ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 5, 2010

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா வரை சென்று வந்த என் சாதனை கின்னஸில் பொறிக்கப்படுவதாகவும் நான் ஒரு பின்னிரவில் பியர் மயக்கத்தில் கனவு கண்டேன்.

”அப்படியா? சொல்லவே இல்லையே!” என்று வாய் பிளப்பவர்கள் இப்போதாவது என் அளப்பரிய அருமை, பெருமை, நடிப்புத் திறமை …வேண்டாம், இத்தோடு நிப்பாட்டிக்கொண்டு ப்ளாக் தலைப்பு மேட்டருக்குள் நுழைகிறேன்.

படம் பிரமாதமாக வந்திருப்பது எனக்குத் தெரியும். படத்தை இன்னமும் முழுதாகப் பார்க்காவிட்டாலும், சில பல பகுதிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். சரத், ஷ்ரேயா, இயக்குனர் ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்று எல்லோருடைய அசுர உழைப்பையும், அசாதாரண திறமைகளையும் அருகாமையில் நின்று பார்த்தவன் நான். (என்னுடைய அசுர அல்லது தேவ உழைப்பைப் பற்றி நானே எழுதிக்கொள்ள இந்த பாழாய்ப்போன நாணம் தடுக்கிறது.)

முதலில் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்றார்கள். அப்புறம் செப்டம்பர், அப்புறம் அக்டோபர். பின்னர், “இல்லை இல்லை. தீபாவளிக்குக் கண்டிப்பாக” என்றார்கள். ஊஹும். அதுவும் நடக்கவில்லை. அப்புறம் பெரிய கார்த்திகை, சின்னக் கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம் என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதில் பலருக்கும் மன வருத்தம்.

என் அகில உலக ரசிகர்கள் கொதித்தெழுந்ததை நான் உண்ணும்விரதம் மேற்கொண்டு அடக்க நேர்ந்தது. ”தற்கொலையெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது. பண்ணிக் கொண்டால் அப்புறம் படம் சரியாகத் தெரியாது. பொறுமையாக இருங்கள்” என்று என் ரசிகமணிகளை நான் தடுத்தாட்கொண்டேன்.

கடைசியாக இயக்குனர் K. S. ரவிக்குமாரிடமிருந்தே நான் கேள்விப்பட்ட நம்பகமான ரிலீஸ் தேதி ஜனவரி 14! கடைசி கட்ட எடிட்டிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக டிசம்பர் கடைசியில் சொன்னார்.

ஜனவரியில் ஊருக்குப் போய் ரிலீஸ் வைபானுவங்களில் திளைத்துத் திக்குமுக்காடிக் கேடயங்கள் பல வாங்கி, புதுத் தயாரிப்பாளர்களிடம் அடுத்த பட அட்வான்ஸ்களை ஸ்விட்சர்லாந்துக்கே நேரே டாலரில் அனுப்பச் சொல்லி …. என்ற என் எண்ண ஓட்டங்களில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது.

”படம் நெட்டில் கிடைக்கிறதாமே?!” என்று கேட்டு முதலில் சென்ற வாரம் ஒரு லிங்க் அனுப்பினவர் தமிழோவியம் கணேஷ் சந்திரா. எனக்கு ஒரே ஷாக்! அந்த லிங்க் வேலை செய்யவில்லை. செய்திருந்தாலும் நான் அங்கே இருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்திருக்க மாட்டேன். கேவலமான ப்ரிண்ட், மழை பெய்யும், ஒளி சொறியும், சவுண்ட் டமாரச் செவிடு ஆகும் அல்லது பாதிப் படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது அம்மண சைட்டுக்குத் தாவி என் மனைவியிடம் குட்டு வாங்க வைக்கும் என்பதால் நான் இந்த டவுன்லோட் சமாச்சாரம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

அப்புறம், இந்த ஒரு வாரத்தில் பல பேர் இந்த விவகாரம் பற்றி ”DVD கிடைக்கிறதாமே, அதிலே நீங்கள் இருக்கிறீர்களா? இல்லை, எடிட்டிங்கில் ஷ்ரேயா டான்சை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் நடிப்புப் பொழிவை திருட்டு டிவிடிக்காரர்கள் தூக்கி விட்டார்களா?” என்று என்னிடம் கேட்டு விட்டார்கள் அல்லது எனக்கு எழுதி விட்டார்கள்.

இந்த மாதிரி அநியாயங்களெல்லாம் நிகழாமல் இருக்க அமெரிக்காவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. மீறுபவர்களை அவை உடனே தண்டிக்கவும் செய்கின்றன. நம் ஊரில் வெறுமனே சட்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அது தான் பெரிய சோகம். எதற்கெடுத்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் முதன் மந்திரி வீட்டுக்குப் படையெடுத்து, சட்டத்தை நிறைவேற்றுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியுமா?

’வேட்டைக்காரன்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி விஜய் தலைமையில் ஒரு படையும், ‘ஜக்குபாய்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி நண்பர் சரத் தலைமையில் ஒரு படையும் சென்னையில் அலைந்து திரிந்து, சரத் கையும் களவுமாக ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் இன்று வெளிவந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஆவதை எப்படிப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தமிழ்நாட்டு நடப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

படம் ரிலீஸ் ஆக மிகவும் தாமதம் ஆனதால். என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை என்று மட்டும் உறுதியாக மட்டுமல்ல, இறுதியாக மட்டுமல்ல, அறுதியிட்டும் நான் சொல்லத் தயார்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 5, 2010 | Filed Under சினிமா

6 Comments

butterfly Surya  on February 3rd, 2010

ராம், திருட்டு விசிடி விரைவில் ரேஷன் கடையிலும் கிடைக்கலாம். அதுவும் பாண்டியில் கேட்கவே வேண்டாம். சுமார் 300 / 400 கடைகள் இருக்கு.

திருட்டு விசிடிக்கு எதிராக கொதித்து எழும் திரைப்படதுறையினர் மல்டி பிள்க்ஸ் என்ற பெயரில் சென்னை தியேட்டர்களில் நடக்கும் அடாவடி ரேட்டுகளையும் அநியாய கொள்ளைகளையும் பற்றி ”மூச்” விட மாட்டார்கள். வெளியிலிருந்து குடி நீர் கூட கொண்டு வரக்கூடாது என்றெல்லாம் சில தியேட்டர்களில் சொல்றாங்க.

சென்னை பிரபல தியேட்டர்களில் பாப்கார்ன் 50 ரூபா. கோக் 40 ரூபா. டூவீலர் பார்க்கிங் ரூ 20

லோ கிளாஸ் & “மிடில் கிளாஸ் மாதவன்” எல்லாம் என்ன செய்ய முடியும்..?

ஊரெங்கும் இலவச தொலைகாட்சி. டில்லி டிவிடி பிளேயார் Rs: 999/- விசிடி ரூ: 15/- மட்டுமே. எதை எப்படி தடுக்க முடியும்..?? சொல்லுங்கள்.

ஆனால் நீங்க வர சீன்ல விசிலடித்து கொண்டே நான் ஜக்குபாயை தியேட்டரில் தான் பார்க்க போகிறேன்.

வாழ்த்துகள்.

R. Selvakkumar  on February 18th, 2010

ராம்,
ஜக்குபாயை இதுவரையில் பார்க்கவில்லை. ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அதை உம்முடைய இந்த பதிவிலுள்ள ஜாலியான நடைக்காக பார்ப்பேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 19th, 2010

செல்வக்குமார் (’க்’ உண்டா? நியூமராலஜிக்காகவா?),

‘டப்பிங்’ முடித்த பிறகு நானே இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. இரண்டு நாள் முன்புதான் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் “என்னங்க படம் பாத்துட்டீங்களா?” என்றதற்கு “இல்லை. நெட்டில் படம் பார்க்கப் பிடிப்பதில்லை. ஒரிஜினல் டிவிடிக்காக வெயிட்டிங்” என்றேன்.

சென்னையிலிருந்து கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 19th, 2010

என்னங்க பட்டர்ஃப்ளை,

இன்னுமா பறந்து போய் படம் பார்க்கலை? பார்த்து விட்டு அது பற்றி எனக்கு எழுதுங்கள்.

பயப்படாதீர்கள், ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்!

para  on March 10th, 2010

ராம், நேற்று படம் பார்த்தேன். சரியான நாட் உள்ள படம். ஆனால் திரைக்கதை சற்று தடுமாறிவிட்டதால் சரியாகப் போகவில்லையென்று நினைக்கிறேன். [திருட்டு டிவிடியால் அல்ல.] மற்றபடி உங்களைத் திரையில் கண்டதில் மகிழ்ச்சி. ஸ்ரேயாவைவிட நன்றாக நடித்திருக்கிறீர்கள். சென்றமுறை பார்த்ததற்குக் கொஞ்சம் அகலமாகியிருக்கிறீர்கள்.கன்னக்கதுப்பெல்லாம் மின்னுகிறது!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on March 11th, 2010

“ரொம்ப வைட்டான கேரக்டர் ராம் இது”ன்னு டைரக்டர் சொன்னதை நம்பி கொஞ்சம் கொழுக் மொழுக்காயிட்டேன், பாரா! தப்பு தான்.

அடுத்த படத்திலே ’ட்ரிம்மான’ கேரக்டர்னு இப்பவே சொல்லிட்டங்க!

அது சரி, அதென்ன ‘ஸ்ரேயாவை விட நன்றாக நடித்திருக்கிறீர்கள்’? இந்த நக்கல்தான வேணாங்கறது! அந்தப் பொண்ணு ‘நடிக்கும்போது’ அடிச்ச லூட்டிகளெல்லாம் இங்கே எழுத முடியாது! நாம மீட் பண்ணும்போது சொல்லி சிரிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *