கொண்டு காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

Bagpack எங்கே?

(பின்னல் இறுகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *