ஒரு ஜுரியின் டயரி -2

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 19, 2010

’கலக்கப் போவது யாரு?’

முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான்.

காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும்.

அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் அதில் சிவப்பு மையில் எழுதியிருக்கும் வார்னிங் வாசகங்களைப் பார்த்தவுடன் உடம்பு லேசாக நடுங்குவதையும் காது மடல் சிவப்பதையும், மார் வலி வருகிறாற்போல் உணருவதையும் யாரும் மறுக்க முடியாது.

”மவனே! அப்டிய தூக்கிக் கடாசிடலாம்னு ரோசனை பண்ற? அப்டி எத்னா பண்ணின, ஆறு மாசம் ஆப்பக்களி தாண்டி உனுகு’

“இந்த நோட்டீசில் உள்ள போன் நம்பரைத் தொடர்பு கொள்ளாவிட்டால் $10,000 அபராதம்”

”ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறாதீர்”

இன்னபிற வாசகங்களால் உந்தப்பட்டு, அதுவும் அந்த ஆறு மாசம் ஆப்பக்களி + ஃபைனுக்குப் பயந்து தான் நான் முதல் ஜூரி வேலைக்குப் போனேன்.

*** *** ***

யாராவது ’பென்சிலைத் திருடிட்டான் சார், லப்பரை லவுட்டிட்டான் சார்’ ரேஞ்சுக்குத்தான் சின்ன கேஸ் வரும், மாலை வரை தாக்குப் பிடித்து, சாலமன் மாதிரி மர்மமாக ஏதாவது ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டு, சாயங்கால டிஃபனுக்கு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று தெம்பாகத்தான் நான் போனேன்.

ஜுரி செலக்‌ஷன், 12 ஜுரர்கள், 2 ஆல்டர்நேட் போன்ற விவகாரங்கள் உங்களுக்கு இப்போது தேவை இல்லை. சமயம் வரும்போது தேவையானால் சொல்கிறேன். என்னைத் தவிர வேறெந்த ஜுரருக்கும் இந்தக் கேசில் கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை என்பதே இங்கே சாராம்சம். அவனவனும் ஒரு புதுத் திசையில் திரும்பிப் பல் குத்திக் கொண்டிருந்தான்கள். எனக்கு அப்படியெல்லாம் எச்சில் பண்ணப் பிடிக்காது. தவிரவும் இங்கே என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று எனக்குள் ஓர் ஆர்வம்.

சில லக்கி ஜுரர்களுக்கு மட்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு மர்மக் கேஸ், O.J. சிம்ப்ஸன் கேஸ், மைக்கேல் ஜாக்சன் மர்டரா? என்று மாட்டும். கேஸ் முடிந்தவுடன் ஜுரர் புத்தகம் எழுதியே துட்டு பார்க்கலாம்.

ஆனால் எனக்கு வாய்த்ததென்னவோ ’கணவன் – மனைவி கேஸ். (உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன் என்றெல்லாம் டகல்பாச்சி பண்ணப் போவதில்லை. உண்மைப் பெயரைப் போட்டால் நீங்கள் என்ன ஓடிப்போய் விசாரிக்கவா போகிறீர்கள்?)

கணவன் ஜாக், மனைவி சில்வியா. “நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” மாதிரி தான் இருவரும் இளமையாக இருந்தார்கள்.

ஆனால், ”இங்கே வயசு முக்கியம் இல்லை, யுவர் ஆனர், இது ‘ஹோம் வயலென்ஸ் கேஸ்’ என்றார்கள் வக்கீல்கள் முதலில். நான் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். கட்டிப் பிடித்துக் கட்டிலிலிருந்து கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ளவேண்டிய வயதல்லவோ இது? யார் யாரிடம் வயலெண்ட் ஆக நடந்து கொண்டது?

கேசின் விபரங்கள் அவ்வப்போது அசுவாரசியமாகச் சொல்லப்பட்டன.

அந்த சில்வியாப் பெண்மணி தான் ஜாக்கைப் போட்டு சாத்தி விட்டாளாம். பலே! பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. ‘பரிஷீணா மத்யே’ என்றபடி இடையே இல்லாமலும் முன் பின் பாரத்தோடும் அழகாக இருக்கிறாளே, இதுவா அந்த ஜாக்கைப் போட்டுப் பொளந்து விட்டது? இந்த மாதிரி தே, கேசுகள் அடித்தால் தானென்ன? கடித்தான் தானென்ன? வலிக்கவே வலிக்காதே.(தேவதை கேசுங்காணும், நீர் ஏதாவது தப்பர்த்தம் செய்து கொள்ளப் போகிறீர்)

ஜாக்கும் ஆமிர் கான் மாதிரி தான் இருந்தான். வாய் ஓங்கினாலேயே சில்வியா பயந்து விடும் போல் தெரிகிறதே ஜாக், எதற்குக் கை ஓங்கினாய்? ஓங்கி உலகளந்த உத்தமன் மாதிரி இப்போது சிரித்துக்கொண்டு நிற்கிறாயே. ஒரு வேளை இதெல்லாமே இந்த வக்கீல்களின் செட்டப்போ?

நான் நான்வயலென்ஸை நம்புகிறவன். பெண்டாண்டி கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்த உடனே ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு கார் சாவியைக் கையில் வைத்துக்கொண்டு வாசல் பக்கமாக நிற்கிற தைரியசாலி.

ரத்த சேதம், காயம் என்றெல்லாம் காற்று வாக்கில் பேச்சு கேட்டதுமே எனக்கு பல்ஸ் விழ ஆரம்பித்து விட்டது.

பிறகு “வாதி-பிரதிவாதி இருவருக்குமே காயங்கள் தான். ஆனால் வெளிக்காயம் மாதிரி உட்காயம்” என்று வக்கீல்கள் சொதப்பினார்கள். நம்பும்படியாக இல்லை.

எனக்கு சரியாக கேஸ் பிடிபடுவதற்குள் லஞ்ச் என்று சொல்லி விட்டார்கள். எனக்குப் பசியே இல்லை. லஞ்ச் நேரத்தில் கேஸ் கட்டை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று வக்கீல்களிடம் சொல்லி, நான் ஏகாதசிப் பட்டினியாக ஒரு மரத்தடியில் சாய்ந்து கேஸ் கட்டைப் படிக்கலானேன்.

*** *** ***

அதிவேக அவசர அமெரிக்க வாழ்க்கையின் பல நிர்ப்பந்தங்கள் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் அல்லது ருசித்திருப்பீர்கள்.

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக ஆபீஸ் ஓடவேண்டிய நிர்ப்பந்தம். காரிலேயே 60 மைல் வேகத்தில் பல பேர் ஷேவ் செய்துகொள்வது, லிப்ஸ்டிக், முகப்பூச்சு, பின்னல், மொட்டை எல்லாமே அவசரத்தில் தான் முடிக்க நேரிடும்.

கேசின் உள் வர்த்தமானம் என்னவென்றால், வழக்கமாக சில்வியா தான் தினமும் காஃபி போட்டு வைப்பாளாம். அவசர அவசரமாகக் காலைச் சிற்றுண்டி என்று பெயரில் எதையாவது தின்று விட்டு மறக்காமல் காஃபி மட்டுமாவது குடித்தபடி இருவருமே வேலைக்கு ஓடி விடுவார்களாம்.

இதிலே என்ன ஹோம் வயலென்ஸ் மண்ணாங்கட்டி என்று கேட்கிறீர்களா? எனக்கும் கொட்டாவி வந்தது. பொறுமை, பொறுமை.

திங்கள் முதல் வெள்ளி வரை வழக்கமான இதே ரொடீன். சனி, ஞாயிறுகளில் தான் அவர்களிடம் இந்த ‘கலக்கப் போவது யாரு?’ சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

தினம் தினம் தான் நான் காஃபி போட்டுத் தொலைக்கிறேனே, சனி ஞாயிறுகளிலாவது ஜாக் அதைக் கலந்தாலென்ன, நான் எக்ஸ்ட்ராவாக ஒரு பத்து நிமிஷம் தூங்குவேனே என்பது சில்வியாயின் வாதம். ஜாலியாகத்தான் அது ஆரம்பித்திருக்கிறது.

”நீதான் பிரமாதமாகக் காஃபி போடுகிறாயே, நான் போட்டால் கஷாயம் மாதிரி தானே வந்து தொலைக்கிறது. அதனால் நீயே போட்டு விடேன் இன்றும் என்றும்” என்பது ஜாக்கின் வாதம். அதிலுமொரு நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், வாதம் வாக்கு வாதமாகி, விவகாரமாகி, ஒரு சனிக்கிழமைக் காலை 9-10.30 நல்ல முகூர்த்த ராகு காலத்தில் கிச்சனில் வார்த்தை தடித்திருக்கிறது. விஜய் டீவியின் Boys Vs Girls மாதிரி ’போடா டேய், போடி டேய்’ ஆகியிருக்கிறது. பிறகு காஃபித்தூள், ஃபில்டர், வெந்நீர், டபரா, டம்ளர் எல்லாம் ’அவ்தார்’ மாதிரி ஆகாயத்தில் பறந்திருக்கிறது. இவன் கத்த, அவள் கத்த, இவள் வீச, அவன் வீச, இவள் அடிக்க, அவன் தடுக்க, இப்போது போலீஸ், கோர்ட் கேஸ், ஹோம் வயலென்ஸ் கேஸ் என்று ஆகி என் கழுத்தை அறுக்கும் ஜூரி டூட்டி வரையில் நடந்திருக்கிறது.

முழுவதும் படித்து முடித்த எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

லஞ்சுக்குப் பிறகு கோர்ட் கூடியதும் நான் ஜட்ஜிடம் சில வார்த்தைகள் தனிமையில் பேசலாமா என்று கேட்டேன்.

“நீ யாரடா அற்பப் பதர்?” என்கிற மாதிரி முதலில் என்னைப் பார்த்த தொண்டு கிழ வெள்ளை ஜட்ஜிடம் கை கட்டி வாய் பொத்தி பவ்யமாகச் சில விஷயங்கள் சொன்னதும், “ஓ, அப்படியா?!” என்று புருவத்தை உயர்த்தினார். நானும் பதிலுக்குப் புருவத்தை உயர்த்தி என் நெற்றியை ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினேன்.

ஜட்ஜ் சிரித்தார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல், இரண்டு சைடு வக்கீல்களும் “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை, யுவர் லொள், ஆனர் லொள்” என்று கோரசாக ஆரம்பிக்க, அவர்கள் ”உஷ்!” என்று கையமர்த்தப்பட்டனர்.

ஒரு தனி அறையில் நான், ஜாக், சில்வியா!

“உங்கள் தனிப்பட்ட கேசில் நான் தலையிடுவதாக நீங்கள் நினைக்கக்கூடாது. இதே மாதிரி கேஸ் ஒன்றில் நான் ஏற்கனவே அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் ஜட்ஜ் ஐயாவிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி …”

“கம் டு தி பாயிண்ட். ஹி ஈஸ் ய ப்ரூட்” என்றாள் சில்வியா கோபமாக.

“இருவருமே என் நெற்றியில் இருக்கும் வடுவைப் பாருங்கள்” என்றேன் நான்.

‘பேஷ்! உன்னையும் ஒரு கிராதகி டம்ளரால் அடித்தாளா? டம்ளரா, டவராவா? உருண்டு வரும் டம்ளரைக்கூடப் பிடித்து விடலாம். சுழன்று வரும் டவராவைப் பிடிக்கவே முடியாது தெரியுமா?” ஜாக் புலம்பினான்.

”இவன் எதற்குமே லாயக்கில்லை. அதற்கும் சேர்த்து” என்றாள் சில்வியா. வேறு எதற்கெல்லாம் என்று கேட்க நினைத்து, வேண்டாமென்று முடிவு பண்ணி, இருவரையும் கை அமர்த்திய பிறகு நான் சொன்னேன். “சில விஷயங்களில் பெண்கள் சமர்த்தர்கள். சில விஷயங்களில் ஆண்கள் சமர்த்தர்கள். எங்கள் வீட்டில் என் மனைவி மாதிரி நானும் காஃபி பொடுகிறேன் பேர்வழி என்று ஒரு தடவை நான் ஆரம்பித்து அந்த ஃபில்டரில் காஃபியை எங்கே வைத்துத் திணிப்பது என்று தெரியாமல் நான் திண்டாடிக் கடைசியில் அரை மணி நேரத்தில் ஒரு சொட்டு டிகாக்‌ஷன் கூட ஏன் இறங்கவில்லை என்று நான் குனிந்து கூராய்ச்சி பண்ணப் போய், அந்த நேரத்தில் ஃபில்டரில் மேல் மூடி நீராவி வேகத்தில் பொத்துக்கொண்டு என் நெற்றியில் அடித்து அதனால் ஏற்பட்ட விழுப்புண் இது. அன்றிலிருந்து நான் கறிகாய் கட்டிங், அவள் காஃபி என்று பொறுப்பாக சமையலறை வேலைகளைப் பிரித்துக் கொண்டு விட்டோம். இப்போது எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. என் மனைவி மாதிரி ஒருத்தரும் காஃபி போடமுடியாது. என்னை மாதிரி ஒரு பயலும் அதை சப்புக்கொட்டிக் குடிக்க முடியாது. ஐயாம் ஷ்யூர் சில்வியா ஈஸ் ய க்ரேட் குக்”

கொஞ்ச நேரம் மௌனம். யாரோ விசும்புவது மாதிரி என் காதில் விழுந்தது.

“சில்வியா மாதிரி ஒருத்தராலும் காஃபி போட முடியாது” என்றான் ஜாக்.

பத்து செகண்ட் மௌனம்.

“ஜாக் பிரமாதமாக கிச்சன் வேலை செய்வான். மெக்சிகோவிலிருந்து வாங்கி வந்த முழுப் பலாப்பழத்தைக் கூட ஒரு தடவை தானே நறுக்கி விட்டான்” என்றாள் அவள் சிவந்த மூக்குடன்.

“உங்கள் சாதாரண சண்டையை வக்கீல்கள் கண், காது, மூக்கு, உட்காயம் வைத்து ஜோடனை செய்து விட்டார்கள். ஜட்ஜோ மகா கிழவர். சீட்டில் சாய்ந்து தான் உட்காருகிறார். ஏதாவது உடல் உபாய மூலாதார எரிச்சலில், ஒரு பெரிய அமௌண்டை ஜீவனாம்சம், பரிகாரம் என்று சொல்லி வைத்தால் அதில் படிக்குப் பாதி வக்கீல்கள் கபளீகரம் செய்து விடுவார்கள், தெரியுமில்லையா? அதுவும் நீங்கள் இரண்டு பேருமே நல்ல வேலையில் இருப்பவர்கள். உங்களுக்கு இந்தக் கொடுமையெல்லாம் தேவையா?”

இருவருமே தலையசைத்து ”நோ” என்று ஆமோதித்தார்கள்.

“இரண்டு பேரும் என்னோடு வாருங்கள், ஜட்ஜிடம்” என்றேன்.

“யுவர் ஆனர்!” என்று ரெய்ன்கோட் போட்ட விஜய்காந்த் மாதிரி என் ஓவர்கோட்டை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு வசனம் பேச ஆரம்பித்தேன். இந்த மாதிரி ஒரு கோர்ட் சீனில் ஃபிலிம் காட்டவேண்டுமென்பது என் வெகு நாளைய ஆசை. நெற்றியைப் பரபரவென்று தேய்த்து விட்டுக் கொண்டேன். பூட்ஸ் காலால் படீரென்று சப்தம் எழுப்பினேன். சடனாகத் திரும்பி, ஒரு எஃபெக்டுக்காகக் கூரையை நோக்கி ஒரு லுக் விட்டபடி ஆரம்பித்தேன்.

“ஆண்களால் ஒழுங்காக சமையல் மட்டுமல்ல, கேவலம் ஒரு வாய் காஃபி கூடப் போட முடியாது என்பதை நான் 5000 வருஷத்துக்கு முந்தைய ஆதி சங்கரர் மேற்கோளுடன் இங்கே இச்சபையில் நிறுவப் போகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே”

“திஸ் ஈஸ் ஹைலி அன்யூஷுவல் யுவர் ஆனர்”

“உஷ், கவனிங்கப்பா! எக்ஸ்பர்ட் ஜூரர்”

“நீங்களெல்லாம் மாடு மேய்க்கக் கற்றுக்கொள்வதற்கு ஐயாயிரம் வருட முன்பே நாங்கள் இதிகாசங்கள், காவியங்கள் படைத்து இலக்கியத்திலே திளைத்திருந்தோம். சௌந்தர்ய லஹரி என்ற ஒரு மகா காவியம் எங்கள் ஊரில் இருக்கிறது. அதிலே ஒரு இடத்தில் ஆதி சங்கரர் “நரம் வர்ஷியாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம்” என்கிறார்.

வக்கீல்களென்ன, டவாலி, க்ளார்க், மற்ற ஜுரர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள்- எல்லோருமே அங்கே பேச்சடைத்து பேஸ்தடித்து நின்றார்கள். ஏசி மெஷின் கூட சப்தத்தைத் தானாகவே குறைத்துக் கொண்டது. திருவிளையாடல் படத்தில் ‘நான் அசைந்தால் அசையும்’ பாட்டின்போது ஒரு ஃப்ரீஸ் வருமே, அதே எஃபெக்ட்.

“உங்களுக்கெல்லாம் சம்ஸ்கிருதம் வராதென்பது எனக்குத் தெரியாதா? பொழிப்புரையும் நானே சொல்லி விடுகிறேன். நரம் என்றால் மனிதர்கள். வர்ஷீயாம்ஸம் என்றால் மிகவும் வயதான கெழ போல்டு சொங்கிகள். நயன விரஸமென்றால் கண்ணாலே பார்க்கவும் சகிக்காத கண்றாவி. ’நர்மஸு ஜடம்’- நோட் தி பாயிண்ட், யுவர் ஆனர்! இங்கே தான் மிக முக்கியமான லா பாயிண்ட் அண்ட் எவிடென்ஸ் இருக்கிறது. எங்கள் ஊரில் நரசூஸ் காஃபி என்று ஒன்று இருக்கிறது. நெஸ்கஃபே இருக்கிறது. அதைத்தான் ஒன்றொன்றாக லிஸ்ட் போடாமல் ஆதி சங்கரர் கொஞ்சம் இலக்கியத் தரமாக நர்மஸு என்று கொஞ்சுகிறார். ரொம்ப சிம்பிளான அந்த ரெடிமேட் காஃபிகளைக் கூட ஒழுங்காகக் கலக்கத் தெரியாமல் எங்கள் ஊர் ஆண்கள் மகா கோரமான கலரில் அதைக் கலந்து, அருவருப்பான டேஸ்டில், பார்க்கவும் சகிக்காமல், சர்க்கரையைக் கொட்டித் தொலைத்து, அதையும் ஒரு பயலும் குடிக்கவும் முடியாமல், தடுமாறி, அப்படியே காலப்போக்கில் கிழபோல்டாகி நரை கூடிக் கிழப் பருவமெய்திப் பின் கூற்றுக்கு இரையென மாயும் பலப்பல வேடிக்கை மனிதர்களாகி விட்டார்கள்”

நான் தொடர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

“அதனால் யுவர் ஆனர்! நான் இப்பொழுது என்ன சொல்ல வருகிறேனென்றால …” என்று நான் முடிக்க நினைத்துக் கீழே பார்த்தால், அங்கே ஒரு பயலும் இல்லை.

டோட்டல் சைலன்ஸ்!

கேஸை வாபஸ் பண்ணிக்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோரும்- ஜட்ஜ், டவாலி உட்பட- தலை தெறித்து ஓடிப்போய் விட்டார்களாம்.

டயரியின் அடுத்த பக்கம்: ’நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்) படம்: நன்றி, இட்லிவடை!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 19, 2010

7 Comments

டகிள் பாட்சா  on January 19th, 2010

கலக்கல் தல. ரொம்ப நாளைக்கப்பறம் பழய glorious formக்கு வந்துருக்கிங்க.

எல்லே ராமேஷு ப்ளாகோஹம் ஜூரி போஸ்டிங் படானனம். ,துரிதம் கமெண்டிங் கரனானாம் ஜன்ம துக்க விநாஸனம் ததா சர்வ பாப விமோசனம்

ராம்கி  on January 19th, 2010

வாழ்த்த வயசில்லை.. வணங்குகிறேன்

RAMA  on January 19th, 2010

Ram, Ram Ram, you are the limit.Great wit man, got a stomache from laughing, reminds me of some stories by crazy Mohan!
waiting for more of your jury adventure
Rama

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on January 25th, 2010

டகிள், ராம்கி, ராமா, பின்னூட்டங்கள், வாழ்த்துகளுக்கு நன்றி!

லலிதா ராம்  on January 27th, 2010

தல,

சேவாக் கணக்கா சாத்தறீங்க. அடுத்த ஸ்லாக் ஓவருக்கு வெயிட்டிங்!

butterfly Surya  on February 3rd, 2010

வாவ்.. பின்றீங்க ராம். இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்.

Padma  on February 15th, 2010

Usually they dont let the jurors talk to defendant.plaintiff (here in NJ). Is this real?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *