தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 13, 2010 அன்புள்ள வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு,என் பணிவான வணக்கங்கள்! நாளைய தின மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்து இப்போதே என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்!

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மதன லேகியம், மகா புஷ்டித் தைலம் மாதிரி குன்சாகப் புரிந்தும் புரியாமலும் நானும் தமிழில் கிறுக்க ஆரம்பித்து ஆண்டுகள் பல ஓடோடி விட்டன.தமிழ்நெட், அகத்தியம், தமிழோவியம், தமிழ் வோர்ல்டு, திண்ணை, மரத்தடி, ராயர் காஃபி கிளப், குட்டிச் சுவர்கள், இன்னமும் மறந்தே போய்விட்ட, மண்டையைப் போட்டுவிட்ட  எத்தனையோ சைட்டுகளின் ஆர்கைவுகளில் என் பொன்னான கையெழுத்து பொறிக்கப்பட்டிருப்பதை வரலாற்று வல்லுநர்கள் கி.பி. 12,500 வாக்கில் தோண்டி எடுத்துக் கண்டு பிடித்து மகிழப் போவது திண்ணம்.

குமுதம், விகடன், தமிழ்க்கதிர், தமிழ் முரசு, இதயம் பேசுகிறது, அமுதசுரபி, கலைமகள், ஜங்ஷன், ஸ்டேஷன், ப்ளாட்பாரம் என்று காணாமலே போய் விட்ட அல்லது கன்னாபின்னாவென்று விற்றுத் தீர்க்கிற பலபத்திரிகைகளையெல்லாம் ஒரு சுற்று சுற்றித் தலைசுற்றில் ’கேரா’கிவிட்டது.அமெரிக்க அரசியல், கலக்கல் கபாலி, சினிமா, பயாஃக்ரபி, ஆபிச்சுவரி, கட்டுரைகள், மதிப்புரைகள், நெட்டில் மயிர்பிடி குழாய்ச் சண்டை, அபாலஜி, மன்னிப்பு, மாப்பு, மறுபடி சண்டை- எல்லாமே பார்த்தாகி விட்டது.ப்ரிய ஸகி, ஹாலிவுட் அழைக்கிறது, டிசம்பர் தர்பார் என்றெல்லாம் ஒல்லியாக, தடியாக, கலர் கலராக என்று புத்தகங்களும் போட்டாகி விட்டது. இதெல்லாம் விற்றுத் தீர்ந்ததா, காசு கொடுத்து எந்த அசடாவது வாங்கியதா, பட்டாணி சுண்டல் மடிக்கவாவது யாருக்காவது இதெல்லாம் பயன்பட்டதா என்றெல்லாம் ஒருத்தரும் கேட்கக் கூடாது.

என் நாடகங்களைப் பற்றி நானே சொல்லிக்கொள்ளாவிட்டால் எப்படி? வேண்டாம், வேண்டாம். உங்களை இதற்கு மேலும் சோதிக்க நான் விரும்பவில்லை. உங்களை மேலும் பயமுறுத்தும் வகையில் இன்னும் சில பல புத்தகங்களும், நாவல்களும், சிறுகதைகளும் என் பெண்டாட்டிக்கு எரிச்சலூட்டும் வண்ணம் தயாராகிக்கொண்டே தான் இருக்கின்றன.
அதிலெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை.

“மவனே, நீயெல்லாம் ஒரு ரைட்டருன்ற? தூத்தெறுக்கி, அந்தாள மேறி நீயு தலியானி சைசுல எதுனா எய்திகிரியா? இந்தாளு கனுக்கா தொடரு தொடருன்னு வர்ச கனுக்கா தொடரி அல்லாரயும் கீறிகிரியா?ஒரு புக்கு ஆயிர ரூவான்னு கடையுலயே மாரடப்பு வர வெச்சுகிரியா? அப்பால, ஆங்! எதுனா வால் போஸ்டருல வந்துகிறியா?
வடைமொய்ல பேரு வெச்சி கிருசி, புரிசின்னு எதுனா கெலிச்சுகிறியா? பிலிட்சர் புட்சு கொணாந்து கிறியா? அஞ்ஞான பீடம், இஞ்ஞான பீடம், அப்டி இப்டின்றாங்களே, அப்டி எதுனா கெலிச்சுகிர்யா? மலியாளம், தெலுகு, ரசியன்,  லத்தின், புத்தின்னு எதுனா மாத்தி கீத்தி சில்பான்சா புக்கு பன்னிகிறியா?

இப்ப இன்னான்ற நீயு?” என்றெல்லாம் நீங்கள் அதிர்ந்து கேட்டால் நான் அழுது விடுவேன்.

அழுகையில் கால்சராய் நனைந்து நான் என் தமிழ், ஆங்கில ஜினிமா அனுபவங்கள், ஹாலிவுட் அழைக்கிறது – பார்ட் 2’, அமெரிக்காவில் டைரடக்சன் பற்றியெல்லாம் புலம்ப நேரிடும். வேண்டாம். நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
நாவல், திரைக்கதை, சரித்திரக் கதை முன்/பின்/சைடு நவீனத்துவம், சென்னைத் தமிழில் கானா என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து என்ன தான் நான் எழுதினாலும் நாட்டில் ஒரு பயலும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை.

போனால் போகிறதென்று எனக்கும் ஒரு கிழிந்த பட்டமோ, ஓட்டைத் துணியில் ஓரணா சன்மானமோ கொடுக்கலாமே என்று ஒருத்தருக்கும் பகல் கனவு கூட வருவதில்லை என்பது எனக்குத் தெரியும். கலிஃபோர்னியக் குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள, கேவலம், ஒரு கிழிந்த சால்வை கூட யாரும் எனக்குப் போர்த்தவே இல்லை என்பதும் நீவிர் நன்கறிந்ததே.

இவ்வளவு கேவலமான ஒரு அல்ப சிச்சுவேஷனில் நான் இருந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் தொடர்ந்து இலக்கிய சேவையை விடாமல் பிழிந்து கொண்டே தான் இருக்க வேண்டும், அதை நீங்களும் மற்ற வாசகர்களும் அனுபவித்தே தான் தீரவேண்டும் என்பது சரஸ்வதி போட்டிருக்கிற கணக்கு!

என்றென்றும் மாறாப் புன்னகையுடன்,

’எல்லே’ ராம், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், பாத்ரூம் பாகவதர், கலக்கல் கபாலி, ராம் ராமச்சந்திரன் என்றெல்லாம் பல்வேறாக அறியப்படும் ஒரு ……!

லாஸ் ஏஞ்சலஸ் ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 13, 2010 | Filed Under செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *