ஒரு ஜூரியின் டயரி -3

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்!

அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே?

காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்?

மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம்.

*** *** ***

லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் சில வீடுகள். துருப்பிடித்த ஓட்டை உடைசல் கார்கள். அரதப்பழசான வெள்ளைக்கார குக்கிராமங்கள் உண்டு.

பாப்பாரப்பட்டி, அலுமினியக் குவளை, டீக்கடை பெஞ்ச், லஞ்ச போலீஸ், அழுக்கு ஜமக்காளம், ஆலமரத்தடி- எல்லாமே அமெரிக்காவிலும் உண்டு. என்ன வித்தியாசமென்றால் எல்லாவற்றையும் கொஞ்சம் ஸ்டைலாக ஆங்கிலத்திலே செய்வார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அமெரிக்க குக்கிராமம் தான் இந்த க்ரைம் ஸ்பாட்.

ஷிஃப்ட் போட்டுக்கொண்டு ஆங்காங்கே ஆங்கிலத்தில் ஊளையிட்டுக் களைத்த சொறிநாய்கள் கூட போரடித்துப்போய் உறங்கப் போய் விட்ட ஓர் இரவு நேரம். கனத்த பனி. பின்ஜாமத்துக் குறட்டை ஒலிகளையும், மனித விஸர்ஜன சப்த ஜாலங்களையும் மீறி ஒலிக்கிறது பீட்டர் என்கிற அந்த ஹிப்பி இளைஞனின் கோபக் குரல்:

“பாட்டி, இன்னும் தண்ணி அடிக்கணும். ரெண்டு மணிக்கு கடைய மூடிடுவான். துட்டு எடு. இல்லாட்டிக் கீசிடுவேன்”

’பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்கிற தொன்மையான தமிழ்ப் பழமொழி ஆங்கிலத்தில் ஒரு வயசாளியால் மொழிபெயர்க்கப்பட்டு ‘Listen to your Grandma’ ஆகியிருப்பது உங்களுக்குத் தெரியும். பாட்டி சொல் கேட்காதது மட்டுமல்ல பாட்டியையே ஒரு தட்டு தட்ட முனைந்தான் அந்தப் பேராகிராதகன்.

“அடச்சீ, கஸ்மாலம். கம்னு கெட. ஒரு முழு குவார்ட்டரை அதுக்குள்ளாரவா முழுங்கிட்ட? ஒரு ஸ்பூன் கூட என் கண்ல காட்டவே இல்லியே?” – இது தாக பாட்டியின் ஏக எரிச்சல்..

“குவார்ட்டர் பத்தல பாட்டி. இன்னும் ரெண்டு கட்டிங்காவது வோணும். துட்டு எடு. இல்லாட்டி உனுக்கு இன்னிக்கு சங்குதான் …”

“அடச்சீ, போடா பொறுக்கி. போய்த் தூங்குடா”

“முடியாது பாட்டி. துட்டு குடுக்காட்டி இந்த அண்டாவை உன் தலையிலே போடுவேன்” விஜயகாந்த் படங்களில் வரும் சின்னி ஜெயந்த் மாதிரியான அரை லூஸ் கேரக்டர் பீட்டர்- கோரைத் தலை, பாதி அவிழ்ந்து கிடக்கும் அரை டிராயருடன் குடி போதையில் பண்ணும் அலம்பலைப் பாசம் கொண்ட பாட்டியால்கூடத் தாங்க முடியவில்லை.

“பொறம்போக்கு நாய்ங்களா, எழுந்து வந்தாக்க, பாட்டி, பேரன் ரெண்டையுமே போட்டுத் தள்ளிடுவேன். தூங்க வுடுங்கடா” –இது பக்கத்து வீட்டு மோட்டார் ஹோம் தேவனின் அசரீரிக் குரல்.

“பாட்டியைக் கீசிட்டு அப்பால உனுக்குத் தாண்டா மோட்சம் குடுக்கப் போறேன். இன்னிக்கி நைட்டு நீயும் காலிடி. நாளைக்கு உனுக்கும் பாலு தான் மாமே. அல்லாருக்கும் சொல்லி அனுப்பிடு”

அமெரிக்காவில் அத்தனை பேரும் பில்லியனர் பில் கேட்ஸோ, மில்லியனர் செரினா வில்லியம்ஸோ இல்லை. அங்கே தற்சமயம் நடப்பதும் இந்தியாவில் நடக்கின்ற அதே கலி காலம் தான்.

வேலைவெட்டி இல்லாத தடித் தாண்டவராயனான பீட்டர் தண்ணியடிக்க துட்டு கேட்டு பாடாய்ப் படுத்துவதை எத்தனை நாள்தான் பாட்டியால் பொறுக்க முடியும்?

தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி போலீசுக்கு வழக்கம்போல் ஒரு போன் போட்டாள். பேரன் பேக்ரவுண்டில் சவுண்டு கொடுத்துக் கொண்டே பாத்திரங்களை உடைத்துச் சலம்பிக் கொண்டிருந்தான்.

அட! அடுத்த இரண்டாவது நிமிடமே, சிவப்பு, நீலச் சுழல் விளக்குகளுடன் அந்த ஓட்டை வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு போலீஸ் கார்.

*** *** ***

மிடுக்கான, விறைத்த நீல நிறச் சீருடையோடு அமெரிக்கன் போலீஸ் இடுப்புத் துப்பாக்கியை வருடியபடியே பந்தா காட்டுவது, ஓவர்கோட்டோடு மழையிலும் துப்போ துப்பென்று துப்பு துலக்குவது, Dirty Harry ஸ்டைலில் வில்லனைப் போட்டுப் புரட்டிப் புரட்டி கைமா பண்ணுவதெல்லாம் ஹாலிவுட் சினிமா படங்களில் மட்டும்தான்.

சாதாரணமாக அமெரிக்கப் போலீஸ் படு சோம்பேறி ரகம். Doughnut Shop, ஸ்டார்பக்சில் காஃபி, பார்க்கிங் டிக்கெட் கொடுப்பது, பல் நோண்டுவது என்றே முழுநேர வேலைகாலத்தை அவர்கள் தொப்பைக்கு சிரமமில்லாமல் கழித்து விடுவார்கள். எங்காவது ரத்தம், கொலை, இருபது பேர் காலி என்றால் தான் சீட்டிலிருந்து தம் பிருஷ்ட பாகத்தைக் கொஞ்சமாவது நகர்த்தி எழுந்து விசாரிக்க முனைவார்கள்.

இந்த மாதிரி லேட் நைட் லுச்சா தண்ணி கேஸ்களுக்கெல்லாம் “ஆகட்டும், பார்க்கலாம்” தான் எப்போதுமே ரெஸ்பான்சாக இருக்கும்.

ஆனால், இந்த வெத்துவேட்டு லேட் நைட் கேசுக்கு இவ்வளவு ஜரூராக, சுறுசுறுப்பாக ஒரு போலீஸ்காரி வந்திருப்பதிலிருந்தே அவள். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரியும். வீட்டு வாசலில் முதன்முதலாக போலீசைப் பார்த்த பாட்டிக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

”என் மஞ்சள் பூனையின் ஏழாவது குட்டியைக் காணவில்லை”, “போன வாரம் என் சைக்கிளில் யார் காற்றை இறக்கியது?”, ”ரம்மோடு சோடாவா அல்லது கோக்கா? எது பெட்டர்?” போன்ற பல அத்தியாவசிய காரணங்களுக்காகப் பாட்டியும் ஐம்பது வருடங்களாகப் பல நேரங்களில் போலீசைக் கூப்பிட்டிருக்கிறாள். இதுவரை ஒரு நாளும் போலீஸ் அவளைக் கண்டுகொண்டதாகச் சரித்திரம் இல்லை.

பாட்டி தன் சாளேஸ்வர கண்ணாடியைச் சரி செய்து கொண்டாள். “அடேடே இந்த போலீஸ் குட்டிக்கு எச்சுமிப் பாட்டியின் ஜாடை இருக்கிறதே?’ என்பது போல் பார்த்தாள்.

“ஏண்டி இவளே, நீ நம்ப வைத்துவோட மச்சினன் பொண்ணில்லையோ? படிப்பெல்லாம் முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்துட்டியா? நோக்குக் கல்யாணம் ஆயிடுத்துன்னாளே, குளிச்சுண்டிருக்கியோ?” என்ற ரேஞ்சில் குசலம் விசாரிக்க ஆரம்பித்த பாட்டியை ‘உஸ்’ஸென்று அடக்கினாள் க. க. க. தவறாத நம் போலீஸ்காரிகை மேரி.

ஒரு காலத்தில் தான் தூக்கி வளர்த்த மூக்கொழுகிப் பொடிசான குள்ள மேரியிடம் இப்படிப்பட்ட அஃபிஷியல் ரெஸ்பான்சைப் பாட்டி எதிர்பார்க்கவில்லை.

“அல்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பா’ன்’ங்கறது சரி தான். ராப்பேய் மாதிரி நீயும் உன் அசிங்க தொள தொளா யூனிஃபார்மும்” என்று பாட்டி முனகியதை மேரி கண்டுகொள்ளவில்லை. கஞ்சி போட்ட புது யூனிஃபார்மின் ஒவ்வொரு காலும் ஒவ்வோரு திசை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது அவளுக்கே தெரியும். ஏற்கனவே பேனா, பென்சில், ரெகுலர் பெல்ட், கன் பெல்ட், டேஸர் துப்பாக்கி, பிரம்புத்தடி, ரெகுலர் துப்பாக்கி, தோட்டாக்கள், மிளகுநெடித் துப்பாக்கி, டார்ச்லைட், தொப்பி, ஆபீஸ் போன், சொந்த போன், வாக்கி டாக்கி, கை விலங்கு, அதற்கான சாவி, ஸ்டேஷன் சாவிக்கொத்து, போலீஸ் மினி மேனுவல், கார் சாவிகள், டம்மி மெடல்கள், நிஜ மெடல்கள், வாட்ச், மோதிரம், வளையல்கள், கம்மல்கள் என்று அவள் ஒரு நடமாடும் நகைக்கிடங்குத் தீவிரவாதியாகத் திகழ்ந்ததில் இந்தக் கிழத்துக்குப் பொறாமை என்று நினைத்துக் கனைத்துக் கொண்டாள்.

“தரித்திர மூதிக் கெழமே, பீட்டர நீ சவுட்டினியா, அவன் உன்னிய சவுட்டினானா?”

பாட்டி இதற்கு பதில் சொல்லுமுன், “துட்டு தர மாட்டேன்ற? உன்னிய ஃபேன்ல தொங்கவிடாம இன்னிக்குத் தூங்கறதில்லடி பாட்டி” என்று கத்தியபடி அங்கே பேராண்டி பீட்டர் வாசலில் பிரசன்னமானான்.

பீட்டர் மேரியைப் பார்த்தான். மேரி பீட்டரைப் பார்த்தாள். வார்த்தைகள் என்ன பயனுமின்றி அங்கே பனிக்குளிரில் நமுத்துப் போய் விழுந்தன.

“ஏய் நீ மேரிக்குட்டியல்லோ? அர்த்தராத்ரியில இங்ஙண ஏது சம்சாரிக்கின்னு?”

“பீட்டர், நல்லா இருக்கியாடா? இன்னும் குடிச்சு கலாட்டா பண்றத நீ விடலியா?”

“யாயும் யாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப்பெயல்நீர் போல

அன்புடைநெஞ்சம் தாம்கலந்தனவே”

இப்படி ஒரு சீனை குறுந்தொகையில் க. தோன்றி ம. தோன்றுமுன்னரே நம் தமிழர்கள் காட்டி அசத்தி விட்டார்கள் அல்லவா? நீங்களும் இந்த ’இருவர்’ சீனை மனதில் பேக்ரவுண்ட் ம்யூசிக்குடன் ஓடவிடுங்கள். என்னதான் இன்று கச்சா முச்சாவென்று போலீஸ் சீருடை மாட்டியிருந்தாலும் மேரியும் பீட்டரும் ஒரு காலத்தில் ஒரே தெருவில் அம்மணக்கோலியாடிய நண்பர்கள் அல்லவோ?

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்

“ஒன் செகண்ட். உள்ளாற வா மேரி. இந்தக் கெழம் என்ன பண்ணிச்சுன்னு நா சொல்றன்”

செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்

“நீ ஒன்னியும் சொல்லவோணாம். ஏற்கனியே குடி நாத்தம் கொமட்டுது”

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா? நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்.

“பாவாடயத் தூக்கிப் புடிச்சிகினு நாம பாண்டி, பேந்தா ஆடினத நீ மறந்துகினியா செல்லம்?”

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை

இடையே இல்லாமல், துரும்பு இடையில் மேகலை நில்லாமல் நழுவி விடும்படி தான் ஒரு காலத்தில் இளைப்பாக இருந்ததை பீட்டர் பாட்டால் சுட்டியதும் மேரி விம்மினாள், கமறினாள், தும்மினாள்.

இதுதான் சாக்கென்று வாசல் பக்கம் சாய்ந்து பீட்டர் ஒரே ஓட்டாமக ஓட எத்தனித்தான்.

துரும்பு இடை, கரும்பு வார்த்தை, செம்புலப்பெயல்நீராரின் குறுந்தொகைப் பாட்டு எல்லாமே பீலா என்று கொஞ்சம் லேட்டாக உணர்ந்த குண்டுக் குள்ள மேரி,

“ஓடாதடா, சுட்டுடுவன்” என்றலறினாள்.

“உனுக்கு ஒயுங்கா அம்மானை ஆடவே தெரியாது. நீ துப்பாக்கியால வேற சுடுவியா?” என்று இருட்டில் நக்கல் பண்ணினான் பீட்டர்.

என்ன செய்வது? இதுவோ நம் முதல் கேஸ் என்று கையைப் பிசைந்த மேரி, தன் போலீஸ் மினி மேனுவலை அவசரமாகப் படிக்க ஆரம்பித்தாள். இருட்டில் படிக்க முடியவில்லை. எதையெடுத்தாலும் ’மீதியை நெட்டில் பார்க்க’ என்று வேறு போட்டுத் தொலைத்திருக்கிறார்கள்.

பாட்டிக்கு ஏற்கனவே குள்ளமேரியிடம் இருந்த கடுப்பில், மேரியின் இடுப்பிலிருந்த கார் சாவிக்கொத்தைப் பிடுங்கி, இருட்டில் உத்தேசமாக பீட்டர் இருந்த திசையில் எறிந்து “ஓட்றா பீட்டரு. அவ போலீஸ் காரை எடுத்துட்டு ஓடிடு. இந்த குண்டம்மா இருட்டில தஸ்ஸு புஸ்ஸுன்னு நுரை தள்ளிக்கிட்டு ஓடியாற நாலு நாளாவும்”

‘Blood is thicker than liquor’ அல்லவா!

“ஐ லவ் யூ பாட்டி” இருட்டில் சாவி தேடிப் பீட்டர் துழாவலானான். குடி போதையில் நண்டு, நத்தையெல்லாம் கிடைத்ததே தவிர சாவிக்கொத்து கிடைத்தபாடில்லை.

தெலங்கானா மாதிரி நிலைமை அதிவேகமாகக் கட்டுங்கடங்காமல் போவதை உணர்ந்த மேரி பானா சீனா தானா வாய்க்கு வந்த வாக்குறுதியெல்லாம் தந்தது போல், “வோணாம்டா பீட்டரு. என் கண்ணில்ல. உன்னிய கண்ணாலம் கட்டிக்கிறண்டா, வேற எவனயாச்சியும் கட்டிக்கிட்டா மூத்த புள்ளக்கி ஒம் பேர வெக்கறாண்டா” என்று பினாத்தினாள்.

பாட்டி படாரென்று கதவைச் சாத்தி வாசல் லைட்டையும் அணைத்து விட்டு, உள்ளேயிருந்து. “கஸ்மால நாயே, எம்பேரனையா அரெஸ்ட் பண்ணப் பாக்கற? நாங்கள்லாம் யாருன்னு நெனச்சடி குள்ள சிறுக்கி? அவங்க தாத்தா எத்தனி ஜெயில்ல தப்பிச்சுப் போயிருக்காரு, தெரியுமா?” என்று தொடர்ந்தாள்.

அப்போது தான் பீட்டர் சுடப்பட்டு இறந்தான்.

கும்மிருட்டில் டேஸர் கன் எது, நிஜமான கன் எது என்று தெரியாமல், மேரி தொளதொளா யூனிஃபாரத்தில் கைவளை மாட்டிக்கொண்டு தடுமாறி, அவசர ஆத்திரத்தில் டேஸரால் சுட்டு பீட்டரை தற்காலிகமாகச்  செயலிழக்க வைக்கலாமென்று நினைத்து உத்தேசமாக இருட்டில் சுட, அந்த நிஜ தோட்டா பீட்டரின் உயிரை வாங்கியது.

பீட்டரின் பாட்டி போலீஸ் மேல் கேஸ் போட, போலீஸ் டேஸர் கன் கம்பெனி மேல் கேஸ் போட, நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன் ஜூரி பெஞ்சில்.

*** *** ***

‘நிஜ துப்பாக்கி மாதிரியே டேஸர் துப்பாக்கி இருந்ததால்தான் மேரி டேஸரென்று நினைத்து பீட்டரைச் சுட்டாள் என்பது போலீஸ் வாதம். அதற்கும் ஒரு படி மேலே போய் டேஸர் கம்பெனி தான் நஷ்ட ஈடு தரவேண்டுமென்பதும் அவர்களின் நிலைப்பாடு.

’இந்தக் கேஸே அபத்தம். டேஸர் கம்பெனி மேல் எந்தத் தப்பும் இல்லை’ என்கிற முடிவு எங்கள் ஜூரியின் ஏகோபித்த முடிவு.

ஆனால் ’மேரி மேல் எந்த டிபார்ட்மெண்டல் ஆக்‌ஷனும் போலீஸ் எடுக்காதது தவறு’ என்ற விஷயத்தில் 11 ஜூரர்கள் எனக்கு எதிர்தரப்பில்.

”போலீஸ்காரி மேரி சமயோசிதமாகச் செயல்படவில்லை. அவள் ஒரு மகா முட்டாள். போலீஸ் வேலைக்கே அவள் லாயக்கில்லை” என்றேன் நான்.

“எங்கள் ஊர் சாமிகள் எக்கச்சக்கமான ஆயுதங்கள் வைத்திருப்பார்கள். சங்கு, சக்கரம், அம்பு, வில், வாள் என்று உடம்பு முழுவதுமே போர் தளவாடங்கள். எங்கள் அம்பாள் கூட ’தனுர்பாணான் பாசம் ஸ்ருணிமபி ததானா கரதலை:’ வில், அம்பு, பாசக் கயிறு எல்லாம் வைத்திருப்பவள். ஆசைவடிவான பாசம் இடது மேல்கையில், கோபமாகிய அங்குசம் வலது மேல்கையில், மனமாகிய கரும்புவில் இடது கீழ்க்கையில், ஐந்து தன்மாத்திரைகளாகிய பாணங்கள் வலது கீழ்க்கையில். எந்த நேரத்தில் எதை எடுத்து எதை மறைத்து எப்படிப் பிரயோகிக்கவேண்டும் என்பது ஆயுதம் ஏந்தியவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய பாலபாடம்.

மேரி அதிலே பூஜ்யம். முன்னால் அணியவேண்டிய டேஸரைப் பின்னால் அணிந்து, பின்னால் அணிய வேண்டிய நிஜத் துப்பாக்கியை முன்னால் அணிந்து, ’முன் அணி எது, பின் அணி எது?’ என்ற குழப்பத்தில் அவள் சொதப்பி விட்டாள். இந்தக் குற்றமே இந்த பின்னணியால் தான். அதை விட மிக முக்கியம் அவள் தன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பீட்டரைத் தேட முயலாதது. ஏகப்பட்ட சமாச்சாரங்களுடன் டார்ச் லைட்டையும் இடுப்பில் வைத்திருந்தது அவளுக்கு நினைவே இல்லை.

ஒரே நேரத்திலே எங்கள் ஊர் சாப்பாட்டுத் தட்டில் பூரி, கிழங்கு, சாம்பார், ரசம், இட்லி, தோசை, மிளகாய்ப்பொடி, நெய், எண்ணெய், மசால் வடை, மெதுவடை, பாயசம், பஜ்ஜி, சொஜ்ஜி என்று எக்கச்சக்கமான ஐட்டங்கள் இருந்தாலும் நாங்கள் எந்த நேரத்தில் எதை, எதற்கு முன்னால் எதை, எதற்குப் பின்னால் எதை, என்றெல்லாம் ஒரு வரைமுறை வைத்து வளைத்துக் கட்டுவோம். உதாரணமாக, முதலில் பருப்பு சாதம், நெய் …”

பதினோரு ஜூரர்களும் இரு கைகளையும் தூக்கி “அய்யோ வேண்டாம், பிரிஞ்சிட்சிங்ணா, விட்ருங்ணா” என்று என் வழிக்கே வந்தனர்.

லாஸ் வேகாஸ் போகும் வழியில் மேரி இப்போது ஆப்பக்கடையோ, காக்காய் பிரியாணிக் கடையோ வைத்திருக்கிறாள் என்று கேள்வி. கடையின் நடுநாயகமாக பீட்டரின் படம் அலங்காரங்களுக்கு நடுவே இருக்கிறதாம்.

டயரியின் அடுத்த பக்கம், “அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on January 29, 2010 | Filed Under தொடர்கள்நினைவலைகள்

11 Comments

Alex_Pandian  on January 30th, 2010

தல. கலக்கல். தொடரவும்.

ஜக்குபாய் படத்தில் எத்தனை நிமிடங்கள் திரையில் வருகிறீர்கள் ?

Alex Pandian

RAMA  on January 31st, 2010

Your imagination is truely running wild!! What a story!!Where can I get your books in Sydney?
One word only to summarise your talent:
Brilliant!

ramboramji  on January 31st, 2010

saringnna.. appuram ‘verdict’ enna aachunu sollave illiyae.. Mary sorry ketuducha?

Rama  on February 1st, 2010

துரும்பு இடை, கரும்பு வார்த்தை, செம்புலப்பெயல்நீராரின் குறுந்தொகைப் பாட்டு எல்லாமே பீலா என்று கொஞ்சம் லேட்டாக உணர்ந்த குண்டுக் குள்ள மேரி,

“ஓடாதடா, சுட்டுடுவன்” என்றலறினாள்
Honestly, where did you get this gem?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 1st, 2010

அலெக்ஸ்,

இப்பொழுது தான் இயக்குனரிடம் பேசினேன். படம் நெட்டில் வந்த கலாட்டாவிற்குப் பிறகு ரீ-ஷூட், ரீ-எடிட் என்று பண்ணி 2 மணி நேரத்திற்குள்ளாகப் பண்ணியிருப்பதாகவும், இண்டஸ்ட்ரியில் ‘டாக்’ நன்றாக இருப்பதாகவும் சொன்னார்.

முதன் முதலாக ஸ்ரேயாவை நான் டான்ஸ் கிளப்பில் சரத்துக்கும், கவுண்டமணிக்கும் அறிமுகம் செய்து வைக்கும் காட்சியில், தண்ணியடித்து, டான்ஸ் ஆடி மயங்கி விழுந்த ஸ்ரேயாவைப் பதறி ஓடிக் கிட்டே சென்று நாங்கள் பார்க்கும் வகையில் அமைந்தது. உடனே அந்தப் பெண்ணைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நான் பாடிக்கொண்டே நடந்து போவதாக ஒரு காட்சி அமைக்க நான் சொன்ன சஜெஷன் இயக்குனர் காதில் விழவே இல்லை.

ஹூம்ம்ம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 1st, 2010

சிட்னி ராமாஜி,

சிட்னியின் இருக்கும் என் கஸின் பாலா சேதுராம் மூலம் ஏற்பாடு செய்கிறேன். நன்றி.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 1st, 2010

ராமா,

‘இருவர்’ படம் பார்த்தீர்களா? அந்த ‘நறுமுகையே’ பாட்டு வைரமுத்துவால் கொஞ்சம் மாறுதல்களுடன் பிரமாதமாக வந்திருந்ததே!

நான் இங்கே போட்டிருப்பது ஒரிஜினல்!

அப்போதே இந்தப் பாட்டை வைத்து ஒரு கலாட்டா கானா ’ராயர் காஃபி கிளப்’பில் எழுதியிருந்தேன். தேடி எடுத்துப் போடுகிறேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on February 1st, 2010

ராம்போஜி,

நேரில் பார்க்கும்போது மேல் விபரங்கள் சொல்கிறேன்!

butterfly Surya  on February 3rd, 2010

கலக்கல் நடை. தூள்..

லலிதா ராம்  on February 11th, 2010

அடுத்த அப்டேட் எப்போ நைனா?

NIZAMUDEEN  on April 15th, 2010

சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது,
சம்பவம் ஒரிஜினலா, உடான்சா என்று!
இருப்பினும் நல்ல விறுவிறுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *