ஒரு ஜூரியின் டயரி -4

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’

வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.

வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் அடைந்தவர்களை விட, கை, கால், கண் இழந்து மன நோயாளிகளாகவும், முடமாகவும், பல்வேறு பயங்கர உடல் உபாதைகளுடனும் திரும்பிய பல்லாயிரம் பேரைக் கண்டு ஒரு தேசமே திகைத்துப் போனது. என்ன செய்வதென்றே தெரியாமல் பம்மிப் பதுங்கியது. பழுத்த அரசியல்வாதிகள் கூட நிலைகுலைந்து போனார்கள்.

எங்கு பார்த்தாலும் நொண்டிகளாகவும், கை கால் இழந்தவர்களாகவும் ’வியட்நாம் வார் வெடரன்ஸ்’ வீல் சேர்களில், ஆஸ்பத்திரிகளில், வீதிகளில். “அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக, அரசியல் லாபங்களுக்காக, ஆயுத வியாபாரிகளின் லாபத்திற்காக, அநியாயமாக ஒரு தலைமுறையே பலிகடா ஆக்கப்பட்டு விட்டது” என்கிற போருக்கெதிரான வலுவான கோஷங்கள் நாடெங்கும் ’பீட்டில்ஸ்’ போன்றவர்களால் எதிரொலிக்க ஆரம்பித்திருந்த நேரம்.

ஆட்சியாளர்கள், தங்கள் மனச்சாட்சிக்கு ஒரு களிம்பு பூசும் முயற்சியாகவும், போருக்கெதிரான போராட்டங்களைச் சற்றேனும் திசை திருப்புமுகமாகவும் ‘Americans with Disabilities Act’ என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ‘வெடரன்ஸ்’களுக்காகக் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், இலவச மேற்படிப்பு, இலவச ஆஸ்பத்திரி இத்தியாதி இத்தியாதி!

அந்த ADA சட்டத்தின்படி, நாடு முழுவதும் வீல்சேர்களில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைகண்ணிகளின் நுழைவாயில்களுக்கு மிக அருகே சரியான பார்க்கிங், சக்கர வண்டிகள் சென்றுவர சரியான பாதை அல்லது லிஃப்ட், முறையான பாத்ரூம் வசதிகள் செய்து தரும்படி எல்லாக் கம்பெனிகளும், பிசினஸ்களும் நிர்ப்பந்திக்கப்பட்டன. படியிலேறி நடந்து செல்லமுடியாதவர்களுக்கான சாய்வான வசதியான பாதைகள், ஸ்பெஷல் சாய்விருக்கைகள், பஸ், ரயில் போன்ற பொதுஜன மார்க்கங்களில் ரிசர்வ்டு சீட்கள்- எல்லாம் கட்டாயமாக்கப்பட்டன. போர்க்காலத்தில் நொண்டி, முடமானவர்கள் தவிர, பிறக்கும்போதே ஊனமுற்றிருந்தவர்களுக்காவும் இந்த கட்டாய வசதிகள் பயன்பட ஆரம்பித்தன.

கண் பார்வை இல்லாமல் போனவர்கள் வசதிக்காக பஸ்களில் Blind Dogs என்று சொல்லப்படும் ஸ்பெஷல் டிரெய்னிங் உள்ள நாய்களுக்காக ரிசர்வ் சீட்கள் இருப்பதை நான் சான் ஃப்ரான்சிஸ்கோ பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். செய்யப்படவேண்டிய நல்ல காரியம் தான். அடிக்கடி வலிப்புநோய் வந்து அவதிப்படுபவர்கள் கூட இப்படிப்பட்ட புத்திசாலி நாய்களை உபயோகிப்பதுண்டு.

அருகாமையில் இருப்பவர்களுக்கு வலிப்பு வரப்போகிறது என்கிற செய்தி இந்த நாய்களுக்கு சில நொடிகள் முன்கூட்டியே தெரிந்து, அவை தம் எஜமானவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தால் தம் உடலைத் தலையணை போல் கிடத்தி அவர்களைத் தலையில் அடிபடாமல் காப்பாற்றுமாம். பஸ் சீட்களுக்கு அடியில் சமர்த்தாக வாலைச் சுருட்டியபடி, அதே நேரத்தில் தன் எஜமானர் மேலும் ஒரு கண்பதித்து இந்த நாய்கள் படுத்திருப்பதை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.

*** *** ***

ஆனால், எல்லா நல்ல காரியங்களையும் தத்தம் சுயநலத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு ஆதாயம் தேட முனையும் அசுரர்கள், கேவலமான மனம் படைத்தவர்கள் எங்கும் உண்டெல்லவா?

அப்படிப்பட்ட அமெரிக்காசுரர்களில் முதன்மையான வீல் சேர் அசுரனின் கேஸ் ஒன்று எங்கள் கோர்ட்டுக்கு வந்தது. வீல்சேராசுரன் என்பது நான் வைத்த செல்லப்பெயர். அவனுடைய ஒரிஜினல் பெயர் மோல்ஸ்கி.

மோல்ஸ்கிக்கு இடுப்புக்கீழே கை கால் விளங்காது. வீல்சேரில் தான் சதா வாசம். ஆனால் ஆளைப் பார்த்து ’ஐயோ பாவம்’  என்று பரிதாபம் கிரிதாபம் பட்டு விடாதீர்கள். ஏனென்று சொல்கிறேன்.

தினமும் மோல்ஸ்கிக்கு என்ன வேலை தெரியுமா? காரில் வீல்சேரிலுடன் ஏறி, தன் கேர்ள் ஃப்ரண்டுடன் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஏதாவது கடைகளுக்கு அல்லது ஹோட்டலுக்குச் செல்வது.

இதிலே என்ன தப்பு? என்கிறீர்களா? பொறுங்கள்.

அங்கே போனவுடன் “என்னால் வீல்சேருடன் கடைக்குள் சரியாக நுழைய முடியவில்லை, நீ போட்ட பாதை சரியில்லை, வாசலில் பார்க்கிங் சரியில்லை, கதவைத் திறக்கும்போது கை பிசகி விட்டது, கடைக்குள் பாத்ரூம் சரியில்லை” என்று ஏதாவது வம்படியாக ரவுசு பண்ணி அந்தந்த கடைக்காரர்கள் மேல் கேஸ் போடுவது அல்லது கேஸ் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி காசு பறிப்பது மோல்ஸ்கியின் தொழில்!

பல சின்ன கடைக்காரர்கள் மோல்ஸ்கியின் அதிரடிக்குப் பயந்து, “நமக்கெதற்கு வம்பு?” என்று அவன் கேட்கின்ற தொகையை சைலண்டாக செட்டில் பன்ணித் தொலைக்க ஆரம்பித்தார்கள். இல்லையென்றால் “அங்கே போன் பண்ணுவேன், இங்கே சொல்லி விடுவேன். நீ கடையை இடித்துக்கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா?” என்ற பயமுறுத்தல் தான்.

ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இப்படி அடாவடி வீல்சேர் கட்டைப் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த மோல்ஸ்கி நாளாவட்டத்தில் மேலும் மேலும் எக்கச்சக்கமாக துட்டு பண்ணப் பழகிவிட்டான். அவனுக்கு ’உதவி’ செய்வதற்கென்றே ஒரு வக்கீல்கள் டீம், போட்டோகிராஃபர்ஸ் டீம், அசிஸ்டெண்ட்ஸ் என்று வைத்துக்கொண்டு பகல் கொள்ளையே அடிக்க ஆரம்பித்து விட்டான்.

மோல்ஸ்கியின் பெயரைக்கேட்டாலே லாஸ் ஏஞ்சல்ஸ் சிறு தொழில் கடைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆகி விட்டது.

அப்படித்தான் ஒரு நாள் மோல்ஸ்கி லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரங்களில் ஒன்றான வுட்லண்ட் ஹில்சில் ஒரு சைனீஸ் ஹோட்டலுக்கு லஞ்ச் சாப்பிடப் போனான். சாப்பிட்டு முடித்து, பாத்ரூம் போகவேண்டும் என்று அங்கே போய் ஏகப்பட்ட கலாட்டா. ’டாய்லெட்டின் அமைப்பு சரியில்லை, டிஷ்யூ பேப்பரை வீல்சேர்வாதிகள் எட்ட முடியாமல மிக உயரே வைத்து விட்டார்கள், வாஷ் பேசின் உசரம் அதிகம், கம்மோட்டில் இருந்து வீல்சேர் மாறுவதற்குள் எனக்குக் கை பிசகி விட்டது, கழுத்து ஒடிந்து விட்டது’ என்றெல்லாம் குறை சொல்லி, ரெடியாக வந்திருக்கும் தன் வக்கீலுடன் நோட்டிஸ், அது, இது என்று மிரட்டிப் பார்த்தான். “ஐயாயிரம் டாலர்ஸ் எடு. இல்லாட்டி மவனே, கோர்ட், கேசுன்னு உன்னை அழிச்சிடுவேன், ஜாக்கிரதை!”.

எத்தனையே பேர் இதற்கு முன மோல்ஸ்கியிடம் அடி பணிந்திருந்தாலும் அன்று அந்த சைனாக்கார ஓனர் இந்த பெப்பேக்கெல்லாம் பயப்படுவதாக இல்லை. “கேஸ் போடறதுன்னா போடப்பு. சும்மா உதார் காட்டாத. பத்து பைசா தர்ரதாயில்ல. மொதல்ல எடத்தக் காலி பண்ணுடா சோமாறி”

*** *** ***

கேஸ் ஜூரிக்கு வந்தது.

வீல்சேரில் பரிதாப முகம் காட்டிய மோல்ஸ்கி தன்னால் சின்னச் சின்ன அசைவுகளைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை என்று நடிப்பைப் பிழிந்து கொட்டிக் கொண்டிருந்தான். ’பாகப் பிரிவினை’ சிவாஜி தோற்றார், போங்கள்! கண்ணாடி போட, தண்ணீர் குடிக்க என்று அடிப்படை உதவிகளுக்குக்கூட ஆள், படை, அம்பாரியுடன் ஒரு பெரிய பட்டாளம்.

பல ஜூரர்கள் அவன் நடிப்பில் கரைந்து காணாமலே போய்க் கொண்டிருந்தாலும் இவன் ஒரு வல்லாளகண்டன் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லாமல் போயிற்று. என் குருநாதர் சுஜாதா சொல்கிற மாதிரி, அவன் கண்களில் கயமை தெரிந்தது.

நஷ்ட ஈட்டுத்தொகையாக ஒரு 5000, இதுவரை அவன் அங்கே பட்ட உடல் கஷ்ட நிவர்த்திக்காக ஒரு 5000, அப்புறம் அவன் பட்டிருக்கின்ற மனவலிக்காக ஒரு 25,000 என்று மோல்ச்கி தரப்பு வக்கீல் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான். சைனீஸ் ஹோட்டல் மூடுவிழா தான் என்று மற்ற ஜூரர்கள் பேசிக்கொண்டார்கள்.

“சர்த்தான், பெர்ர்ர்ய ப்ளானோட ஒரு குரூப்பாத்தான் திரியறானுவ போல இருக்கு” என்று எனக்குப்பட்டது. இருந்தாலும், சுற்றி இருக்கின்ற  எல்லோருடைய பச்சாதாபத்திலும் நனைந்து வழியும் ஒரு வீல்சேர் பேர்வழி மேல் அவ்வளவு சீக்கிரமாக அபாண்டமாக எதுவும் சோல்லிவிட முடியாதல்லவா? எக்குத்தப்பாக எதையாவது சொல்லி வைத்தால் எல்லோரும் நம் மேல் பாய்ந்து விழுந்து பிறாண்டி விட மாட்டார்களோ?

ஹோட்டல்காரருடைய சைனாக்கார வக்கீலும் கேஸை சொதப்பலாகவே நடத்திக் கொண்டிருந்தான். 25,000 டாலர்கள் கொடுத்து செட்டில் பண்ணிவிடலாம் என்கிற நினைப்பில் இருந்தான் போலிருக்கிறது. 10,000த்தில் முடியுமா என்று நூல் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற ஜூரர்களுக்கும் இது ஓகே, இன்னும் கொஞ்சம் கூட ‘மீட்டருக்கு மேலே’ போட்டுக் கொடுக்கலாம் என்றார்கள்.

“அன்னிக்கே அஞ்சாயிரம் குடித்திருந்தியானா உன்னிய அன்னிக்கே வுட்ருப்பேன்டி. பதில் கேசா போடற? இன்னிக்கி உனுகு இருக்குடி ஆப்பு, அம்பதாயிரமாச்சியும் கறக்காம உடறதில்லடி”

வீல்சேர் ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்’ என்று மனசுக்குள் பாடி சந்தோஷத்தில் குலுங்கியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ’த்ஸோ த்ஸோ’ என்று பதறினார்கள் சக ஜூரர்கள்.

“பயங்கர பகல் கொள்ளை இது” என்று நான் மனசுக்குள் குமுறினேன்.

கோர்ட் இடைவேளையில் சைனா வக்கீலைக் கூப்பிட்டேன்.

“அடேய் அபிஷ்டு, பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியார், டைகர் வரதாச்சாரியார், பூச்சி பயங்கராச்சாரியார் ரேஞ்சுக்கெல்லாம் உனக்கு கேஸ் நடத்தத் தெரியாதென்பது உன் சப்பை மூஞ்சியைப் பார்த்தாலேயே தெரிகிறது. அதற்காக நீ இவ்வளவு சோப்ளாங்கியாகவா கேஸ் நடத்துவது? அந்த வீல்சேரன் என்னடாவென்றால் ஆட்டோகிராஃப் ரேஞ்சுக்கு ஃபிலிம் காட்டுகிறான், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’ என்று சொல்லிச் சொல்லி ”அங்கே வலிச்சுதே, இங்கே குடைஞ்சுதே என்று சைக்கிள் ஓட்டுகிறான். இந்த மாயக்கண்ணாடியிலெல்லாம் நீயும் மயங்கி மக்கு பிளாஸ்திரியாக நிற்கிறாய்.

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ ரேஞ்சுக்கு உன்னால் ஸ்நேகா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டே சிரித்து மயக்கத் தெரியாதென்றாலும், இந்த அநியாயத்தை யாராவது தட்டிக் கேட்க வேண்டாமா?

சைனா தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்.

சரி, நீயும்  போய் சோத்தைக் கொட்டிக்கொண்டு, அல்லது நூடுல்சை ஒரு மொக்கு மொக்கி விட்டு வா. நான் சில பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்கிறேன் உனக்காக”

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வாபாபேப்யோ மோக்‌ஷயிஷ்யாமி மாஷுச:

நான் எதற்காக பகவத் கீதையின் பதினெட்டாவது அத்தியாயம் அறுபத்தி ஆறாவது ஸ்லோகம் ரேஞ்சுக்கு- கீதையின் சாராம்ச ரேஞ்சில் -அவனுக்கு அபயம் அளிக்கிறேன் என்பது புரியாமல் அவனும் பேய் முழி முழித்து, தலையைச் சொறிந்தபடி வெளியே போனான்.

நான் ஏன் பிறந்தேன்?

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்கிருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுஎஸ்ஏ யுஎஸ்ஏ

என்றெல்லாம் நான் அவனுக்கு விளக்கம் சொல்வதாயில்லை.

*** *** ***

கைக்கடக்கமான என் ’பிட்’களைப் பார்த்த சைனா ஒரிஜினல் ஷகீலா பிட் பார்த்த சந்தோஷத்தில் இருநூறு டெசிபல் அதிகமாகவே எகிறி முழங்கினான்:

“மிஸ்டர் மோல்ஸ்கி, அன்று என் க்ளையண்ட்டின் சைனா உணவகத்தில் லஞ்ச் சாப்பிட வந்தீர்கள் இல்லையா?

“எங்கே சாப்பிட்டேன்?” மோல்ஸ்கி சிங்கம் போல் சீறினான்.

“சாப்பாடோ கேவலம். வாந்தி வந்தது. சக்கர நாற்காலியில் பாய்ந்து பாத்ரூம் ஓடினால், அய்யகோ, அங்கே என் சொல்வேன்? வாஷ் பேசின் எட்டவில்லை, தவித்த வாய்க்குத் தண்ணீர் குடிக்க முடியவில்லை, கம்மோடில் கால் வைக்க முடியவில்லை, கண்ணுக்கெட்டிய டிஷ்யூ கைக்கு எட்டவில்லை. கதவிடுக்கில் கை மாட்டி, கம்மோடில் கால் மாட்டி, சக்கர நாற்காலி சறுக்கி நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. என் எதிரிக்கும் இது நிகழலாகாது”

ஆஸ்கார் பெர்ஃபாமன்சில் மோல்ஸ்கி குலுங்கி அழுதான். மற்ற ஜூரர்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டபடி ”அட் லீஸ்ட் அம்பதாயிரம் குடுத்துடலாம்” என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

புழு, பட்டாம்பூச்சியிலிருந்து பிரதிவாதி பயங்கர வக்கீலாய் உருவெடுத்துக் கொண்டிருந்த சைனா வக்கீல் என்னைப் பார்த்துக் கண்ணடித்தபடி,

“நல்ல நடிப்பு நண்பரே!. ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை தடவை லஞ்ச் சாப்பிடுவீர்கள், மோல்ஸ்கி?” என்று கேட்டான்.

”இதென்ன முட்டாள்தனமான கேள்வி?” மோல்ஸ்கி சீறினான். ஜட்ஜைப் பார்த்து “இந்த அபத்தத்துக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமா, ஐயா?”

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்” என்றார் ஜட்ஜ். தன் செல்லத் தூக்கத்தை யார் கலைத்தாலும் அவருக்குக் கடுப்பு தாங்காது.

“எல்லோரையும் போல் ஒரு வேளை லஞ்ச், ஒரு வேளை டின்னர் தான்”

சீன வக்கீல் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தான்.

”இல்லையே, சம்பவம் நடந்த அதே தினத்தன்று நீங்கள் ஏழு இடங்களில் லஞ்ச் சாப்பிடச் சென்று, மற்ற ஆறு இடங்கள் மேலும் கேஸ் போட்டு, முப்பதாயிரம் டாலர்களுக்கு செட்டில் செய்திருப்பது உண்மையா இல்லையா?”

“ஜட்ஜய்யா, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” மோல்ஸ்கி பிளிறினான்.

“ஷட் அப்” என்றார் ஜட்ஜய்யா.

“அது மட்டுமல்ல, கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் 400-க்கு மேற்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர ஏரியா கடைகளில், ஹோட்டல்களில், பார்களில், திரை அரங்குகளில் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் அடாவடியாக வசூலித்திருக்கின்ற மொத்தத் தொகை 1 மில்லியன் இருநூற்றி முப்பத்தை ஐந்தாயிரம் டாலர்கள். உண்மையா இல்லையா?”

“அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்” –மோல்ஸ்கியின் வக்கீல் அலறினான்.

“ஆல் ஆஃப் யூ ஷட் அப்” சீறினார் ஜட்ஜ்.

“உண்மையாகவே நலிவுற்றிருப்பவர்களின் நலன் கருதி நாட்டிலே ஒரு நல்ல  சட்டம் போட்டால் அதை வைத்து மோல்ஸ்கி போன்ற கயவர்கள் இப்படிக் கொள்ளை அடிப்பது அசிங்கம், அவமானம், அதிகபட்ச அபராதத்திற்கும் உரியது. மோல்ஸ்கியுடன் சேர்ந்து வக்கீல்கள் உட்பட ஒரு குண்டர் குழாமே இப்படி ஆட்டம் போட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.

இதை உடனே தடுத்து நிறுத்துவது இந்தக் கோர்ட்டாரின் தலையாய கடமையாகிறது. அதனால் இந்த மோல்ஸ்கி என்கிற வீல்சேர் வில்லனை உடனேயே, இக்கணமே, vexatious litigant என்று அறிவிக்கிறேன். அதாவது, இனிமேல் எந்த கோர்ட்டிலும் எந்தக் காலத்திலும் இந்த ஆள் எந்த கேஸ் போடவேண்டுமென்றாலும் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.

இந்த கேசை தள்ளுபடி செய்கிறேன்.

”அது மட்டுமல்ல” தூக்கம் கலைந்து ஜட்ஜுக்கு நன்றாக முழிப்பு வந்து விட்டது போலும் “இந்த மாதிரி வெத்து கேஸ்களை ஜோடனை செய்ய உதவிய வக்கீலாகிய உமக்கும் இதே கதி தான். இனிமேல் நீர் எந்த கேஸை எங்கே தாக்குதல் செய்வதானாலும் என்னிடம் பர்மிஷன் கேட்டு வரவேண்டும்”

“நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்து வழங்கப்படவேண்டும். உம்மை கலிஃபோர்னிய பார் கௌன்சிலில் இருந்தே நீக்கவும் இதனால் பரிந்துரை செய்யப்படுகிறது.

எல்லா ஜூரர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

உலகத்திலே, ஸ்பெக்ட்ரமாகட்டும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், லஞ்சத்தைக் களைய நினைப்பதாகட்டும்- வெறுமனே மனசுக்குள் நினைத்துக் கொண்டு மசாலா டீ சாப்பிட்டால் மட்டும் போதாது. தலைமை முதலில் பெருந்தூக்கம் கலைய வேண்டும், பயப்படாமல் துணிந்து செயல்படவேண்டும், சேலை நுனியில் ஒளிந்துகொள்வதை விடவேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காகக் குண்டர்களிடன் அடிபணிந்து கிடக்காமல் சிங் கம் போல் எழுந்து செயல்படவேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம். பயங்கர வீக்கான 1-11 மைனாரிடியாக இருந்தாலும், மெஜாரிட்டிக்கு ஜால்ரா போடாமல்,. சரியான நேரத்தில் மிகச் சரியான பாயிண்டுகளோடு நீதியை நிலைநாட்ட உதவிய ஜூரர் நம்பர் 12 அவர்களுக்கு இந்த கோர்ட் தன் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறது!

நான் வெட்கத்தில் நாணிச் சிவந்தேன்!

டயரியின் அடுத்த பக்கம், “நல்ல நல்ல பொண்ணுங்களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!”

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on February 15, 2010

12 Comments

ஸ்ரீதர் நாராயணன்  on February 15th, 2010

//நான் வெட்கத்தில் நாணிச் சிவந்தேன்//

:)

செம காமெடியா எழுதியிருக்கீங்க. நல்ல சுவாரசியம். எத்தனை வழக்குல ஜூரரா இருந்திருக்கீங்க சாமீ? போறபோக்கைப் பாத்தா நீங்களே ஜட்ஜா ஆகி தீர்ப்புகூட சொல்லுவீங்கப் போலிருக்கே  )

இலவசக்கொத்தனார்  on February 15th, 2010

என்னங்க இது. போன முறை வாதி, பிரதிவாதிகளிடம் ஜூரர் பேசியதாகச் சொன்னீர்கள். இப்பொழுது ஜூரர் லாயருக்குப் பாயிண்ட் எடுத்துக் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாத மேட்டரா இருக்கே.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 15th, 2010

இலவசம்ஜி,

‘நடப்பது, நடந்தது, நடக்கக்கூடாதது, நடைமுறையில் நடக்கப்போவது, நடக்க இருப்பது அனைத்தும் அறிவோம்!’

பொறுமை அவசியம்!

ramboramji  on February 16th, 2010

:P

Interesting Ram.Excellent writing.. Vakkeel ungala thaniya gavanichara? 

Ramji  on February 16th, 2010

I presume the judges stopped wearing those silly wigs in USA.They still do here in Australia! Great story Ram, waiting for your next episode
Ramji

ஆயில்யன்  on February 16th, 2010

//பயமுறுத்தி காசு பறிப்பது மோல்ஸ்கியின் தொழில்!///

:)

டெக்னிகலா டெரரிசம் பண்ணியிருக்காரு போல 

//வீல்சேர் ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்’ என்று மனசுக்குள் பாடி சந்தோஷத்தில் குலுங்கியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ’த்ஸோ த்ஸோ’ என்று பதறினார்கள் சக ஜூரர்கள்.//

:)

 ))))))))))))))

//”இல்லையே, சம்பவம் நடந்த அதே தினத்தன்று நீங்கள் ஏழு இடங்களில் லஞ்ச் சாப்பிடச் சென்று, மற்ற ஆறு இடங்கள் மேலும் கேஸ் போட்டு, முப்பதாயிரம் டாலர்களுக்கு செட்டில் செய்திருப்பது உண்மையா இல்லையா?”//

தமிழ்சினிமா ரேஞ்சுக்கு ஜூரிக்கள் உன்னிப்பாக வாட்ச் பண்ண வைச்ச மேட்டரா இருந்திருக்கு!

பட் இப்ப ஜூரிக்கள் லாயருக்கு விசயம் போட்டுக்குடுக்கமுடியுமா?

பிரபுகுமார்  on February 18th, 2010

இதெல்லாம் கதை தானே! இல்ல நிஜமாலுமே உங்களுக்கு அனுபவம் ஏதும் உண்டா?

லலிதா ராம்  on February 19th, 2010

ராம்,

ரெண்டாவது பாதி காமெடியை விட, முதல் பாதி சீரியஸ் மேட்டர் ஏனோ என்னை அதிகம் கவர்ந்தது.

சென்னை சீஸனில் மிருதங்க வித்வான் ஈரோடு நாகராஞ் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பொதுவாக, கலைஞர்களைக் கண்டால் தூர விலகிவிடுவேன்.

அன்று ஏனோ நாகராஜிடன் இரண்டொரு வார்த்தைகள் பேசத் தோன்றியது. மேடைக்குச் சென்றதும்தான் தெரிந்தது, அவர் இறங்க உதவக் கூட ஆள் இல்லை என்று. எப்பவும் வரும் சிஷ்யன் அன்று வேறு இடத்தில் மாட்டிக் கொண்டிருந்தான்.

கைகளுக்கு உறை மாட்டி, படிகளில் தவழ்ந்து, வீல் சேரை விரித்து, மேடைக்குச் செல்வதில் இருந்த சங்கடங்களைப் பார்த்த போது, “இதுக்கு அப்புறம் எப்படி ஊர்சாகமா வாசிக்கிறார்?”, என்றே தோன்றியது.

ஒரு பிரபல சபா காரியதரிசியிடம் நாகராஜ் சொன்னாராம், “ஆயுசு முழுக்கவும்..எப்பக் கூப்பிட்டாலும் ஃப்ரீயா வாசிச்சுத் தரேன். தயவு செஞ்சு ஒரு ramp கட்டிக் கொடுங்க.”, என்று.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 19th, 2010

லலிதா ராம்,

Americans with Disabilities Act மாதிரி இந்தியாவில் ஏதும் இல்லையா என்பது தெரியவில்லை.

சட்டத்தை விடவும், இந்த மாதிரி ‘ராம்ப்’ சௌகரியங்கள், வசதிகள் ம்யூசிக் அகாடெமி, சினிமா தியேட்டர்களில், மிக மிக அவசியம் அல்லவா? இதெல்லாம் சொல்லியா தெரியவேண்டும்? அகாடெமி செக்ரட்டரியிடம் கண்டிப்பாக இது பற்றிப் பேசுகிறேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 19th, 2010

பிரபுகுமார், ஸ்ரீதர், ஆயில்யன், ராம்ஜி, ராம்போ,

’டயரி’ பற்றிய முக்கியக் குறிப்பு அடுத்த பக்கத்தில், விரைவில்!

லலிதா ராம்  on February 19th, 2010

எல்லேண்ணே,

அகாடமியில் டி.டி.வாசிவுக்கு முடியாமல் போன போது ரேம்ப் கட்டினார்கள்.

அந்த மாதிரி மற்ற சபா காரியதிரிசிகளுக்கும்….:-)

Srinivas  on March 4th, 2010

LARam
I guess this is a fiction based on Jarek Molski case. When I was called for Jury Duty in New Jersey, I remember seeing a line – ‘Donot discuss the case with anyone outside the court and donot strike conversation with anyone associated with the case (legal counsel included). So it is practically improbable to give leads to the counsel.
Anyhow good flow of writing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *