கலக்கல் கபாலி – 1

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

‘எட்டாம் நம்பர் கடை’யை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? பார்த்திருப்பீர்கள். என்னது, பார்த்த ஞாபகம் இல்லையா? அட, இதான வேணாங்கறது, சும்மா மறந்து போன மாதிரி நடிக்காதிங்கப்பா. சம்மர் வெகேஷனில் சென்னையின் 100+ வெயில் தாங்க முடியாமல், குட்டி மச்சானையோ, பக்கத்து வீட்டு அழகுப் பெண்ணின் தம்பியையோ ஓடிப்போய் ரகசியமாக ஒரு உற்சாக பானம் வாங்கி வரச் சொல்லுவீர்களே, அதே இடம் தான். (“சேகரு, ‘கிங்ஃபிஷர்’ ஐஸ்கோல்டா இருக்கணும்டா. பாத்துக்க. இல்லாட்டி கல்யாணி 5000. மீதி ரூபாய நீயே வெச்சுக்க. ஆமா, உங்க அக்கா இன்னிக்குக் காலையில ஏண்டா…?”)

அவ்வப்போது அது சுத்த பத்தமாக மஞ்சள் மாலை போட்டுப் பெரிய சைஸில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு ‘கஜலச்சுமி ஒயின்ஸ்’, ‘பெரியாண்டவர் லிக்கர் ஷாப்’  என்றெல்லாம் இரவோடிரவாகப் புது நாமகரணம் சூட்டிக் கொள்ளுமே தவிர, அடிப்படையில் ஆதார விசுவாசிகளுக்கு அது இன்னமும் ‘எட்டாம் நம்பர் கடை’ தான். ஆல்கஹால் மட்டும் தான் இங்கே கலங்கிய தண்ணியாக ஓடுமென்பதில்லை. அரசியல்,

நாட்டு நடப்பு, சினிமா, அம்மா, அய்யா, அத்தனை விவகாரங்களின் அசல் வியாபார சொரூபங்களும் இங்கே அலசப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். ‘இங்கே அரசியல் பேசக்கூடாது’ என்று ஒரு போர்டு தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி மாதிரி பவரே இல்லாமல் காற்றில் ஆடியபடி சணல் கயிற்றில் கழுத்து மாட்டி அல்லாடுமே, அந்த இடம் தான். 

ஓஹோ! இந்த மாதிரிப் பொது இடங்களில் நிற்கவே உங்களுக்குப் பிடிக்காதா? காரில் இருந்தபடியே கடைக்கு ஆளனுப்பிக் கமுக்கமாக கருப்பு பிளாஸ்டிக் பையில் நீங்கள் மால் வாங்கிச் செல்லலாமே? அரை நிஜார்ப் பையன் அண்டர்ஸ்டாண்டிங்கோடு சர்வீஸ் செய்வானே. கணக்கு வழக்கில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.

‘அட,  ஆல்கஹால் வாடையே எனக்கு அலர்ஜியப்பா, ஆளை விடு’ என்கிறீர்களா? சரி தான். உங்களை மாதிரி சுத்த பத்தமான ஆத்மாக்களுக்காகவே அங்கே ஜிஞ்சர், ரோஸ் மில்க், கோலி சோடா, சிம்ரன் புகழ் அருண் ஐஸ் க்ர்ர்ர்ர்ர்ரீம் எல்லாவற்றுடனும் பக்கத்திலேயே நாயர் டீக்கடை உண்டே? வாழைப் பழத் தோரணங்களுடன், கலர் கலர் மிட்டாய்கள், பத்திரிகைகள் (‘இங்கே ஓசியில் படிக்கக்கூடாது’), பான் பராக்,

சிகரெட்டுகள், கை முறுக்கு, வர்க்கி, விபூதிப் பட்டை போட்ட பாய்லரில் எந்நேரமும் சாயா… ஐயப்பன் நாயர் பயங்கர பிசியானாலும் காரியத்தில் குறி தான்.

‘மெய்லாப்பூர் கபாலி’, அரைபிளேடு பக்கிரி, பீட்டரு, முன்சாமி, பொலவர் ஆதிமந்தி  போன்ற மெய்யடியார்கள் ஏற்கனவே ஆஜர் ஆகியிருக்கிறார்களே.

வாங்க, கடைக்குப் போவம். வீட்டுக்கு வந்ததும் குளிச்சுடலாம் !

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on December 29, 2003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *