எனக்குத் தெரியாத கீதை! 3
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
முதலில் 10 கேள்வி – பதில்கள்.
(1) உடற்பயிற்சி பண்றதையும் யோகான்னுதான சொல்றாங்க, அப்ப அது வேற, இந்த ஞான, பக்தி, கர்ம யோகம் வேறயா?
யோகா, யோகம், யோகா டீச்சர் எல்லாமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ள விஷயங்கள் தான். அனுஷ்காவைக் கொஞ்சம் விட்டுவிட்டு பாக்கி இரண்டையும் நெருங்கிப் பார்ப்போம்.
உடற்பயிற்சி யோகா என்பது பதஞ்சலி மகரிஷியின் ஹடயோகத்தில் வருவது. அவர் எழுதிய ‘ஹடயோகப் ப்ரதீபிகா’வில் முறைப்படி ஆசனங்கள், பிராணாயாமங்கள் செய்வது பற்றி சொல்லித் தரப்படுகிறது. கீதையில் சொல்லப்படும் ‘யோகம்’ என்கிற வார்த்தைக்கும் ஹடயோகத்தில் சொல்லப்படும் ‘யோகா’ உடற்பயிற்சி முறைகளுக்கும் ஒரே வேர்ச்சொல்தான் ‘யோக்’. இதிலிருந்து தான் யோகி, யோகன், அயோக்யன் எல்லாமே வந்திருக்கிறது.
‘யோகா’ என்றால் ஒன்றாவது. ஒன்றிச் செய்வது.
(2) எதுவும் எதுவும் ஒன்றாவது? சரியா புரியலையே? கிருஷ்ணர் எக்ஸர்சைஸ் பற்றி எதுவும் சொன்னதா தெரியலையே?
உடலும் மனமும் ஒன்றிச்செய்வதே யோகா. மனம் என்பது சூஷ்மமான ஒன்றாக இருந்தாலும்- அதாவது தொட்டுப்பார்த்து அறிந்து கொள்ளமுடியாத ஒன்றாக இருந்தாலும், பலவீனமான ஒன்று போல் தோன்றினாலும், உடலைவிட அது பல மடங்கு சக்தி வாய்ந்தது. முதலில் உடம்பை திடகாத்திரமாக வைத்துக்கொள்வது, பிறகு மனசும் உடம்பும் ஒரே நோக்கத்தில் ஒரே புள்ளியில் லயிப்பது, அந்த லயித்த குவிப்புள்ளியில் தியானம் செய்வது, குண்டலினி சக்தியை எழும்பச் செய்வது- இது பற்றியெல்லாம் கீதையில் கிருஷ்ணர் சொல்வார். யோகசூத்திர முறைகள் பற்றியும் கிருஷ்ணர் சொல்வார். அதற்கு நான் கேரண்டி!
பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் இந்த குண்டலினி தியானமுறைக்கு உதவுகின்றன. ஹடயோகம், பிராணாயாமம் எல்லாமே நாம் செல்லவேண்டிய பாதையில் நடுநடுவே வரும் ஒவ்வொரு ஊர்களே.
(3) எதற்காக இப்படி வரையறுக்கிறீர்கள்? நேரடியாக எனக்கு குண்டலினி யோகம், சந்நியாசம், மோட்சம் கிடைக்காதா?
இது ஒரு வழிமுறை தானேதவிர, இது மட்டுமே வழிமுறை என்று சொல்லவில்லை. பூர்வஜென்ம கர்மபலன் இருந்தால் உங்களுக்கு நல்லதொரு குரு கிடைத்தால், நீங்கள் மோட்சநிலை அல்லது சமாதி நிலைக்குத் தயாரானவர் என்று அவர் நினைத்தால், அவர் உங்களுக்குத் தீட்சை தரமுடியும். எழுத்தாள நண்பர் பாலகுமாரன் போன்ற பல அதிர்ஷ்டசாலிகளுக்கு இது நிகழ்ந்திருக்கிறது.
(4) தீட்சை என்பதாவது?
ஒருவகை சந்நியாசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மொட்டை அடித்துக் காவியும் உருத்திராட்சமும் அணிந்து சாமியாராக இருப்பது மட்டுமே சந்நியாசம் இல்லை. உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உன்னதமான ஒரு பரிபூரண ஆனந்த நிலைக்குச் செல்வதும் கூட சந்நியாசியம் தான். நம்மைப் போன்ற சராசரி குடும்பஸ்தர்களுக்கே அதுவே சிறந்த ஒன்றும்கூட.
(5) அதற்காக நான் இமயமலையில் போய் மூக்கைப் பிடித்துக்கொண்டு தினமும் தியானம் பயிலவேண்டுமா?
இறை அருளும், குரு அருளும் உங்களுக்கு இருந்தால் குருவானவர் உங்களுக்கு நயன, ஸ்பரிஸ, மானஸ தீட்சை முறைகளில் ஏதாவது ஒன்றை வழங்க முடியும். எந்த சிஷ்யனுக்கு எது சரிப்பட்டு வரும் என்பது குருவின் முடிவு மட்டுமே.
(6) இதற்கும் ஏதாவது ‘ஷார்ட் கட்’ உண்டா?
கிடையவே கிடையாது. ‘ஷார்ட் கட்’ முறைகள் உடலுக்கு மிகுந்த ஆபத்தானவை மட்டுமல்ல, உயிரையே போக்கவல்லன. ரிஷிகேஷில் கற்றுத் தேர்ந்த ஸ்வாமி யோகானந்தா என்ற ஒரு சந்நியாசியுடன் இது பற்றிக் கேட்டேன். முதலில் உடலையும் உள்ளத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவே இந்த யோகா எக்ஸர்சைஸ், பிராணாயாமம் எல்லாம் மிக மிக அவசியம் என்றார்.
(7) எனக்கு எல்லாவற்றிலும் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடறமாதிரி. இதிலும் நான் ரிஸ்க் எடுத்துப்பார்த்தால் என்ன ஆகும்?
உலக வாழ்க்கையில் ஏகப்பட்ட ஆசை, நிராசைகள், கோபதாபங்களுடன், காம, க்ரோதங்களுடன் உழலும் நாம் ஒரு 25 வாட் பல்ப் என்று வைத்துக் கொள்வோம். நயன, ஸ்பரிஸ, மானஸ தீட்சை முறைகளில் ஏதோவொன்றின்மூலம் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி நாம் பெறப்போவது 25,000 வோல்ட் ’ஷாக்’ தரவல்ல கரெண்ட். சரியான breakers, fuse அல்லது fail-safe mechanism இல்லாமல் 25 வாட் பல்பில் 25,000 வோல்ட் மின்சக்தியைப் பாய்ச்சினால் அந்த பல்ப் என்ன ஆகும்? சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும் அல்லவா? அதாவது நமக்கு சித்தப்பிரமை ஏற்பட்டுப் பைத்தியமாக அல்லது தீரா நோயாளியாக ஆகிவிடும் வாய்ப்பு அதிகம் அல்லவா? அப்படி ஏதும் ஆகிவிடாமல் பாதுகாப்பாக, முறைப்படி படிப்படியாக அந்த beatific நிலைக்குச் செல்வதற்காகவே இந்த ஹடயோகம், பிராணாயாமம் போன்ற வழிமுறைகள் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
8. இதையெல்லாம் நம்பவேண்டும் என்று நினைத்தாலும் மனசு மறுக்கிறதே? ‘ஐஸ் கட்டியைத் தொட்டால் ஜிலீர் என்றிருக்கும், நெருப்பைத் தொட்டால் சுடும்’ என்பது போன்ற சிம்பிளான உதாரணங்கள் மூலம் இதை விளக்க முடியுமா?
முதலில் நம் மனித உடலின் வரையறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு எறும்பு தன் உடல் எடையைவிடப் பலமடங்கு பளுவைத் தூக்கவல்லது. நம்மால் அது முடியாது. நம் கண்களில் லிமிடேஷன் http://www.sciencecore.columbia.edu/demo/web/etextbook/6266.html ஆந்தைகள் இருட்டில் பார்க்கவல்லவை மட்டுமல்ல, இரையிடமிருந்து வரும் சப்த நுண்ணலைகளை வைத்து, அவற்றினூடே இருக்கும் வித்தியாசத்தை 0.00003 செகண்ட்களில் கணித்து மிகத் துல்லியமாக இரை இருக்கும் இடத்தைக் கணிக்க வல்லவை. ஒரு பல்லியால் விட்டத்தில் தலைகீழாக வேகமாக ஓடமுடிகிறது. எவ்வளவு தொங்கினாலும் நம்மால் இதெல்லாம் முடியாது. பிரபஞ்சத்திலுள்ள பல கோடிக்கணக்கான புத்திசாலி உயிர்களின் நடுவே நாமும் ஒரு சாதாரண உயிர்தான் என்கிற அடிப்படை அறிவு நமக்கு மிக முக்கியம்.
“எனக்குத் தெரியவில்லை” என்று எப்போது ஒப்புக்கொள்கிறீர்களோ, அந்தக் கணத்திலேயே உங்கள் உள்ளே அறிவுச் சுடர் பற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கற்கக் கற்க, இது இன்னமும் பிரகாசமாகிறது. அஞ்ஞானம் என்கிற உலக மாயையான இருட்டு ஓடிப்போகிறது.
எப்போதும் நமக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதும், ஒன்றில் லயிக்காமல் இன்னொன்றில் அடிக்கடி தாவுவதும் மனக் குரங்கின் குணாம்சம். நம் எல்லோருக்குமே இது இருக்கிறது. மனதை அதன் போக்கிலேயே விட்டு அதை ஓரிடத்தில் கட்டிப்போட்டு தியானத்தில் லயிக்கச்செய்வது கடினமான, ஆனால் கைவரக்கூடிய ஒன்று தான். நம் உடலே ஆண்டவன் குடியிருக்கும் ஒரு கோவில்தான் என்பதும், நம் உடலின் சூஷ்ம அம்சங்கள் பற்றியும் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பலவித பிராணாயாம மூச்சுப் பயிற்சிகளின் மூலம் உடலின் ‘சக்கரங்களை’ நாம் அனுபவித்துப் பார்க்க முடிகிறது. இந்த தியானமுறைகள் எல்லா வர்ணத்தாருக்கும், எல்லா ஜாதியினருக்கும் பொதுவானவையே.
9. சக்கரங்கள் என்றால virtual centers, சரிதானே?
ஆமாம். சரியான ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகளின் மூலம் நம் கவனத்தை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரம், அநாஹதம், விசுத்தி, ஆஞ்யை போன்ற சக்கரங்களில் நிறுத்தி பல ரகசியங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
10. கீதையோடு சேர்ந்து படிக்கத்தக்க சில புத்தகங்கள்?
ஹடயோகம் பற்றிய பதஞ்சலியின் புத்தகம், லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி போன்ற பொக்கிஷங்களை கீதையுடன் சேர்த்துப் படித்தால் நம் உடம்பு, தியானம், நம் வாழ்வியல் பற்றிய ஒரு பரிபூரண ஆரம்ப அறிவு ஏற்படுகிறது.
*** *** ***

அந்த காலத்து போர்முறைகள் சரியான வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்டவை. பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், நலிவுற்றவர்கள், வயதானவர்கள்- இவர்கள் யாருக்குமே இடைஞ்சல் இல்லாமல், ஊருக்கு வெளியே ஒரு மைதானத்தில்தான் போர்கள் நிகழும். இவை கொரில்லா போர்முறைகள் போல கோழைத்தனமானவை அல்ல எனப்தை நினைவில் நிறுத்துங்கள். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே போர் நிகழ்ந்தது. ‘அம்பையர்’ மாதிரி ஒருவர் சங்கு ஊதி போரை ஆரம்பிப்பார், அவரே சாயங்காலத்தில் மறுபடியும் அதே சங்கை ஊதி அன்றைய போரை முடித்தும் வைப்பார். குருக்ஷேத்திரப்போர் 18 நாட்கள் நிகழ்ந்ததாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் ஸ்லோகத்திலேயே த்ருதராஷ்டிரன் ஏதோ பொடி வைத்துக் கேட்கிறான் என்றோமே, அது என்ன?
’த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என்றுதானே அவன் ஆரம்பிக்கிறான்? அதாவது ’தர்மங்கள் தழைத்தோங்கும் சிறப்புமிக்க இந்த ஊரான குருக்ஷேத்திரத்தில்’ என்கிறான். அங்கேயே அவனுடைய மனத் தடுமாற்றம் தெரிகிறது. ஆசாரமான இந்த இடத்தில் -குருக்ஷேத்திரத்தில்- இப்படி ஒரு அநியாயம் பண்ணுகிறோமே என்று அவனுடைய மனச்சாட்சியே அவனைக் குத்திக் குடைகிறது!
‘மாமகா பாண்டவாஸ்சைவ’- ‘மாமகா’ என்று தன் பிள்ளைகளையும், ‘பாண்டவாஸ்சைவ’ என்று தன் சகோதரனான பாண்டுவின் பிள்ளைகளையும் எப்படி பிரித்துப் பேசுகிறான் பாருங்கள். இவன் நினைத்திருந்தால், ஏதேனும் உண்மையான முயற்சி எடுத்திருந்தால் இந்த பாரதப் போரே நடக்காமல் நிறுத்தியிருக்க முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இப்போது ஒருவித குற்ற உணர்வோடு ‘ரன்னிங் காமெண்டரி’ கேட்டுக் கொண்டிருக்கிறான்!

இரண்டாவது ஸ்லோகத்திலிருந்து ஸஞ்சயன் தொடர்கிறான்:
ஸஞ்ஜய உவாச:
த்ருஷ்ட்வாது பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத் ||1-2||
’பாண்டவாநீகம் வ்யூடம் த்ருஷ்ட்வாது’ என்றால் பாண்டவ சேனையின் வியூகங்களைக் கண்டதும் என்பது நேரடிப் பொருள். ‘ஆசார்யமுபஸங்கம்ய’ என்றால் ஆசார்யரான துரோணர் அருகில் சென்று என்பது பொருள். அதே போல் ’ராஜா வசனமப்ரவீத்’ -’ராஜா’வாகிய துரியோதனன் (வெறும் வெற்று வசனங்களால்) ஏதோ சொல்ல ஆரம்பித்தான் என்பதையும் தெரிந்து கொள்கிறோம்
”அங்கே அணிவகுத்துநின்ற பாண்டவர் படையைப் பார்வையிட்டு கொஞ்சம் நடுக்கத்துடன் வருகிற துரியோதனன் தங்கள் ஆச்சாரியரான துரோணரிடம் சென்று இப்படிப்பட்ட ‘சொற்களால்’ சொல்ல ஆரம்பித்தான்.”
பாண்டவ சேனையைவிட துரியோதனசேனை மிகப் பெரியது. ஆனாலும் தன்னுடைய சேனைகளைப்போய் பார்வையிடாமல் துரியோதனன் எதற்காக பாண்டவர்களுடைய சிறிய சேனையை முதலில் கண்டுகொள்கிறான்? சரி, போர் என்று ஆகிவிட்ட பிறகு, எதற்கு நடுக்கம்? பாண்டவர்களுக்கும் தமக்கும் சேர்த்தே ஒன்றாகப் போர்முறைகள் கற்பித்தவரான துரோணாச்சாரியரிடம் போய் எதற்காக, சரியான வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் கொஞ்சம் உளறலுடம் சரியான பொருளில்லாத வெறும் சொற்களுடன் பேச ஆரம்பிக்கிறான்?
”தான் செய்துவருவது பெரிய தப்பு, அதர்மம், அநியாயம் என்பது அவனுக்கும் புரிந்திருந்ததனால் துரியோதனன், சின்ன சேனையாக இருந்தாலும் அழகாக, பல வியூகங்களாகக் குவித்து வைக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கின்ற பாண்டவ சேனையைப் பார்த்து மனதில் ஏற்பட்ட நடுக்கத்தால், குரு துரோணரை அடைந்து, ஒரு அரசனுக்குரிய பேச்சு லட்சணங்கள் இல்லாமல் வெற்றுச் சொற்களுடன் இப்படி பேசலானான்” என்பது பொருள்.
இந்த இடத்தில் ’சொல்லின் செல்வன்’ ஆஞ்சநேயனை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் ‘கண்டனென் சீதையை’ என்று ஆரம்பித்து அவன் ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் மறுபடியும் நினைவு கூறுவோம்.
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்
’கண்டனென்’ என்கிற ஒரே வார்த்தையில் நெற்றியடியாக “இதெல்லாம் ஒரு அனுமானம் அல்லது guess work இல்லை. இது visual proof என்பது தெளிவாகிறது. ‘கற்பினுக்கு அணியை’ என்றதில் “ஹே ராமா! மகாலட்சுமியைப் பற்றி கிஞ்சித்தும் உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். அவள் கற்புக்கரசி” புரிந்தது. ராமன் கலக்கத்தில் இருக்கிறானே என்று அனுமன் நினைத்திருப்பான் போலிருக்கிறது. மறுபடியும் “இதோ இந்த ரெண்டு கண்ணாலதான் பார்த்தேன்” என்று மறுபடியும் ஒரு ‘கண்களால்’ போடுகிறான். எங்கே பார்த்தான் என்பது ‘தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்’ என்பதில் லொகேஷனுடன் இன்னமும் தெளிவாகிறது.
பல பெரியவர்கள் இதற்குப் பலவிதமாகப் பொருள் சொல்லியிருக்கக்கூடும். என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இங்கே சில பல செய்திகள் சொல்லப்ப்டுகின்றன.
“நான் ஒன்றும் அங்கே போகாமல் சும்மா ஒரு தடவை ஊரை, வானத்தைச் சுற்றிவிட்டுத் திரும்பி விடவில்லை” என்பது ஒன்று. மற்றொன்று “எனக்குத் தெரியும் ஐயா, உங்கள் மனசு பேதலித்துக் கிடக்கிறது. மிகுந்த தடுமாற்றத்தில் இருக்கிறீர்கள். வரக்கூடாத சந்தேகங்கள் எல்லாம் வந்து தொலைக்கின்ற நேரம் இது. அதனால்தான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்” என்பதாக எனக்குப் படுகிறது. ஒருபடி மேலேபோய் ‘ ‘அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும் பண்டு உள துயரும்’ என்று சொல்லி “இனி உன் கவலையையும் சந்தேகத்தையும் மற” என்று ஒரே போடாகப் போடுகிறான். “கவலைய விடுங்க பிரதர்” ரேஞ்சுக்கு ஆஞ்சநேயன் இங்கே சிநேக பாவத்துடன் சொல்கிறான்.
அடேயப்பா! எத்தனை வார்த்தை ஜாலம், எவ்வளவு செம்மையான பொருள்! அதனால்தான் அவன் ‘சொல்லின் செல்வன்’!
ஒரு வானர சிற்றரசனின் அமைச்சனான அநுமனே இப்படி படு புத்திசாலித்தனமாகப் பேசவல்லவன் என்றால், சக்ரவர்த்தி துரியோதன மகாராஜா இன்னும் எவ்வளவு சாதுரியத்துடன் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்? துரியோதனன் அப்படிப் பேசுகிறானோ என்றால் வியாஸர் ‘இல்லை’ என்றே பொருள்கொள்ள வைக்கிறார்.
நம் உடம்பே ஒரு குருக்ஷேத்திரம் என்பதும், நமக்குள்ளேயே பல நல்ல குணங்களும், சில தீய குணங்களும் அருகருகே இருப்பதும், தீய காரியங்களைச் செய்ய முற்படும்போது, மனச்சாட்சி நம்மை இடித்துரைப்பதும், நமக்கு உடலில் நடுக்கம், வார்த்தைகளில் குளறல், Lie Detector மெஷினில் Fail ஆவதையுமே இங்கே குறிப்பால் உணர்ந்து கொள்கிறோம். கிருஷ்ணர் இருக்கும் இடத்தில், அதாவது, தர்மம், நியாயம் இருக்குமிடத்தில் இப்படிப்பட்ட மிரட்சி இருப்பதில்லை, பதற்றம் இல்லை, குரல் நடுக்கம் இல்லை. அங்கே ’சேனை’ சிறியதாக இருந்தாலும், அதாவது வருமானம், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் போன்ற வெளிக்காட்சிப் பொருட்கள் பிரம்மாண்டமாக ’ஷோ’வாக இல்லாவிட்டாலும் தர்ம, நியாயம் இருப்பதால் யாருக்கும் பயமில்லாத இந்த ஸ்திரமான நிலை என்பதும் மேற்கொண்டு புரிகிறது.
“தப்பு செய்தவன் திருந்தியாகணும், தவறு செய்தவன் வருந்தியாகணும்” என்று பட்டுக்கோட்டையார் சினிமா பாட்டில் பாடிவைத்ததுபோல், ராஜா துரியோதனனுடைய மனச்சாட்சி அவனை இங்கே இடறுவதால் உடலில் ஒருவித நடுக்கம், வார்த்தைகளில் பதற்றம். பதற்றத்தின் விளைவாகவே அர்த்தமில்லாத வெறும் சொற்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
ராஜா வெறும் பொம்மைதான். ராஜா சொல்வது பொருளில்லாத வெறும் வசனம், வாதப் பிதற்றல் என்றால் மூலக்கதை, திரைக்கதை, இயக்கம் செய்தது யார்? அவர்கள் அங்கேயே தான் ராஜாவுக்கருகேயேதான் இருக்கிறார்களா அல்லது வேறெங்காவது வெளிநாட்டிலும் இருந்துகொண்டு ரிமோட்டில் ராஜாவை இயக்கி வைக்கிறார்களா? குருக்ஷேத்திரத்தில் ராஜாவை சிக்கவைத்து அதையும் வேடிக்கை பார்க்கிறார்களா?
போகப்போகத்தானே கதை புரியும்!
‘பகவத் கீதை’யைப் பொறுத்தவரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே கண்ணன்தான். அவனே அதில் ஒரு முக்கியமான வேடத்திலும் நடிக்கிறான். ராஜாவை அவன் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கப்போகிறான், தான் வசமாக சிக்கியது மட்டுமல்லாமல் ராஜா யாரையெல்லாம் காட்டிக் கொடுக்கப் போகிறார், ராஜாவுக்கு என்ன ஆகப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்படி என்னதான் அர்த்தமில்லாமல் உளற ஆரம்பிக்கிறான் துரியோதனன்?
மேலே பார்ப்போம்!
(தொடர்வோம்)
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on October 17, 2011
4 Comments
Samudra on October 17th, 2011
நல்ல விளக்கம்.
நடராஜன் வெங்கிடசுப்பிரமணியன் on October 18th, 2011
நன்றாக இருந்தது.
சஞ்சயனுக்கு இருந்த இடத்திலிருந்தே யுத்தம் தெரியும் படிச் செய்தவர் பகவான் தானே? அதையே அவர் ஏன் திருதுராஷ்டனுக்கு செய்யவில்லை. எனி காரணம்?
cellosekar on November 6th, 2011
wonderful Ram sir.
chilledbeers on March 14th, 2012
அருமை…அருமை…ஏன் தொடரவில்லை.தயவு செய்து மேலும் எழுதவும்.