எனக்குத் தெரியாத கீதை! 1

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அனைத்து இந்திய மொழிகள் தவிரவும் உலகம் முழுவதும் பல முக்கிய மொழிகளில் (லத்தீன், ஃப்ரஞ்ச், ஜெர்மன், சைனீஸ், இத்தாலியன்) மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய பல அறிஞர்களாலும் அலசி ஆராயப்படும், ஆராதிக்கப்படும் பகவத் கீதையைப் பற்றி, பாரதத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்துவாகிய எனக்கு ஒன்றுமே சரியாகத் தெரியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குப் பல நாட்களாக இருந்து வந்தது.

பகவத் கீதை என்றால் என்ன என்று தெரியும். ஒரு சில ஸ்லோகங்கள் தெரியும். ஆனால் அதை ஆழமாகப் படித்ததில்லை.

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் ஒரு பாட்டு இப்படி வரும்:

’பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா’

இதில் முதலடியான ‘பகவத்கீதா கிஞ்சிததீதா’யின் கிஞ்சிததீதா என்பது ‘கிஞ்சித் + அதீதா’ என்று பிரிகிறது. அதீதா- இது வேர்ச்சொல். அதாவது படிப்பதிலிருந்து வருவது அத்யயனம், அத்யாயி, அத்யார்த்தி, அத்யாபனம் போன்ற சொற்கள்.

‘கிஞ்சித்’ என்பது ‘கொஞ்சமேனும், ஒரு சின்னத் துளியேனும்’ என்று பொருள் கொள்கிறது.

முழு ஸ்லோகமும் என்ன சொல்கிறது?

“கொஞ்சமாவது பகவத்கீதையைப் படித்திருந்தாலும், ஒரு துளியேனும் கங்கை நீரை அருந்தி இருந்தாலும், ஒரே ஒரு கணமேனும் நாராயணனை நினைத்திருந்தாலும், அப்படிப்பட்டவன், இறக்கும் தருவாயில் எமனுடன் சர்ச்சை செய்ய வேண்டுவதில்லை”

அதாவது, அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களிடம் கடைசி காலத்தில்கூட எமன் வாலாட்டுவதில்லை.

கொஞ்சம் படித்தாலும் புண்ணியம்தான். ஆனால் முழு பகவத் கீதையையும் யாரும் கலி காலத்தில் நெட்டுருப் போட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்பது தெரிந்துதான் ஆதி சங்கரர் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும்.

ஆதி சங்கரரை கொஞ்ச நேரத்துக்கு அங்கேயே விட்டுவிடுவோம். மீண்டும் பகவத் கீதைக்கே திரும்புவோம்.

சரி, இந்த பகவத் கீதை என்பதுதான் என்ன? ஒரு அத்தியாயமா? பல அத்தியாயங்களா? எது மெயின் கதை? என்றெல்லாம் குழப்பம் வருகிறதல்லவா? நானும் அப்படிக் குழம்பினவன்தான். கொஞ்சம் சீரியசாக பல புத்தகங்களை எடுத்துப் படித்ததில், பல உபன்யாசங்களைக் கேட்டதில் நான் புரிந்து கொண்டவற்றை அல்லது புரிந்துகொண்டேன் என்று நம்பும் சில விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகர இருக்கிறேன்.

வேத வியாசரின் மகா இதிகாசமான மகாபாரதத்தில் தான் இந்த பகவத் கீதை வருகிறது.

சற்றேறக்குறைய 5000 வருடங்களுக்கு முன்பு, கி.மு. 3137 ல் குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

(3 வருடங்கள் முன்பு நான் பத்ரிநாத் சென்றிருந்தபோது அங்கிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள மானா என்கிற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். இதுதான் இந்திய-சீன எல்லையின் கடைசி இந்திய கிராமம். இப்போது வேறெங்குமே தென்படாத சரஸ்வதி நதி தென்படுவது அந்த ஓரிடத்தில் மட்டுமே. அலாகானந்தா நதியும், சரஸ்வதியும் இந்த கிராமத்தருகே கலக்கின்றன. அங்கே வியாசர் குகை, கணேஷ் குகை எல்லாவற்றையும் பார்த்தேன்.)

மகாபாரதம் மொத்தம் 18 பர்வங்களைக் கொண்டது. இதில் ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வத்தில் பகவத் கீதை வருகிறது.  குருக்ஷேத்திரப் போரின் தொடக்கத்தில் இந்த (அக்கப்)போர் தேவைதானா என அர்ஜுனனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வருகிறது. அதுவும் எங்கே? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், போர் ஆரம்பிக்கும் நிலையில், பாண்டவ சேனைகளும், கௌரவ சேனைகளையும் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக்கொள்ளத் தயாராக நிற்கும் நிலையில் அர்ஜுனனுக்கு இந்தப் பொல்லாத சந்தேகம் வருகிறது.

தன் தேரோட்டியான பகவான் கண்ணனிடம் அவன் தன் தயக்கத்தைச் சொல்கிறான். அதற்குக் கண்ணன் பதிலளிப்பதாக பகவத் கீதை 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் 3 பாகங்கள், ஒவ்வொரு பாகத்திலும் 6 உட்பிரிவுகள்.

மேலே செல்வோமா?

(தொடர்வோம்)

பி.கு: என் வாசக அன்பர்களில் பலரும் என்னைவிட மிகவும் படித்தவர்கள், கற்றுத் தேர்ந்த விஷயஞானிகள். ஆங்காங்கே எனக்கும் அவர்கள் தெளிவுபடுத்தி இதை மேல்நடத்திச் செல்லவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on October 6, 2011

6 Comments

Alex_Pandian  on October 6th, 2011

நல்ல நாளில் நல்ல துவக்கம் ! தொடர்ந்து எழுதவும், தெரிந்து கொள்வோம் அனைவரும் – வாரம் இருமுறை பதிந்தால் நன்று !

அலெக்ஸ் பாண்டியன்

Arun Nishore  on October 7th, 2011

நல்ல துவக்கம் தொடர்ந்து எழுதுங்கள்.

நடராஜன் வெங்கிடசுப்பிரமணியன்  on October 7th, 2011

தூள்! உங்களுக்குத் தெரியாத கீதை மட்டுமில்லை எங்களுக்குத் தெரியாத கீதையையும் சொல்லித்தரவும்.

அப்புறம் அவ்வப்போது பேசிப்பழகிக் கொள்ளவும். இங்கே வரும்போது சொற்பொழியலாம். இல்லையென்றால் பதிவு செய்து podcastஆக போடலாம்.

அடுத்த முறை வரும்போது அமெரிக்க புகழ் கீதை ஆச்சாரியார் என்று ஆர்ச் வைக்கிறேன் (செலவு உங்களுடையது தான்.)

:-)

ok on a serious note எனக்கு நிறைய ட்வுட் எல்லாம் வரும். நிறைய கேள்வி கேட்பேன்.  )

சுதாகர்  on October 7th, 2011

பகவத் கீதை மட்டுமே இந்து மதம், அது ஒரு சாராருக்கே உரித்தானது என்பது போன்ற தோற்றம் காட்டப்படுவதால், பகவத் கீதை பற்றிய புத்தகங்கள் நிறைய வாங்கியும் படிக்க விரும்பாமல் வைத்திருக்கிறேன். எந்த பக்கமும் சாயாமல் , முலாம் பூசாமல் நீங்களாவது எழுதுங்கள். நான் ஒரு சராசரி தமிழன். எனக்கும் புரியும்படி எழுதினால் மிக்க மகிழ்ச்சி.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்  on October 10th, 2011

வாழ்த்துகள், எதிர்பார்ப்புகளுக்கு நன்றி!

சுதாகர் கேட்டிருப்பது மிக முக்கியமான கேள்வி. 2ம் அத்தியாயத்தில் பதில் தருவேன்.

பாரதி மணி  on October 21st, 2011

ராம்: எனக்கு எல்லாம் தெரிந்தமாதிரி என்னிடம் அபிப்ராயம் கேட்கிறீர்களே!

கட்டுரையின் முதல் பாரா எனக்கும் அட்சரசுத்தமாகப்பொருந்தும். நாமொன்றும் எம்பாரோ பாலகிருஷ்ண சாஸ்திரிகளோ இல்லை. ஆனால் பலதை மேலோட்டமாக படித்திருக்கிறோம்…. கேட்டிருக்கிறோம்.

பயமே வேண்டாம்..படிக்க காத்திருக்கிறோம்.

பாரதி மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *