கணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

“இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது.

அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்!

*****

“ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!”

வீட்டிலே ஒரு புதுக் குழந்தை பிறந்ததும் எல்லோரும் என்ன செய்வதென்று கூடத் தெரியாமல் வாயெல்லாம் பல்லாக அதைச் சுற்றிச் சுற்றி வருவோமே, அதே போல், முதன் முதலாகத் தமிழ் எழுத்துகளைக் கணினியில் பார்த்த குதூகலம் இப்பொழுதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

1995-ம் வருடம். அமரர் சுஜாதா அவர்கள் சென்னையிலிருந்து குடும்பத்துடன் என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்கு வருகை தந்திருந்த நேரம் அது. எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சினிமா, அரசியல் நண்பர்களைப் பற்றி சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். வசனம் எழுதுவது, திரைக்கதை அமைப்பது, Scriptor, Movie Magic போன்ற சினிமா தொழில் சார்ந்த மென்பொருட்கள் பற்றியும் பேச்சு திரும்பியது.

“தமிழில் தட்டச்சு செய்யமுடியும், தெரியும், இல்லையா?” என்று கேட்டார் சுஜாதா.

அது பற்றிய விபரங்களை நான் அரசல் புரசலாக இணையத்தில் அறிந்திருந்தாலும், அந்த மாதிரி முயற்சிகளுக்கு சுஜாதா பெரும் முன்னோடியாக இருந்தவர் என்கிற முறையில் அவரையே மேல் விபரங்கள் தரும்படி கேட்டுக் கொண்டேன். கணினி, தமிழ், அறிவியல்- எல்லாமே சுஜாதாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான சந்தோஷ சமாச்சாரங்கள் அல்லவா! அவ்வளவு பெரிய பிதாமகர் குருகுலம் மாதிரி பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுத்தால் கேட்பதற்கு எனக்குக் கசக்குமா?!

‘அஞ்சல்’ மென்பொருள், முத்து நெடுமாறன், இன்னும் பல சிங்கை நண்பர்களின் கூட்டு முயற்சி பற்றியெல்லாம் சுஜாதா விபரமாகச் சொன்னது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்கும்படியும், சோதனை முயற்சிகளுக்கு உதவவும் அவர் என்னைப் பணித்தார். ஓரளவுக்கு நானும் கணினித் துறையில் வல்லுனராக இருந்ததும் எங்களுக்கு வசதியாகப் போயிற்று. இன்னமும் சொல்லப்போனால், கணினி தொடர்பான வியாபாரங்களில் நான் அப்போது தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். IBM, HP, Apple, Microsoft போன்ற நிறுவனங்களுடனும், சினிமா தொழில் சார்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்களுடனும் எங்கள் வியாபார உறவுகள் பலமாகவே இருந்தன.

முத்து நெடுமாறன் மூலமாக, முதன் முதலாக ‘அஞ்சல்’ மென்பொருள் உபயோகப்படுத்தி ‘அம்மா, அப்பா’ என்றெல்லாம் விளையாட்டாகத் தட்டச்சு செய்து பார்த்து, எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் ஓடி வந்து ‘மானிட்ட’ரைப் பார்க்கச் செய்து குதூகலித்திருந்த காலம் அது. ஒரு சின்னக் குழந்தையைப் போல கணினியில் தமிழ் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்த கால கட்டம்,

அது முதல், பல சோதனை முயற்சிகளுக்கும் என்னைத் தோள் கொடுக்குமாறு பணித்ததுடன் எனக்கு நல்ல பல அறிமுகங்களையும் சுஜாதா செய்து கொடுத்தார். கொஞ்சம் கூட வறட்டு கௌரவம் பார்க்காமல் அவர் எங்களுடன் பழகியது, சிக்கலான பல அறிவியல், கணினி, திரைக்கதை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாங்கள் விவாதித்திருந்தது,  கணினியில் தமிழுக்காக மேலும் என்னென்ன செய்யவேண்டும், யார் யார் எங்கெங்கே எப்படி இதற்காக மெனக்கெட்டு உழைக்கிறார்கள் போன்ற விபரங்கள்= எல்லாமே நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய, உயரமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உற்சாகமான முயற்சியாக இருந்தது. தமிழ் எழுத்தாளர்களில் ஒரு ஜாம்பவானாக இருந்த சுஜாதா அவர்கள் இப்படிப்பட பலப்பல புது முயற்சிகளுக்கு உதவியதுடன், இதற்கெல்லாம் தீவிரமான ஆதரவாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஒரு சின்ன அணிலாக நானும் என் பங்குக்கு ஏதோ என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் என்கிற பெருமிதம் எனக்கு இன்றும் மன நிறைவைத் தருகிறது.

ஆரம்பத்தில் TSC, TSCu போன்ற கட்டமைப்புகளுடன் புதுப்புது தமிழ் ‘ஃபாண்ட்கள்’ வெளிவந்தபடியே இருந்தன. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஃபாண்டில்! ‘இதைப் படித்தால் அதைப் படிக்க முடியாது, அதைப் படிக்க வேண்டுமென்றால் இன்னுமொரு ஃபாண்ட் தேவை’ என்று ஆரம்ப காலக் குளறுபடிகள் ஏராளம், ஏராளம்! “அவர் இதிலே காசு பார்க்கப் பார்க்கிறார்”, “இந்தாருங்கள், இது இலவசம்!” “இலவசமா? அதெல்லாம் குப்பை!” போன்ற வியாபாரக் கூச்சல்கள், குழப்படிகளுக்கும் அப்போது பஞ்சம் இல்லை! தகராறுகள் இல்லாமல் தமிழ் வளர்ந்ததாக சங்க காலத்திலிருந்தே சான்றுகள் இல்லையே!

பக்கம் பக்கமாக என்னுடைய நாடகங்களுக்கும், கதைகளுக்கும், கவிதைகளுக்கும் வெள்ளைத் தாளில் எழுதிப் பழகியிருந்த நான் எல்லாவற்றையும் கணினியில் செய்ய முடிவதில் சந்தோஷப்பட்டேன். ஆனால், அடிக்கடி கணினிகள் தட்டுத்தடுமாறுவது, ஹார்டு டிஸ்குகள் அகாலமாக மண்டையைப் போட்டு எழுத்தாளர்களை அழவைப்பது, வாரக் கணக்கில் எழுதியவையெல்லாம் ஒரே நொடியில் virtual space என்கிற வெற்றிடவெளியில் காணாமல் போவது போன்ற கவலைகளும் கூடவே வந்து கழுத்தை அறுத்தன.

பாலா பிள்ளையின் www.tamil.net இம்மாதிரி பல ஊடக முயற்சிகளில் இருந்த என் போன்றவர்களை ஒருங்கிணைக்க உதவியது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்த அவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்த நான் நண்பனானேன், ஆனாலும், பல விஷயங்களை ஒருங்கிணைக்க முடிந்தது. முத்து நெடுமாறன் சிங்கப்பூரில், சுஜாதாவோ சென்னையில்! இன்னும் பல நண்பர்கள் பலப்பல ஊர்களில்! ஒவ்வொருவரும் இருப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், படிப்பதும் ஒவ்வொரு நேரத்தில். ஆனால் ஒரே தளத்தில் எங்களால் எப்போதும் உறவாட முடிந்தது. தமிழ் இணையத்தால் மட்டுமே இது சாத்தியமானது. நல்ல பல தமிழ்ப் பெண்கள் “நாங்கள் கணினிக் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்!” என்று உலகளவில் கூக்குரலிட ஆரம்பித்ததும் இதே கால கட்டத்தில் தான்!

எந்தக் கண்ணகியின் கூச்சலுக்கும் பயந்து கணினித் தமிழ் முடங்கிக் கிடக்கவில்லை! அதன் வளர்ச்சி, பல தமிழ் ஆர்வலர்களின் பெரு முயற்சியுடன் யாஹு, கூகுள் போன்ற இடங்களில் பல தமிழ் குழுமங்களாகத் தொடர்ந்தது.

நானும் அகத்தியர், மரத்தடி, தமிழோவியம் போன்ற பல குழுக்களிலும் உறுப்பினராகித் தொடர்ந்து எழுதி வளர்ந்தேன். இரா. முருகன், என். சொக்கன், வெங்கடேஷ், பாரா போன்றவர்களுடன் ‘ராயர் காப்பி கிளப்’ ஆரம்பித்து அதையும் ஜாலியாக நடத்தினோம். என்னை ஊக்குவித்த பல நல்ல நண்பர்களை நான் இங்கே நன்றியுடன் நினைவு கூறுகிறேன். பாரா, வெங்கடேஷ் போன்ற பல பத்திரிகை நண்பர்கள் என்னை அடுத்த அடி நோக்கி நடக்க உற்சாகப்படுத்தினார்கள். ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், திண்ணை, தென்றல், கிழக்கு பதிப்பகம் என்று நானும் பல இடங்களில் எழுதலானேன்.

குழுக்கள் பெரிதாகப் பெரிதாக வெட்டியும் ஒட்டியும் எழுதுதல், வெட்டிப் பேச்சுகள், வீணர்கள் சிலர் என்று மட்டுறுத்தல் தேவைகளும் நாளடைவில் அதிகரிக்க ஆரம்பித்தன!

‘ஜாண் இடமாக இருந்தாலும் தனி இடமே சொர்க்கம்’ என்று ‘ப்ளாக்’கள் பிறகு வேர் விட ஆரம்பித்தன. ‘இந்தக் கூட்டுக் குடும்ப குழப்பங்களுக்குத் தனிக் குடித்தனமே தேவலை போல் இருக்கிறதே!’ என்று பலரும் யோசிக்க நேர்ந்தது. ஆனால், ஒன்றுக்கொன்று பிரச்னை இல்லாமல் குழுமங்களும், தனி வலைப்பகுதிகளும் சேர்ந்தே ஒற்றுமையுடன் இன்றும் இயங்குகின்றன.

‘ப்ளாக்’ என்கிற தனிப்பட்ட Blogger, WordPress போன்ற வலைப்பகுதிகளில் நாங்கள் எல்லோருமே இன்றும் தமிழால் வளர்ந்து வருகிறோம்! என்னுடைய முகவரியாகிய losangelesram.blogspot.com “வாருங்கள்! வந்து உங்கள் நினைவலைகளைப் பதிவு செய்யுங்கள்!” என உங்களை அன்புடன் அழைக்கிறேன். www.writerlaram.com இதுவும் என் வீடே!

தமிழின் பரிணாம வளர்ச்சி Twitter, Facebook, Myspace போன்ற இடங்களிலும் விருவிருப்பாகத் தொடர்கிறது

இணையத் தமிழ் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் வாசகர்கள், ரசிகர்கள், நண்பர்கள் ஏராளம்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இணையம்! நாளையும் நமதே!

என்றென்றும் தமிழன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

http://losangelesram.blogspot.com

www.writerlaram.com

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on May 18, 2010

3 Comments

பாரதி மணி  on May 28th, 2010

அன்புள்ள ராம்:

நல்ல கருத்துச்செறிவுள்ள கட்டுரை. ரசித்துப்படித்தேன். நான் கணினியில் தமிழ் எழுதக்கற்றுக்கொண்ட சிரமங்களும் நினைவுக்கு வந்தன.

நன்றி,
பாரதி மணி

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on May 28th, 2010

அன்புள்ள பாரதி மணி,

உங்கள் பதிலில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வருடங்கள் மிக வேகமாக உருண்டோடினாலும், ஆரம்ப காலக் கணினித் தமிழ் ‘வீர விளையாட்டுகளை’ மறக்க முடியவில்லை. சுஜாதா எனக்கு மிகவும் உதவி இருக்கிறார்.

நீங்கள் இதையெல்லாம் படிப்பது என் பாக்கியம், புகழ்ந்து எழுதுவது நான் செய்த புண்ணியம்.

ஜெயக்குமார்  on September 1st, 2011

நல்ல கட்டுரை. கனினித் தமிழின் வரலாறை சுருக்கி எழுதிவிட்டீர்கள். 108 ஸ்லோகத்தில் சம்பூர்ன ராமாயணம் சொல்வது மாதிரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *