எனக்குத் தெரியாத கீதை! 2

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கீதையை நாம் ஆழ்ந்து படிப்பதற்கு முன், கீதை பற்றிய சில உண்மைகள், விமர்சனங்கள், பொதுவான பார்வைகளை தெரிந்து கொள்வது நல்லது.

முதலில் பத்து கேள்வி – பதில்கள்:

1. கீதை எந்த மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது?

சம்ஸ்கிருதத்தில். ஆனால் சம்ஸ்கிருதம் உட்பட பலப்பல இந்திய மொழிகளில் சிறப்புரைகள், பொழிப்புரைகள், விளக்க உரைகள் கிடைக்கின்றன. ஸ்வாமி சிவானந்தரின் ஆங்கில உரை மிகவும் எளிதான ஒன்று.

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் உரைகள் மிகவும் பிரபலம். பாரதியாரின் அழகான தமிழ் உரை கிடைக்கிறது. பல்வேறு தமிழ் அறிஞர்களின் படைப்புகள் எளிய தமிழில் கிடைக்கின்றன. சின்மயானந்தா போன்றோரின் பல ஒளி, ஒலி நாடாக்கள் கிடைக்கின்றன. ’ஹரே கிருஷ்ணா’ நிறுவனர் பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவின் ‘Bhagavad Gita – As It Is’ ஆங்கிலப் புத்தகம் இலவசமாகவே கிடைக்கும்.

2. மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?

700.

3. பலவித யோகங்களைப்பற்றி கீதையில் சொல்லப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேனே, அவை என்னென்ன? அவற்றால் எனக்கு என்ன பயன்?

பொதுவாக, கீதையை ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம்  என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். கூகுள் மேப்சில் ஒரே இடத்துக்குச் நடந்தோ, காரிலோ, சைக்கிளிலோ செல்ல பலவிதமான வரைபடங்கள் காணக் கிடைக்கின்றன அல்லவா? அதே போல். இந்த மூன்று விதமான யோகங்களும் கடைசியில் சொல்லும் விஷயம் ஒன்றே.

4. இந்த 3 யோகமுறைகளில் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததா?

இல்லை. பொதுவாக மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என்று சொல்கிறார்கள் அல்லவா?

(1) எல்லாவற்றையும் படித்து, ஆராய்ந்து, கேள்விகள் கேட்டுமட்டுமே தெளிபவர்கள். Ph.D ரேஞ்சுக்கு சிந்திப்பவர்கள்.

(2) எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாகவே அணுகுகிறவர்கள். மொட்டை அடித்து, அலகு குத்தி ஆடுபவர்களிலிருந்து, ”எட்றா வண்டிய, கொளுத்ரா பஸ்ஸ” வரை, பயங்கர எமோஷனல் பார்ட்டிகள்.

(3) எல்லாவற்றையும் பகுத்து, வாழ்வியல் அறிவோடு மட்டுமே பார்க்கவேண்டும் என்பவர்கள். “ஏன், எதற்கு, எப்படி என்று விஞ்ஞான பூர்வமாக மட்டுமே பிரச்னைகளை அணுகுபவர்கள். ‘கண்ணால் காண்பதை மட்டுமே’ நம்புவேன் என்கிறவர்கள்.

தற்போதைய தமிழ்நாட்டு ’அரசியல் பகுத்தறிவுவாதி’களுடன் இவர்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஞான, பக்தி, கர்ம யோகமுறைகள் முறையே இந்த மூன்று சாராருக்கும் சரிவரும் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த மூன்று குதிரைகளையுமே அடக்கி ஆண்டு, நம் உடல் என்கிற தேரில் பூட்டிச் சரிவரப் பயணம் செய்தால் ‘பயணம்’ நன்றாக அமையும் என்கிறார்கள். பரிபூரண ஆத்ம ஞானமே இந்தப் பயணத்தின் முடிவாக இருக்கும்.

4. இது ட்விட்டர் யுகம். சுருக்கமாக, கீதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா?

Nike ஷூ கம்பெனியின் ‘Just Do It’ ரத்தினச் சுருக்கமாகப் பொருந்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது! ‘செய்வன திருந்தச் செய், அவற்றையும் என்னிடத்தில் பக்தியோடு செய்’ என்று கண்ணன் சொல்வதாக நாம் இதைச் சற்றே நீட்டிக்கொள்ளலாம்.

5. கேட்பதற்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் செய்வது எப்படி?

இனிவரும் அத்தியாயங்களில் ஆங்காங்கே இது பற்றியும் நாம் விரிவாகப் பேச இருக்கிறோம்.

6. இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்ததற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா அல்லது இது கப்ஸாவா?

இருக்கின்றன.

குருக்ஷேத்திரம் இருக்குமிடம் ஹர்யானா மாநிலத்தில்.

7. கீதை பிறந்த தேதி?

மார்கழி மாதத்து சுக்ல ஏகாதசியில் (பௌர்ணமிக்கு முந்தைய பதினோராவது நாள்) இது கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு சொல்லப்பட்டது.

8. கீதையை ஒருசாரார் மட்டுமே படிக்கலாம் என்பது பற்றி?

மகா அபத்தம். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுமே சமம், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு என்பது கண்ணனால் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

9. பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கீதையில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?

இல்லவே இல்லை. மாறாக, ‘சமதரிசனம்’ என்கிற சமத்துவக் கொள்கை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிரது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; என்கிற வள்ளுவர் வாக்கை இங்கே நினைவு கூறவேண்டும். மும்பையில் பீடிக்கடை வைத்திருந்த்த நிஸர்க தத்தா போன்ற பல ஆன்மஞானிகள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் அல்ல. பல நாயன்மார்கள், வள்ளலார், பிரும்மஞானிகள் பலரும் பிறப்பால் பிராமணர்கள் அல்லர். தற்கால பிராமணர்கள் வணங்கும் பல கடவுள்களும் (கண்ணன் உட்பட) பிராமணர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்க.

10. அப்படியானால், கீதையில் சொல்லப்படும் பிரம்மன் வேறு, பிராமணன் வேறா?
ஆமாம். பிரம்மா என்கிற கடவுள் வேறு. பிரம்மன் என்கிற கடவுள் ஸ்வரூபம் வேறு, பிராமணன் என்கிற ஜாதி வேறு. இது பற்றியும் நாம் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

ராமாயண ஆரம்பத்தில் ஒரு பாட்டில் அவ்வளவு பெரிய பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்துவிட நினைக்கும் சிறு பூனையாகக் கம்பன் தன்னைத்தானே அடக்கத்துடன் சொல்லிக் கொள்வான்.

எனக்கு அடக்கமெல்லாம் இல்லை. நானும் கீதையை எப்படியாவது படித்து சரியாகப் புரிந்துகொண்டுவிட நினைக்கும் ஒரு சராசரி மாணவனே.

பொதுவாக ஒரு நல்ல, படித்த, கற்றுத்தேர்ந்த குருவிடம் கீதை கற்பது சிறப்பு என்கிறார்கள்.

அந்த பாக்கியம் உங்களுக்கு வேறெங்காவது வாய்க்கட்டும்!

*** *** ***

சரி, இப்போது கீதைக்குள் நுழைவோமா?

சுருக்கமாக, முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் கவலை, குழப்பம் நன்றாகவே சொல்லப்படுகிறது:

முதல் அத்தியாயத்தின் முதல் ஸ்லோகம்:

த்⁴ருதராஷ்ட்ர உவாச:

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

மன்னன் த்ருதராஷ்டிரன் ஸஞ்ஜயனிடம் கேட்கிறான்: “தர்மக்ஷேத்ரமாகிய குருக்ஷேத்திரத்தில் ’நம்மவர்களும்’ பாண்டவர்களும் போர் புரிவதற்காகக் கூடி இருக்கிறார்களே, அங்கே என்ன செய்கிறார்கள்?”

த்ருதராஷ்டிரன் கண் பார்வை இல்லாதவன். தன்னுடைய மந்திரியும் தேரோட்டியுமான ஸஞ்சயனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறான். போர்க்களத்தில் இல்லாவிட்டாலும் அரண்மனையில் இருந்தவாறே ‘டீவி’யில் பார்ப்பது போல் எல்லாவற்றையும் பார்க்கின்ற வரத்தை வியாஸரிடமிருந்து பெற்றவன் ஸஞ்சயன்.

பாண்டுவும் த்ருதராஷ்டிரனும் சகோதரர்கள் என்பதும், தருமர் முதலான ஐந்து பாண்டவர்கள் சூதாடி எல்லாவற்றையும் தோற்றுவிட்டு இப்போது போர்க்களத்தில் நிற்பதுமான முன்கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். கீதை முழுவதுமே இந்த ஸஞ்ஜயனின் சொற்பொழிவுதான்.

குருடனாக இருந்தாலும் பொடி வைத்துக் கேட்கிறான் த்ருதராஷ்டிரன். இனிவரும் ஸ்லோகங்கள் எல்லாமே ஸஞ்ஜயனின் பதில்கள்தான். இந்த ஒரு கேள்விக்குப் பிறகு அடுத்த 699 ஸ்லோகங்களிலும் த்ருதராஷ்டிரன் பேசப்போவதே இல்லை!

ஸஞ்ஜயனின் சாதுர்யமான பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடர்வோம்)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on October 10, 2011

3 Comments

Alex_Pandian  on October 10th, 2011

சூப்பர் ஸ்டார்ட் ! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் !

நிச்சயம் புத்தகமாக வெளியிடவேண்டும். இப்போதே சொல்லிவிட்டேன்.

ஆங்காங்கே கொஞ்சம் படங்கள் / ஓவியங்கள் (ஒன்று அல்லது இரண்டு) வெளியிட்டால் இன்னும் நன்று

-அலெக்ஸ் பாண்டியன்

தங்கதுரை  on October 10th, 2011

லிப்கோ பதிப்பும் கண்ணதாசன் உரையும் எளிமையானவை.ஆரம்ப வாசகர்களுக்கு ஏற்றவை. தமிழ்வாணனின் உரை சுவாரசியமானது.

சுதாகர்  on October 11th, 2011

எளிய வடிவில் தருகிறீர்கள் அதுவே போதும் எங்களுக்கு, இந்த உகத்தில் மெத்தப்படித்த ஒரு குருவை தேடிக்கொண்டு போக முடியாது, இது போன்று தந்தால்தான் கீதையின் அருமை புரியும். பாரா அவர்களும் கீதையில் ‘வேலைய பாருடா’ னு இருக்கும். அதைத்தான் சுத்தி சுத்தி எழுதி இருப்பாங்கனு சொன்னாரு. இருப்பினும் இதை நோக்கிதான் பயணம் என்பதை தெரிந்தே செல்
வதும் நன்றுதான்.
தங்களது சீனப் பயணக் குறிப்பு போன்று படங்களுடன் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *