சுஜாதா நினைவஞ்சலி 2011

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன.

இந்த ஆண்டு அவருக்குத் தமிழ் இலக்கிய, வாசக உலகம் நிகழ்த்தாத / நிகழ்த்திய அஞ்சலி கொஞ்சம் விநோதமானது.

ஃபிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருக்கிறோமே, ஃபிப் 27 சுஜாதா மறைவு தினமாயிற்றே, ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் நாமும் போய் எட்டிப் பார்க்கலாமே என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தேன், ட்விட்டரில் மெசேஜ் கொடுத்துப் பார்த்தேன், ஊஹூம், யாரும் எந்த நிகழ்ச்சியுமே இல்லை என்று தான் சொன்னார்கள். பொதுஜனத் தொடர்பாளரும் சக நண்பருமான நிகில் முருகனுக்கு மெசேஜ் கொடுத்தால் பதிலே இல்லை. ஒரு சில ப்ளாக்கள், பழைய சுஜாதா மேட்டரையே திரும்பப்போட்டு ஒப்பேற்றிக் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

’என்னடா இது சுஜாதாவுக்கு வந்த சோதனை?’ சரி, அவர் வீட்டுக்காவது போய் திருமதி. சுஜாதா அவர்களிடம் கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவோம் என்று அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

இந்த வருடம் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தினார் திருமதி சுஜாதா.

“டைரக்டர் வசந்த் எங்கேயோ ஷூட்டிங்ல இருக்காராம். மனுஷ்யபுத்திரனுக்கு முதுகு வலியாம். பார்த்திபனுக்கு பேதியாம்” என்ற ரீதியில் இருந்தது அவர் பேச்சு.

”சரி விடுங்கள். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி வரவா?”

“ராம், சொல்ல மறந்து விட்டேன். சார் படித்த க்ரோம்பேட் எம்ஐடியில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொஞ்சம் பணம் கலெக்ட் செய்து அதை சுஜாதா நினைவாக ஒரு ஹார்ட் சர்ஜரிக்கு உதவும்படியாக ஏதோ ஒரு ஃபௌண்டேஷனுக்குக் கொடுக்கத் திட்டமாம். சின்ன நிகழ்ச்சி தான். ஆனால் அவர் படித்த கல்லூரி. போய் வரலாம் என்றிருக்கிறேன்.”

“ஆஹா, அப்படியே செய்யுங்கள். நான் இன்னும் ஒரு வாரமாவது இங்கே இருப்பேன். ஊருக்குப் போகுமுன் கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்” என்று ஃபோனை வைத்து விட்டேன்.

பத்து நிமிடங்களில் என் தொலைபேசி அழைத்தது. திருமதி சுஜாதா தான் பேசினார்.

“ராம். எனக்கு ஒரு சின்ன உபகாரம் பண்ணமுடியுமா?”

“என்ன வேண்டும், சொல்லுங்கள்”

“நான் சொன்ன அந்த க்ரோம்பேட்டை நினைவஞ்சலியில் சுஜாதாவின் வயதான உறவினர் ஒருவர் அவரைப்பற்றி நாலு வார்த்தை பேசுவதாக இருந்தது. இப்போது அவரால் வரமுடியாத சூழ்நிலையாம். அதனால், அந்த இடத்தில் நீங்கள் வந்து சாரைப் பற்றி நாலு வார்த்தைகள் பேச முடியுமா? நீங்கள் தான் அவருக்கு நெருங்கிய நண்பராயிற்றே”

இப்படித்தான் நான் 2011 சுஜாதா ஒரே நினைவஞ்சலியின் ஒரே பேச்சாளன் ஆனேன்.

**********************

நான் மயிலாடுதுறை நேஷனல் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் எட்டாம் வகுப்பில் ஒரு நாள் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் எல்லா மாணவர்களையும் தாங்கள் பிற்காலத்தில் என்னென்ன படிப்பதாக உத்தேசம் என்று பேசச் சொன்னார். வருங்காலக் கனவுகள் கண்களில் மிதக்க டாக்டர்கள், எஞ்சினியர்கள், விண்வெளி விஞ்ஞானிகள் எல்லோரும் எழுந்து நின்று ஆளாளுக்குக் கொஞ்சம் பீலா விட்டு அமர்ந்தார்கள். என் முறை வந்தபோது நான் “எம்டெக் படிக்கப் போகிறேன், க்ரோம்பேட்டை எம்ஐடியில்” என்று கண்களில் பூச்சி பறக்கச் சொன்னேன்.

விதிவசமாக, அந்த எம்ஐடி இன்னொரு கலாமை இழந்தாலும் ஒரு நல்ல சுஜாதா ரசிகனை அமெரிக்காவுக்கு பார்சல் செய்துவிட்டது. என் சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும். எம்ஐடியில் நேற்று மாலை நிகழ்ந்தது என்ன?

காரில் நானும் திருமதி சுஜாதாவும், சுஜாதாவின் மூத்த பிள்ளை ரங்கப்பிரசாதும். திருநெல்வேலியிருந்து சற்று நேரமுன்னரே இம்போர்ட் செய்யப்பட்டிருந்த எங்கள் ஓட்டுநர் சென்னை சிட்டி டிராஃபிக், சிக்னல்கள், போகவேண்டிய இடம் எது பற்றியும் கிஞ்சித்தும் பிரக்ஞை இன்றி கிடைத்த சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து புறப்பட எத்தனித்தார்.  ரங்காவை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். கல்யாணமே வேண்டாம் என்றிருந்த ரங்கா ஃபிப் 14ல்தான் கல்யாணம் செய்து கொண்டாராம். அவசரமாக ரங்காவுக்கு கன்கிராட்ஸ் சொன்னபிறகு எல்லோருமே சேர்ந்து போகுமிடம் பற்றிய கவலையில் ஆழ்ந்தோம். ஓட்டுநரின் லாஜிக் எனக்கு சுத்தாமாகப் பிடிபடவில்லை. எந்த ரோட்டில் எதற்காக ஏன் திரும்புகிறார் என்பது பயங்கர ஃபஸ்ஸி லாஜிக்காகிப் போனது. ஆனால் அவருக்குப் பதட்டம் சற்றுமில்லை. எப்படியும் இன்று பேட்டா நிச்சயம். நாங்கள் தான் பதறிப் போனோம். சரியான ரோடுகளில் திரும்பவைத்த பிறகு “அதான் எனக்கு மொதல்லியே தெரியுமே!” என்கிற திருநெல்வேலிப் பம்மாத்து வேறு. சரியான காமெடி பீஸ்! எனக்கு வடிவேலுவின் ‘வரும், ஆனா வராது’ சீக்வென்ஸ் ஞாபகம் வந்து பயமுறுத்தியது.

பத்து வருடங்களுக்கு முன் ரங்காவை Northridge-ல் விருந்தோம்பியபோது அவன் சாப்பிட்ட ‘ஓல்ட் ஆஸ்திரேலியன் ஸ்டௌட்’ பற்றியெல்லாம் பேசுவதை நிறுத்தி ஓட்டுநரைச் சமாளிக்க ஆரம்பித்தோம். சத்தியமாக எம் ஐடி சிட்லபாக்கத்தில் இல்லை என்பது எனக்குத் தெரியுமென்பதால், அங்கே இங்கே தடுமாறி, ரிவர்ஸில் போய் ஒரு வழியாக கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து விட்டோம்.

அரை இருட்டு. அத்வானமான கேம்பஸ். ஆங்காங்கே சில அமானுஷ்யமான சப்தங்கள். வாசலில் ஈ காக்கை இல்லை. ரங்கா அம்மாவை முறைத்தான்.

எங்களை அழைத்திருந்தவர்கள் ஒருவழியாக எங்களைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். எல்லோரும் இளைஞர்கள். இப்போதெல்லாம் பள்ளிப் படிப்பு முடித்த உடனேயே எம்ஐடியில் சேர்ந்து விட முடிகிறதாம். தெரிந்தது.

MITAFEST 2011 என்ற கொண்டாட்டத்தின் ஒரு இடைச்செருகலாக சுஜாதா நினைவஞ்சலியும் திணிக்கப்பட்டிருப்பது புரிந்தது.

மிகவும் சின்சியராக சில மாணவர்கள் பணம் வசூலித்து அந்தப் பணத்தை சுஜாதா நினைவாக ஒரு இருதய ஆப்பரேஷனுக்காகச் செலவழிக்க நினைத்தது பெருமைப்படவேண்டிய விஷயம். “சுஜாதா சார் எங்கள் சீனியர்” என்று சின்னப் பசங்கள் பெருமைப்பட்டது நல்ல காரியம்.

என்னை யாரென்பது யாருக்கும் தெரியாதாகையால் சுஜாதா பற்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘L.S. ராம்’ பேசுவார் என்று யாரோ ஒருவர் அறிவித்தார். என்னைப்பற்றிக் கவலையில்லை. அவர் சுஜாதாவின் ஒரு புத்தகத்தையாவது படித்திருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. சுஜாதாவைப் பற்றியே அவர் அப்படித்தான் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

ஓடி வந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிய இன்னொரு பெண்மணி, சுஜாதா பற்றித் தயாராக எழுதிக் கொண்டுவந்திருந்த ஒரு ஏழெட்டு பக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முதல் பக்கம் முடிக்குமுன்னரே, இனிமேல் சுஜாதா பற்றி அவருடைய அமெரிக்க நண்பர் ’L.A. ராம்’ பேசுவார் என்று அறிவித்தார். ரங்கா தலையில் அடித்துக்கொண்டான். “சாரி ராம்” என்று ஆரம்பித்தவனுக்கு ’யாமிருக்க பயமேன்’ என்று அபய ஹஸ்த முத்திரை காட்டி நான் மேடை ஏறினேன்.

சதா சர்வதா காலமும் (ராயல்டி நஹி என்று நினக்கிறேன்) ஏதாவது ஒரு டீவியில் ’பன்னீர் புஷ்பங்கள்’, ‘ஜீன்ஸ்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று ஓடிக்கொண்டிருப்பதால் ஒரு சில படங்களிலாவது என்னைப் பார்த்திருக்கக்கூடிய ஆடியன்சுக்குச் சற்றே குழப்பம்.

’இந்த சொங்கி அவன்தானா, இல்லையா?’ என்கிற சலசலப்புப் பேட்டிகள் என் காதில் விழாமல் இல்லை.

பக்கத்தில் கருங்கல் ஜல்லி மேடு எதுவும் இல்லை என்பதை நான் ஏற்கனவே கவனித்திருந்ததால் எனக்கு நிம்மதி. அவர்களை இன்னும் கொஞ்சம் குழப்புமுகமாக நான் யாருமே பார்க்காத, திரைக்கே வராமல் பல மாதங்களான ரகசியப் படமான ‘ஜக்குபாய்’ படத்திலும் நடித்திருப்பதைச் சொல்லி மேலும் அவர்களைக் குழப்பினேன்.

”Good evening friends! Do you want me to speak in English? அல்லது தமிழிலேயே பேசட்டுமா?” என்றேன்.

“தமிழ்! தமிழ்!” என்ற ஆரவாரம்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே” என்கிற வைரமுத்துவின் நாயகன் – நாயகி பாவத்தை ஒரு நட்பு பாவமாக சுஜாதா பெயரில் உல்டா செய்ததை ஆடியன்ஸ் ரசித்தார்கள், கை தட்டினார்கள்.

முதலில் நான் யார், சுஜாதாவுக்கும் எனக்கும் எந்தவிதமான ஸ்நானப் பிராப்தி என்பதைக் கூட்டத்திடம் விளக்கினேன். சுஜாதா குடும்பத்தினர் என்னோடு வந்து ’எல்லே’யில் தங்கியிருந்த நாட்கள், ‘ஜீன்ஸ்’ படத்தில் நடிக்க என்னை அவர் இயக்குனர் சங்கரிடம் ரெகமெண்ட் பண்ணியது, பலப்பல விஷயங்கள் பற்றிய சுஜாதாவின் விஷயஞானம், இன்னபிற விஷயங்களை மிகவும் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன்.

பக்கத்திலேயே ‘ஹா’வென்று நின்று கொண்டிருந்த பேப்பர் அம்மணியிடம் “இன்னும் பேசலாமா, நேரம் இருக்கிறதா, அல்லது இத்துடன் முடித்துக் கொள்ளவா?” என்றேன். எல்லாவற்றுக்குமே பலமாகத் தலையாட்டினார்.

“Brevity is the  soul of wit” என்பதற்கு சுஜாதா வாழும் உதாரணமாக விளங்கினார். அதை மனதில் கொண்டு, சுஜாதா பெயரால் செய்யப்படும் இந்த நல்ல காரியத்தைச் செய்ய முன்வந்தவர்களை வணங்கிப் பாராட்டி, என் சிற்றுரையை முடித்தேன்.

இன்னொரு விஷயமும் சொன்னேன். சுஜாதாவின் மறைவு தினத்தைக் கொண்டாடுவதை விட அவர் பிறந்த தேதியை (மே 3) கொண்டாடுவதில் திருமதி சுஜாதா அதிகம் விருப்பம் காட்டியதால் அதையும் அங்கே மறக்காமல் சொல்லி மே 3ம் தேதிக்குள் இன்னொரு ஹார்ட் சர்ஜரிக்கு உண்டான பணத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அவர்களை வேண்டிக்கொண்டேன். அப்படி ஏற்பாடு செய்யப்பட்டால், எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாகவும் ஒரு டொனேஷன் கொடுப்பதாகச் சொன்னேன்.

அழுகிய முட்டைகள், நசுங்கிய தக்காளிகள் எதுவும் என் திசையில் பறக்குமுன்னர் ஜாக்கிரதையாகக் கீழே இறங்கியவனை மீண்டும் மேடைக்கு அழைத்தார்கள். எனக்கும் ஆஸ்கார் மாதிரி ஒரு நினைவுப் பரிசைக் கையில் திணித்தார்கள். டீன் ஆறுமுகம் ஸ்டான்லி “அங்கே பாருங்க” என்று காமெராவைப் பார்த்து போஸ் கொடுக்கச் சொன்னார்.

அடுத்ததாக ஃபேஷன் ஷோ என்று அறிவித்துக்கொண்டேஏஏ இருந்தார்கள். வரவேண்டிய பெண்கள் கல்லூரி ஏதோ ஒன்று வராததால், காட்டாங்கொளத்தூர் எஞ்சினீயரிங் கல்லூரி மாணவர்கள் (கவனிக்க, நோ மாணவிகள்) விடைத்துக்கொண்டு வந்து நின்று விதம் விதமாக போஸினார்கள். நாம் இருப்பது வெஸ்ட் ஹாலிவுட்டா, க்ரோம்பேட்டா என்று நான் ரங்காவிடம் வினவினேன்.

ரங்கா “போகலாம்மா, எனக்குப் பசிக்குது” என்றான்.

வரும் வழியில் நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்துகொண்டிருந்த, என் பேச்சையும் மிஸ் பண்ணிவிட்ட, வைஸ் சேன்ஸ்லர் மன்னார் ஜவஹர் என்பவரைப் பார்த்துக் கொஞ்சநேரம் பேசினோம். ”சுஜாதா டெக்னாலஜி பற்றி எழுதத் தெரிந்தவர்” என்று ஏதோ சொன்னார். நான் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வின் வர்ச்சுவல் ரியலிட்டி பற்றி நினைவூட்டினேன்.  “தம்பிக்கு எந்த ஊரு?” என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார். “நானு போன மாசம் ஹாலிவுட் வந்திருந்தேன்” என்றார். நானும் அளவாக சந்தோஷப்பட்டேன்.

வரும் வழியில் எங்கள் ஓட்டுநர் மறுபடியு திருநெல்வேலிக்கே போக எத்தனிக்க, நாங்கள் அவரை ஒரு ஓட்டு ஓட்டி, ஒரு வழியாக சிட்டிக்குள் வந்து சேர்ந்தோம்.

“இந்த ரூட்டுதான் எனக்குத் தெரியுமே” என்றார் ஓட்டுநர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on February 27, 2011

15 Comments

iyyanars  on February 27th, 2011

தன் எழுத்தால் இறவா வரம் பெற்றவர்க்கு, நினைவு அஞ்சலி எதற்கு?!

மணியன்  on February 27th, 2011

நீங்கள் எழுதியதையெல்லாம் படித்த பிறகு நினைவஞ்சலிகள் நிகழாமல் இருந்ததே சுஜாதாவின் எழுத்துக்குப் பெருமை.

Jeyakumar  on February 27th, 2011

சுஜாதாவைப் புகழ்பவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே சுஜாதாவின் 10 புத்தகங்களையாவது வாசித்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்.?

அவரின்

01. உண்மையான வாசகர்கள்

இவர்கள் சுஜாதாவின் ஒவ்விரு எழுத்தையும் நேசிப்பவர்கள். கிட்டத்தட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் மாதிரி

02. ஏன், எதற்கு எப்படி, கற்றதும் பெற்றதும் வாசகர்கள்..

இவர்கள் இந்த இரண்டு விஷயங்களையும் வாரா வாரம் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாசித்துவிட்டு சுஜாதாவின் மேதமையைப் பார்த்து வாய்பிளப்பவர்கள்..

இந்த இரண்டு கோஷ்டிகளிலும் இல்லாமல் நெட்டில் ஆங்காங்கு கிடைக்கும் சுஜாதாவின் நாவல்களைப் படித்துவிட்டு ரசிகரான கோஷ்டிகள்..

முதல் குழுமம் தவிர மற்ற இரு குழுவினர் மட்டுமே பாராட்டு விழா, பதிவு என அமர்க்களப்படுத்துவார்கள், அதுவும் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும்.

மற்றவர்கள் அமைதியாய் அவருக்கு மானசீக அஞ்சலியாக அவரது நல்ல புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பார்கள். அவர்களால் சுஜாதா தினமும் நினைக்கப்படுகிறார், பாராட்டப்படுகிறார்.

எழுத்தாளன் வாசிக்கப்படுவதைவிட என்ன பெரிய கௌரவம் கிடைத்துவிடப்போகிறது?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 28th, 2011

From Rangaprasad (son of Sujatha, quoted with his permission):

Good summary Ram.

I know. I think a lot of readers are still finding ways to fill in the void. i think perhaps they don’t realize that the greatest gift that my father would have loved to imbue is the ferocious lust for reading.

i think that is what my father would have loved to leave his readers to do. celebrate cerebral reading. not just celebrate his reading.

/ranga

உண்மைத்தமிழன்  on February 28th, 2011

நிகழ்ச்சி பற்றி அறிந்து கொண்டோம். மிக்க நன்றி..! வருடாவருடம் வாத்தியாரின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை எழுத்தாளர்கள் தினமாகவோ அல்லது இளைய எழுத்தாளர்கள் தினமாகவோ கொண்டாடலாம்.

வசதிகள், வாய்ப்புகள் இருக்கும் எழுத்துலகப் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன் வந்து செய்தால் நன்றாக இருக்கும்..!

பாரதி மணி  on February 28th, 2011

ராம்,ரொம்ப நல்ல பதிவு. அமரர் சுஜாதாவுக்கு, அவரால் பயனடைந்தவர்களாவது ஒரு ஆத்மார்த்தமான விழாவொன்று ஏற்பாடு செய்திருக்கலாம்.

என் பங்குக்கு நான் எழுதிய சுஜாதா நினைவஞ்சலி கட்டுரையைப்போட விரும்பவில்லை. அவரை நினைவு கூர்ந்தாலே போதும்!

பாரதி மணி

மாரிமுத்து  on February 28th, 2011

மிகவும் சுவையான பதிவு. உங்களுக்கும் சுஜாதா சாருக்கும் உள்ள நெருக்கம் உங்கள் மொழிநடை யிலேயே தெரிகிறது. அவரின் எழுத்துக்கள் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பவை.விழாவெல்லாம் எடுத்து நினைவு கூற தேவையில்லை. திருவள்ளுவனுக்கும்,இளங்கோவுக்கும் விழா எடுக்கிறோமா என்ன.?

ila  on February 28th, 2011

அண்ணே. அடுத்த வருசம் பதிவுகளும் அண்ணாரை மறந்துவிடலாம். ”ஒன்ஸ் அப்பான் அ டைம், தேர் வாஸ் அ குட் ரைட்டர் கால்ட் சுஜாதா, யு நோ…” அப்படின்னு சொல்லிட்டாவே பெருசுங்க.. மனிதர்களை மறப்பது மனிதர்களுக்கு சகஜம்தானுங்களே

சுஜாதா நினைவஞ்சலி 2011 — லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் « Balhanuman’s Blog  on March 1st, 2011

[…] லாஸ் ஏஞ்சல்ஸ் ராமின் சுஜாதா நினைவஞ்சலி 2011 இதோ இங்கே… […]

raju-dubai  on March 1st, 2011

“நான் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வின் வர்ச்சுவல் ரியலிட்டி பற்றி நினைவூட்டினேன்”‘

Dear Sri. Ram

Thanks for this article on my dear sujatha.

forgive me if I am wrong, “Virtual reality samacharam”was in sujatha’s “Kolai udir kaalam”( and not in “karai yellam shenbagappoo”)

raju-dubai

முத்து  on April 5th, 2011

நெகிழ்ச்சியான பதிவு. நன்றிகள் ராம்.

தமிழ்நாட்டில் இந்தளவாவது இன்றைய வாசிப்புப்பெருக்கத்திற்கு அவர் ஒரு முக்கியமான காரணி என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது.

சுஜாதாவின் புதல்வர் திரு.ரங்கா சொல்லியிருப்பதுபோல, தமிழர்களின் வாசிப்புப் பழக்கம் இன்னும் பல்கிப்பெருகுவதும், பொதுவாசக ரசனை இன்னும் மேம்படுவதுமே சுஜாதாவுக்கு மிகச்சரியான அஞ்சலியாக அமையும். (ஏழுகோடிக்கும் மேல் தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில் நல்லதொரு நூலாக்கம் – இலக்கியமோ இலக்கியமல்லாததோ – பதிப்பு கண்ட முதல் ஆண்டிலேயே குறைந்தது இருபதாயிரம் பிரதிகள் விற்பனையாகவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் அதிகமில்லையே ?)

கல்லூரி காலத்தில் தமிழ் மற்றும் கணிப்பொறி விரிவுரையாளர்களால் மேற்கோள் காட்டப்பட்ட சமகால எழுத்தாளர் சுஜாதாவாக மட்டுமே இருக்க முடியும்.

அன்புடன்
முத்து

Rajan  on June 1st, 2011

என்னை வருத்தப்பட வைத்த பதிவு. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை(ப்பதை) விட நடக்காமல் இருப்பதே மேல்.

Ganpat  on June 18th, 2011

நாம் அவருக்கு நடத்தும் அஞ்சலி கூட்டம்,நம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள!அது அவர் தகுதியைப் பாதிக்கிறது என்று நினைப்பது நம் அறியாமை.

முரளிகண்ணன்  on July 7th, 2011

மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது – வாத்தியாரின் வசனம்தான் ஞாபகம் வருகிறது

புத்தகப்புழு  on August 8th, 2011

அந்த ”அத்வானமான கேம்பஸில்” படிக்கும் மாணவன் நான்.அன்றைய உங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்.மற்றபடி சுஜாதா மீது அபரிமிதமான அன்பு(பைத்தியம் கூட) கொண்ட என்னைப்போன்ற வாசகர்கள் இங்கே இருக்கிறோம்.அன்றைய விழாவில் சுஜாதா பெயருக்கு உண்மையாக கைத்தட்டியவர்களில் நானும் ஒருவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *